ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படமாக்கப்பட்ட விதம் குறித்த, ‘மேக்கிங் ஆஃப் 2.0’ வீடியோ இன்று (25/8/17) மாலை வெளியிடப்பட்டு உள்ளது. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘2.0’ படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து முழு படப்பிடிப்பும் முடித்துவிட்ட நிலையில், தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஏமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்தப்படம் மூலம் தமிழில் களம் இறங்குகிறார். இசை, ஏ.ஆர்.ரஹ்மான். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் இந்தப்படத்தை 15 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் படம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகிறது.
இந்தப்படம் தொடர்பான முக்கிய தகவலை வெளியிடுவதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர் தெரிவித்து இருந்தார். தற்போது இயக்குநர் சங்கர் வெளியிட்டு உள்ள இந்த வீடியோ, ஒரு நிமிடம் 46 வினாடிகள் ஓடுகிறது.
அதில், ரஜினி மற்றும் அக்ஷய்குமாருக்கு ரோபோ போன்ற ஒப்பனை செய்யப்படும் காட்சிகளும், அதற்கான டெம்பிளேட் உருவாக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. சண்டைக் காட்சிகள் எடுக்கப்படும் விதம், கிரீன்மேட் பின்னணியில் படமாக்கும் காட்சிகளும், கிராபிக்ஸ் பணிகள் நடந்து வரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இயக்குநர் சங்கர், ஏஆர் ரஹ்மான், அக்ஷய்குமார், லைகா நிறுவனத்தார் ஆகியோர், ‘மேக்கிங் ஆஃப் 2.0’ வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 2.0, அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.