Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எங்கே போயினர் கடவுளர்கள்?

வெறும் கண்களுக்குப்
புலனாகாத கொரோனா வைரஸ்,
நமக்கு எதைக் கற்றுக்
கொடுத்திருக்கிறதோ இல்லையோ…
யார் கடவுள்? எதுவெல்லாம்
கடவுள் தன்மை? என்பதை
நன்றாகவே அடையாளம்
காட்டியிருக்கிறது.
கொடுத்த விலை சற்றே
அதிகமெனினும்,
மானுட குலம் வாழும் வரை
நெஞ்சில் பதிய வைத்திருக்கிறது
இந்த வைரஸ்.

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்
அடிக்கடி சொல்வார்: இந்த
பூமியில் மனிதர்கள்
வாழ்வதற்கான சூழல் அருகி
வருகிறது. விரைவில்
சந்திரனிலோ, செவ்வாயிலோ
அல்லது வேறு கிரகங்களிலோ
மனிதர்கள் வாழும் சூழல்
குறித்து ஆய்வு நடத்த
வேண்டும் என்பார். அறிவியல்
முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், கொரோனா வைரஸ்
தோன்றிய இடமும் தெரியவில்லை;
பரவிய தடமும்
கண்டறியப்படவில்லை.
மே 8 வரை உலகம்
முழுவதும் 2.73 லட்சம்
பேரை பலி வாங்கியிருக்கிறது
கொரோனா.

 

நோய்த்தொற்றைத் தடுக்க
இதுவரை யாதொரு தடுப்பு
மருந்துகளும் கண்டுபிடித்திராத
நிலையில், வீடடங்கி இருத்தலே
ஆகச்சிறந்த தீர்வாகிப் போனதால்,
இரண்டு மாதங்களாக உலகமே
வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன.

 

கூடிக்களித்திடல் மட்டுமின்றி
கூடித்தொழுவதும் ஆகாது என்ற
எச்சரிக்கையால், உலகெங்கும்
அனைத்து மத ஆலயங்களும்
மூடிக்கிடக்கின்றன.
இந்துக் கோயில்களில்
முக்கால பூஜைகள் முடங்கின.
இராப்பத்து, பகல் பத்துக்கெல்லாம்
கோயில்களில் வேலையே
இல்லை.

ஹஜ் புனித யாத்திரைகள்
நிறுத்தப்பட்டன. மக்காவிலும்,
மதினாவிலும் மத குருக்கள்
மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டுத் தொழுகைக்கு
வழக்கம்போல் அழைப்பு மணி
எழுப்பப்படும். ஆனால் யாரும்
மசூதிக்குள் நுழைந்து விடக்கூடாது;
அவர்கள் வீடுகளிலேயே
அல்லாவை தொழுது
கொள்ளலாம். மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும்
ஈஸ்டர் விழா நாளன்று,
பிரார்த்தனைக்கு ஆள்களின்றி
எல்லா தேவாலயங்களும்
களையிழந்தன.

 

அழைத்தால் வருவார்கள்
என்று நம்பப்பட்ட கடவுளர்கள்
கொரோனா அச்சத்தில்
முடங்கினர். அழைத்தவுடன்
மருத்துவர்கள் வந்தார்கள்;
செவிலியர்கள் ஓடோடி வந்தனர்;
கால் கடுக்க காவல்துறையினர்
சாலைகளிலேயே தவம்
கிடந்தார்கள். கொரோனாவுக்கு
ஒருவரும் பலியாகி
விடக்கூடாது என்பதில்
இவர்கள் தங்களையே
அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

 

யாருக்குக் கொரோனா? யார் மூலம் பரவும் என்ற பிரக்ஞையேயின்றி தங்கள் நிலத்தில் விளைந்த பழங்களையும், காய்கறிகளையும் பல தடைகளையும் தாண்டி சந்தைக்குக் கொண்டு வந்தார்கள் விவசாயிகள். ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்பதை இந்த இக்கட்டான நிலையிலும்கூட மறந்தே போனோம். கத்தரிக்காய் டன்னுக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவழித்த உழவனுக்கு இப்போதும் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை என புலம்பினார் நானறிந்த விவசாயி ஒருவர். விளைவித்த விவசாயிக்கும் உரிய விலை கிடைக்கவில்லை; மக்களுக்கும் குறைந்த விலையில் விற்கப்படவில்லை; எனில், கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காயின் லாபம் யாருக்குப் போனது? இப்படியான விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், பசியாற்றிய விவசாயி கொரோனா காலத்திலும் கடவுளானார்கள்.

பாசத்தோடு பாய்ந்து ஓடோடி வரும் தன் குழந்தையைக்கூட வாஞ்சையோடு தொட்டுத் தூக்க முடியாமல் போகும்போது ஒரு தாயின் மனநிலை எப்படி துடித்திருக்கும்? அதையும் சகித்துக்கொண்ட ஆண், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தினர். அவர்கள் எல்லா காலத்திலும் வழிபாட்டுக்கு உரியவர்களாகிப் போனார்கள்.

 

”சார்… ஊரடங்கால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு மொபைல் போன் மூலமாக ஆலோசனைகள் வழங்க முடியுமா?” என்று சில மருத்துவர்களை கேட்டோம். அவர்கள் ஒரு நொடி கூட யோசிக்காமல் சம்மதம் தெரிவித்தனர். அவர்களின் மொபைல் எண்களைப் பெற்று, மக்களிடம் கொண்டு சேர்த்தோம். அவர்கள் எல்லாருமே கடவுளின் தன்மை உடையவர்கள்தானே.

 

அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகராக இருக்கும் ஒருவர், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு என நாள்தோறும் சளைக்காமல் 1200 பேருக்கு உணவுப்பொட்டலங்களை தயாரித்து வழங்கினார். இதற்காக அவர் 3 லட்சம் ரூபாய் வரை தன் சொந்தப்பணத்தை செலவழித்திருக்கிறார். இன்னொருவர், நீளும் கரங்களை தேடித்தேடிச்சென்று காய்கறிகளை இலவசமாக வழங்கினார். இதற்காக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார். கல்லூரி முதல்வராக இருக்கும் நண்பர் ஒருவரோ தன் குழுவினருடன், குழந்தைகளைத் தேடித்தேடிச் சென்று புரோட்டீன், கால்சியம் உணவுகளை வழங்கினார். வித்தியாசமான சிந்தனையை முன்னெடுத்தார். இப்படியான தன்னார்வலர்கள் எல்லோருமே இப்பூவுலகை ரட்சிக்க வந்த மீட்பர்கள் என்று சொன்னாலும் மிகையாகா.

 

ஆஞ்சநேயருக்கு சதாசர்வ காலமும் வெண்ணெய் அலங்காரம் செய்து வந்த அர்ச்சகர் ஒருவர் சாரம் சரிந்து விழுந்து இறக்கிறார். ஆஞ்சநேயர் வாலைச் சுருட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார். வறண்டு போன வைகையில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி, அதில் பச்சைப்பட்டுடுத்தி பவனி வந்த அழகரை இறக்குவார்கள். அழகரையே, வறண்ட வைகை பெருக்கெடுத்து ஓடுவதாக நம்ப வைத்தவர்கள்தான் இந்த பக்திமான்கள். இந்த ஆண்டு அத்தகைய போலி வைபவமும் முடங்கியது.

ஈஸ்டர் திருநாளில் தேவாலயத்திற்குள் குண்டு வெடித்ததில் 129 பேர் உடல் சிதறி இறந்தார்கள். அப்போதும், உயிர்த்தெழுந்த கடவுள் குண்டு வைத்தவர்களை என்னவென்று கேட்கவில்லை. புனிதப்போர் என்ற பெயரிலான பயங்கரவாதத்தில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுக் கொண்டே இருந்தாலும் அல்லாவும் கண்டுகொள்வதில்லை.

 

இத்தகைய ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் கடவுள் கோட்பாடுகள் பொய்த்துப் போகின்றன; இந்நிகழ்வுகள் கடவுள் நம்பிக்கை, ஒருவித கற்பிதம் என்பது உலகுக்கு அப்பட்டமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

 

கடவுளை நம்புகிறவர்களால்தான் இன்னும் இந்த பூமியில் சாதிகளும், மதங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. கடவுள் இல்லை என்பவர்களால் ஒருபோதும் மோதல் வெடித்ததில்லை. காளியின் முன்பே சிறுமி நாசமாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். அவளை நாசப்படுத்தியவர்களும் கடவுள் நம்பிக்கையாளர்களே. எங்கும் கடவுள் வியாபித்திருக்கிறார் எனில், ஏன் குற்றங்கள் குறைவதே இல்லை? கசையடி கொடுப்பது புனித நூலின் விதி என்றால், குற்றம் செய்யும் மனநிலையை ஏன் கடவுள் உருவாக்கிட வேண்டும்? குற்றத்தில் ஈடுபடுவோர் சாத்தான்கள் என்று சொல்லி இன்னும் எத்தனை காலத்திற்கு அப்பாவிகளை நம்ப வைக்கப் போகிறீர்கள்?

நமக்காக வாழ்ந்து
உயிர் நீத்தவர்கள்தான்
கடவுளர்கள் என்கிறான்
கணியன் பூங்குன்றன்.
நிகழ்காலத்தில் யாரெல்லாம்
கடவுளர்கள் என்பதை
கற்றுக் கொடுத்திருக்கிறது
கொரோனா வைரஸ்.
மனத்தளவில் குற்றமின்றி,
அறத்தின் வழியில் நடப்பவரே
கடவுள் என்கிறான் வள்ளுவன்.
கடவுளர்களை காட்டிக்கொடுத்த
கொரோனாவுக்கு தடுப்பு
மருந்து கண்டுபிடிக்கப்
படாமலேயேகூட போகலாம்;
ஆனால் சாதிகளும்,
மதங்களும் ஒழிக்கப்படுவதற்கான
ஒரே தடுப்பு மருந்து
கடவுள்களை ஒழித்துக்
கட்டுவது மட்டுமே.

 

இப்படிச் சொல்வதினால்
என்னை கடவுள்
வெறுப்பாளனாகவோ, கடவுள்
மறுப்பாளனாகவோ கருதிட
வேண்டாம். எனக்கும்
கடவுள் நம்பிக்கை உண்டு.
நான் கடவுளர்களைக்
கண்டடைந்து விட்டேன்.
அவர்களுடன்தான்
நான் இப்போது தொடர்பில்
இருக்கிறேன்.

 

– பேனாக்காரன்

10.5.2020
04.15 மணி
வைகறை