Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

(நலமறிய ஆவல்)

பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள்.

மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர்.

கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது? காரணங்கள் என்ன? புற்றுநோயாக மாறுமா? உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்…

காரணங்கள்: ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்ரோன் ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் கட்டி வளரும் வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு, மரபணு குறைபாடுகள் காரணமாகவும் கட்டிகள் வளரலாம். எனினும், கர்ப்பப்பை கட்டிக்கான முழுமையான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

திரு பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 4 கிலோ எடையுள்ள கட்டி.

அறிகுறிகள்: மாதவிடாய் காலங்களில் அதிகமாக உதிரப்போக்கு இருத்தல், மாதவிடாய் நாட்கள் அதிகமாகுதல், மாதவிடாய் நாட்களுக்கு இடையில் உதிரப்போக்கு ஏற்படுதல், இடுப்பு பகுதியில் அதிக வலி அல்லது அழுத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி, ‘அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ (Ultrasound Scan) பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பொதுவாக, கர்ப்பப்பையில் கட்டி என்றாலே அது புற்றுநோய் கட்டியாக இருக்குமோ என்ற பயம் பெண்களிடம் பரவலாக உள்ளது. அத்தகைய பயம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டிகள், புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

கர்ப்பப்பை கட்டிகள் மூன்று வகைப்படும்.

சப்மியூகஸ் ஃபைப்ராய்டு (Submucous Fibroid): இந்த வகை கட்டிகள், கர்ப்பப்பையின் உள்ளே கரு எந்த இடத்தில் பதிந்து வளருமோ அங்கு வளரக்கூடியது. எண்டோமெட்ரியம் அடுக்குகளால் இந்த கட்டி மூடப்பட்டு இருக்கும். இவ்வகை கட்டிகளாலும் கருத்தரித்தலில் பிரச்னைகள் உருவாகும்.

இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்டு (Intramural Fibroid): இந்த வகை கட்டிகள், கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரக்கூடியது. கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் தோன்றக்கூடியது. கட்டியின் அளவு 5 செ.மீ.,க்கு மேல் வளர்ந்து இருந்தால் கருத்தரித்தலிலும் சிக்கல் ஏற்படும்.

சப்சீரோசல் ஃபைப்ராய்டு (Subserosal Fibroid): இவ்வகை கட்டிகள், கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது. இதனால் குழ ந்தை பிறப்புக்கு, பெரிய அளவில் பிரச்னை இல்லை.

பொதுவாகவே, பெண்களில் 50 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் வளர வாய்ப்புகள் இருக்கிறது. பல பெண்களுக்கு, கர்ப்பப்பையில் கட்டி இருப்பதே தெரியாது. கட்டி வளர வளர வயிறு தொப்பை போட்டு இருப்பதாகக் கருதி, அலட்சியமாக இருந்து விடுவார்கள்.

மருத்துவர் சரவணக்குமார்.

திருமணமாகி, இரண்டு குழந்தைகள் வரை பெற்றுவிட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டிகள் இருந்தால், அவர்கள் தாராளமாக கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். ஒரு குழந்தை மட்டுமோ அல்லது இல்லாமலோ, திருமணம் ஆகாமலோ உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் இருந்தால், கட்டிகளை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

கட்டிகளை லேப்ராஸ்கோப் உபகரணம் மூலம் சிறுதுளையிட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம். அல்லது, நவீன முறையான ‘வஜினல் ஹிஸ்ட்ராக்டமி’ (Vajinal Histerektomi) எனப்படும் பிறப்புறுப்பு வழியாக அறுவை சிகிச்சையின்றி கட்டிகளை அகற்றி விட முடியும். இந்த சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், உடனடியாக மருத்துவமனையில் இருந்து ‘டிஸ் சார்ஜ்’ ஆகலாம். அன்றாட வீட்டு வேலைகளை செய்யலாம்.

சேலம் போன்ற நகரங்களில் இந்த சிகிச்சைக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். சென்னை போன்ற நகரங்களில் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் செலவாகும். கர்ப்பப்பை கட்டிகள் அகற்றப்படாவிட்டால் ‘சார்கோமா கேன்சர்’ (Sarcoma Cancer) ஆக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

//நடுத்தர வயது பெண்கள் உஷார்!//

மணமாகி குழந்தையில்லாத பெண்கள் அல்லது ஒரு குழந்தை மட்டும் உள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும், மாதவிலக்கு நின்ற பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

30 முதல் 40 வயது வரையுள்ள பெண்களில் 30 சதவீதம் பேருக்கும், 40 முதல் 50 வயது வரையுள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாகலாம் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

தெளிவாக விளக்கம் அளித்தார் மருத்துவர் சரவணக்குமார்.

தொடர்புக்கு: 0427-2266889, 2266778, 78109 66889.

 

சந்திப்பு: இளையராஜா சுப்ரமணியம்.