Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெண்கள் உடைகளுக்கு மாடலிங் செய்யும் ஆண்கள்!; ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆண் குழந்தைகளுக்குக்கூட பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கும் உடைகளை அணிவித்து அழகு பார்ப்பது வழக்கம். காலில் கொலுசு, காதுகளில் கம்மல் குத்திவிடுவது வரை ஆண் குழந்தைகளையும் குறிப்பிட்ட வயது வரை பெண் குழந்தைகளாக பாவிக்கும் பெற்றோர்கள் இன்றும் உள்ளனர்.

ஓரளவு விவரம் தெரிந்ததும், பெண் குழந்தைகளின் உடைகளை அணிந்தால் வெட்கப்பட்டு ஓடும் ஆண் குழந்தைகளும் உண்டு. ஆனால், வெளிநாடுகளில் பல ஆடை விற்பனை நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் உத்தியோ, இந்தியா அதிலும் குறிப்பாக தமிழக கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றன.

ஆனால் அதில்தான் சின்ன மாற்றம். அவர்கள் பெண்கள் உடைகளை அணிவிப்பது ஆண் குழந்தைகளுக்கு அல்ல. மாறாக, வளர்ந்த ஆண்களுக்கு. நளினமான ஆண்கள் என்றெல்லாம் தேடிப்போவதில்லை. கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஆண்களாக இருந்தாலும், பெண்கள் உடைகளுக்கான ‘மாடல்கள்’ ஆக வேலைக்கு அமர்த்தி வருகின்றனர்.

சீனாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபாகூட இப்போது இந்த உத்தியைத்தான் பின்பற்றி வருகிறது.

ஏன் இப்படி ஓரு முடிவு என்று கேட்டதற்கு அந்த நிறுவனம் சொன்ன பதிலில் கொஞ்சமும் லாஜிக் இல்லை எனத் தெரிய வந்தது. ஆனாலும், அவர்கள் தரப்பில் சொல்லப்பட்ட பதில் இதுதான்: விளம்பரத்தில் காட்டப்படும் படங்களுக்கும் உண்மையான துணிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. விளம்பரத்தைப் பார்த்து வாங்கிவிட்டு, ஏமாற்றம் அடைகிறார்கள்.

அலி எக்ஸ்பிரஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தை நடத்திவரும் இளைஞர், மக்களின் நம்பிக்கையைப் பெற முடிவு செய்தார். மாடல்களால் அணியப்பட்ட ஆடைகளின் படங்களுக்குப் பதிலாக, தானே விதவிதமான ஆடைகளை அணிந்து படங்கள் எடுத்தார். அவற்றை இணையதளத்தில் வெளியிட்டார். 24 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

“ஒரு ஆண், பெண்கள் உடையை அணிவதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பயமாக இருந்தது. ஆனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய கடையில் இருக்கும் உடைகளையே அணிந்து படங்கள் எடுத்ததால், அதே உடைகளே அவர்கள் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தார்கள்.

ஒல்லியாக இருப்பதால் நானே ஒரு மாடலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘டிஸ்னி பிரின்சஸ்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். எனக்கும் வியாபாரம் பெருகிவிட்டது. வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்த பணத்துக்கு அவர்கள் விரும்பிய ஆடைகளைப் பெற முடிந்தது” என்கிறார் அலி எக்ஸ்பிரஸ் உரிமையாளர்.

சீனாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும்கூட இப்போது பெண்களின் அலுவலக உடைகள், இரவு நேர கேளிக்கைக்கையின்போது அணியும் உடைகள், விருந்துக்குச் செல்லும்போது அணியும் உடைகள், பாரம்பரிய உடைகள் மட்டுமின்றி உள்ளாடைகள் வரை எல்லாவற்றுக்கும் ஆண்களே மாடல்களாக தோன்றுவது பரவலாக அதிகரித்து வருகிறது.

வாடிக்கையாளரின் கவனத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே ஆடை நிறுவனங்கள் இவ்வாறு வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுத்திருப்பது தெரிய வருகிறது. அதற்குக் கைமேல் பலனும் கிடைப்பதுதான் ஆச்சர்யமானது.

நம்ம ஊர் நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதென்றால், ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ….?