Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக; நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

திரிபுரா மாநிலத்தில் நீடித்து வந்த கால் நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதன்படி, திரிபுராவில் கடந்த பிப்ரவரி 18ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் தலா 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 3, 2018) எண்ணப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது.

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக, சிபிஎம் கட்சின் மூத்தத் தலைவர் மாணிக் சர்க்கார் தொடர்ந்து 20 ஆண்டுகலாக அம்மாநிலத்தில் முதல்வராக இருந்து வருகிறார். நாகாலாந்து மாநிலத்தில், நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே வடகிழக்கு மாநிலங்களில் தேர்தலைக் குறிவைத்து பாஜக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் நடந்த தேர்தலில், திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது. மேகாலயாவில் மட்டும் தனித்துப் போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இன்று வெளியான தேர்தல் முடிவுகளும் அந்த கருத்துக்கணிப்பை கிட்டத்தட்ட உண்மை ஆக்கியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் 16 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தன. பாஜக கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றி அமோகமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

நாகாலாந்து மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு 29 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 29 இடங்களும் கிடைத்தன. சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சைகள் ஆதரவுடன் நாகா மக்கள் முன்னணி, ஆட்சி அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.  இந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்பிபி கட்சிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளன. பாஜக, 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேட்சைகள் மற்றும் இதர சிறு கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்து வந்தாலும், இந்த முறை அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ளது.