Monday, September 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

ரசிகனை கிறங்கடிக்கும் நெல்லுச் சோறும் நேத்து வெச்ச மீன் கொழம்பும்!

இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், நடிகர் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களும் துல்லியமான பங்களிப்பை வழங்கும்போது ஒரு சினிமா பாடல் முழுமையான வெற்றி பெற்று விடுகிறது. அப்படி சரியான கலவையில் அமைந்த பாடல்களுள் ஒன்றுதான், ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு… நெய் மணக்கும் கத்தரிக்கா…’ பாடலும்.

ரஜினியின் திரைப் பயண வரலாற்றை, ‘முள்ளும் மலரும் (1978)’ படத்தை ஒதுக்கி விட்டு, எழுதிவிட முடியாது. இயக்குநராக மகேந்திரனுக்கும் அதுதான் மைல் கல் படம்.

‘கெட்டப் பையன் சார் இந்தக் காளி…’ என்று ரணகளப்படுத்தி இருக்கும் ரஜினியின் நடிப்பைத் தாண்டி, இந்தப் படத்தில் சிலாகிக்க நிறைய அம்சங்கள் நிரம்ப இருக்கின்றன. கதை, நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட திரைக்கதை, பாத்திரப் படைப்புகளைக் கடந்து, இதன் பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரை ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

இசைஞானி இளையராஜா, இந்தப் படத்தை தோளில் சுமந்து சென்றிருப்பார். அவரை ஏன் இசை மேதை என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு படமே கூட போதுமானதுதான்.

இளையராஜாவின் தொடக்கக் காலங்களில் பாடல்களிலும், பின்னணி இசைக் கோவையிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டதோடு, அதில் அசாத்தியமான வெற்றியும் பெற்றார். எத்தனையோ மேற்கத்திய இசையையும், சிம்பொனியையும் கொடுத்தாலும் கூட, நாட்டுப்புற இசையை சினிமா மூலமாக வெகுசனமயமாக்கியது அவரன்றி வேறு ஒருவரும் இலர்.

‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும், ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு… நெய் மணக்கும் கத்தரிக்கா…’ பாடலை வாலிபக் கவிஞர் வாலி எழுதி இருப்பார்.

கவிஞர் வாலியும், பாடலைப் பாடிய வாணி ஜெயராமும் பக்கா வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். ஆனால், ஆச்சாரம் பார்க்காமல் மீன் குழம்பையும், உப்புக் கருவாடையும் சேர்த்து வைத்து ரசிகர்களுக்கு படையல் வைத்திருப்பார்கள்.

ஐம்பது ஆண்டிற்கு முந்தைய தமிழர்களின் உணவுப்பழக்கம் என்ன என்பதை, இந்தப் பாடல் வழியாக ஆவணப்படுத்தி விடுகிறார் வாலி. அப்போதெல்லாம் திருவிழா போன்ற பண்டிகைக் காலங்களில்தான் நெல்லுச் சோறு கிடைக்கும். மற்ற நாள்களில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானிய உணவுகள்தான். அதனால்தான் கவிஞர் வாலி, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு…’ என்று அரிசி சோறை பெருமைப்படுத்தி எழுதி இருப்பார்.

கல்யாண வீடுகளில் மணக்க மணக்க கத்தரிக்காய் சாம்பார் பரிமாறிய காலமும் இருந்தது. இன்றைக்கு சொல்லி வைத்தாற்போல் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு கலாச்சார விழாக்களின் விருந்துகளிலும் முருங்கைக்காய் மயம். குக்கிங் வீடியோ யூடியூப் சானல்களால் எல்லா விருந்துகளிலும் ஒரே கைப்பக்குவம். தனித்துவமான ருசி பாகம் என்பது நம் வீடுகளில் அம்மாக்களிடம் மட்டும்தான் இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

பாடல் காட்சியின் ஊடாக ரஜினிக்கும், நாயகி ‘படாபட்’ ஜெயலட்சுமிக்கும் இடையே சில உரையாடல்கள் இடம் பெறும். அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பாடலின் மொத்த நீளம் 2:54 நிமிடம்தான்.

இந்தக் குறுகிய கால அளவுக்குள் கிடைத்த வாய்ப்பை வாணி ஜெயராம் கனகச்சிதமாக பயன்படுத்தி இருப்பார். நாயகனுக்கும் நாயகிக்கும் அன்றுதான் முதல் இரவு. ஊரடங்கிய நேரம்கெட்ட நேரம்.

நாயகி மங்காவோ (படாபட் ஜெயலட்சுமி) சரியான சோற்றுப்பானை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் காளி மற்றும் அவனின் தங்கை மீதான நேசமும், சாப்பாடும்தான். இப்படி வெள்ளந்தியான ஒருத்தி, முதல் இரவு அறைக்குள் நுழையும்போது கணவன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவனை எழுப்பியது போலும் இருக்க வேண்டும்; கூடலுக்குத் தான் தயாராக இருப்பதையும் சூசகமாக உணர்த்த வேண்டும். இத்தகைய சூழலுக்கு ஏற்ப பாடலை எழுதி இருப்பார் வாலி.

”நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதய்யா…”

என்ற கவிஞர் வாலி,

”பச்சரிசிச் சோறு ம்ம்…
உப்புக் கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு…”

என்று எந்த வாய்க்காலில் பிடித்த மீன் ருசியாக இருக்கும் என்பது வரை டீட்டெயிலாகச் சொன்ன வாலி,

”குருத்தான மொளைக்கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு
இப்போ எச்சி ஊறுது
அள்ளித் தின்ன ஆசை வந்து
என்னை மீறுது”

என்று குறும்புத் தனத்தையும் காட்டி இருப்பார். அவர் நிஜமாகவே குருத்தான முளைக்கீரையையும், வாடாத சிறு கீரையையும்தான் சொல்லி இருப்பார் என நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

தான் அறைக்குள் வருவதற்குள் அசதியில் அயர்ந்து தூக்கிக் கொண்டிருக்கும் கணவனை எழுப்பும் பொருட்டு கொஞ்சம் குரலை உசத்திப் பாடுகிறாள் மங்கா. அதற்கேற்ப வாணி ஜெயராம் கொஞ்சம் குரலை ஏற்றிப் பாடியிருப்பார்.

‘உப்புக் கருவாடு…’ ‘சேலு கெண்ட மீனு…’ (01:41 முதல் 01:45 நிமிடம் வரை) எனும்போது, வாணி ஜெயராம் அத்தனை நுணுக்கமாக ஒரு சங்கதியை நுழைத்திருப்பார். அதுதான், ‘கிளாசிக் டச்’. பாடுவது என்னவோ நாட்டுப்புறப் பாடல்தான். கிடைத்த வாய்ப்பிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருப்பார் வாணி ஜெயராம்.

ஒரு கட்டத்தில் அவர் ராஜாவின், தாளக்கட்டையும் மீறிப் பாடுகிறாரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு குரலால் வசியம் செய்து விடுகிறார். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நகர்ந்த பின்னரும் கூட, வாணியின் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்தளவுக்கு வாணி ஜெயராம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

கவிஞரும், பாடகரும் அவரவர் பங்கிற்குச் சிறப்பாக செய்திருக்கிறார்கள் எனும்போது, பாடலுக்கு மெட்டமைத்த ராஜா தன் முத்திரையைப் பதிக்காமல் விட்டுவிடுவாரா என்ன?

மிகச் சிக்கனமான தாள வாத்தியங்களைக் கொண்டு முழு பாடலையும் உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் ராஜா எப்போதும் பேரரசர்தான். அதன்படி, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு…’ பாடலில் கூட கடம், கட சிங்காரி, மோர்சிங் ஆகிய மூன்று வாத்தியங்களை மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தி இருப்பார்.

பாடலின் இறுதியில் மட்டும் டோலக் கருவியைப் பயன்படுத்தி, நிறைவு செய்திருப்பார் ராஜா. மொத்தமே நான்கு வாத்தியங்கள்தான். இதற்குள்ளாகவே அவர் காதல், காமம், உணவுப்பழக்கம், நையாண்டி உள்ளிட்ட எல்லா சமாச்சாரங்களையும் சொல்லி விடுகிறார்.

பாடலின் நிறைவுப் பகுதியில் வரும் டோலக், இந்தப் படத்தின் அடிநாதமாக ஆரம்பத்தில் இருந்தே ஒலித்துக் கொண்டிருக்கும். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் டோலக்கின் ராஜாங்கம். ஏன் அந்த கருவிக்கு அத்தனை முக்கியத்துவம் என்பதை படத்தை மீளவும் பார்த்தால் புரியும்.

இந்தப் பாடலில் இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான். ஒருவர் மங்கா; இன்னொருவர் காளி (ரஜினி). இந்தப் பாடல், சாப்பாட்டுப் பிரியையான ஒரு பெண்ணின் வெகுளித்தனமும், அவளுடைய உள்ளக் கிடக்கையையும் வெளிப்படுத்தும் சூழலுக்கானது. அதனால் படாபட் ஜெயலட்சுமியை நோக்கியே மொத்தப் பாடலும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

நெற்றியில் நாலணா அளவிலான வட்ட ஸ்டிக்கர் பொட்டு, மாட்டலுடன் கூடிய காதணி, கனகாம்பரமும் மல்லிகையும் சேர்த்துக் கட்டிய பூச்சரம், கைகள் நிறைய கண்ணாடி வளை, பார்வையாளர்களைக் கொன்று போடும் மை தீட்டிய மருண்ட விழிகள் என கிராமத்துப் புதுப்பெண்ணுக்கு பாந்தமாகப் பொருத்திப் போகிறார் மங்கா எனும் படாபட் ஜெயலட்சுமி.

‘பச்சரிசிச் சோறு… உப்புக்கருவாடு… சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு….’ என வாணி ஜெயராம்தான் சங்கதி போடுகிறாரா அல்லது இவரே பாடுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிற அளவுக்கு அத்தனை இயல்பான நடிப்பைக் கொடுத்திருப்பார். ‘நினைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…’ என்று பாடிவிட்டு, ஷ்ஷ்…. என சப்புக் கொட்டுவார். அப்போது ரசிகர்களுக்கும் எச்சில் ஊறச் செய்து விடுகிறார் (யார் மீது? எதன் மீது என்றெல்லாம் குறும்பாகக் கேட்கக்கூடாது).

‘பொட்டுக்கல்ல தேங்கா… போட்டு அரைச்ச துவையலு…’ என்ற வரிகளைப் பாடும்போது அம்மிக்குழவியை இழுத்து அரைப்பது போல் பாவனை காட்டுவார். அம்மிக் குழவியை அவர் பக்கம் இழுக்கையில், ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் படாபட்.

பாடலின் நிறைவுப் பகுதியில் மடியில் சாய்ந்து கொள்ளும் கணவனிடம், ‘சூடாக இருக்கறப்போ சாப்பிட வாங்க…’ என மங்கா இடக்கரடக்கலாக அழைப்பு விடுப்பதைப் புரிந்து கொள்ளும் காளி, அவள் மீது பாய்கிறான். அப்போது இளையராஜா, கடம், கட சிங்காரியில் ஆரம்பித்து, டோலக் இசைத்து பாடலை ‘உச்சம்’ தொட வைத்து விடுகிறார்.

நேத்து வெச்ச மீன் கொழம்பு நம்மை இழுக்குமய்யா…!

  • பேனாக்காரன்

Leave a Reply