Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

பெரியார் பல்கலை சிண்டிகேட் தீர்மானத்தை முன்கூட்டியே வெளியிட்ட உதவி பேராசிரியரை பழிதீர்க்க, பட்டியல் சமூக மாணவி மூலம் பாலியல் புகாரில் சிக்க வைக்கும் பல்கலை நிர்வாகத்தால் ஆசிரியர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.

 

சேலத்தை அடுத்த
கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம்
செயல்பட்டு வருகிறது. இந்தப்
பல்கலையுடன் சேலம், நாமக்கல்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும்
சுயநிதி என 105 கல்லூரிகள்
இணைவு பெற்றுள்ளன.

 

பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல்,
தேர்வில் தில்லுமுல்லு, கவுண்டர் சமூக
ஆதிக்கம், காவி அரசியலுக்கு ஆதரவு
என பல்வேறு முறைகேடு புகார்களில்
சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலை மீது,
அண்மையில் கிடைத்த ஏ++ அங்கீகாரம்
சற்றே நன்மதிப்பைக் கூட்டியது.

பிரேம்குமார்

ஆனால்,
நடுநிலையாக இருக்க வேண்டிய
பல்கலை நிர்வாகமே, ஆசிரியர்களை
பழிவாங்கும் நோக்கில் செக்ஸ் புகார்
எனும் புது ஆயுதத்தை கையில்
எடுத்திருப்பதாக கொந்தளிக்கிறார்கள்
பேராசிரியர்கள். இது தொடர்பாக
பல்கலை வட்டாரத்தில்
நாம் விசாரித்தோம்.

 

”சேலம் கோட்டகவுண்டம்பட்டியைச்
சேர்ந்தவர் பிரேம்குமார் (32).
பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை
உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.
மேலும், பெரியார் பல்கலை
ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளராகவும்
இருக்கிறார்.

 

கடந்த மார்ச் 1ம் தேதி,
பல்கலையின் சிண்டிகேட் கூட்டம்
நடக்க இருந்தது. இந்தக் கூட்டத்தில்,
இயற்பியல் துறைத் தலைவராக
பணியாற்றி வரும் குமாரதாஸ் என்பவர்,
நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துடன்
பணி ஓய்வு பெற உள்ளதால்,
அவரை மீள் பணியமர்த்தம் செய்வது
குறித்து அஜண்டா வைக்கப்பட்டு
இருந்தது.

 

பல்கலை ஆசிரியர்கள் பணி ஓய்வு
பெறும் வயதை எட்டிவிட்டால்,
அதற்குப் பின்னர் அவரை
மீள் பணியமர்த்தம் செய்யக் கூடாது
என்று அரசு ஆணை உள்ளது.
அதனால் குமாரதாஸுக்கு மீள் பணியமர்வு
குறித்த தீர்மானத்திற்கு ஒப்புதல்
தரக்கூடாது என்று உயர்கல்வித்துறை,
சட்டத்துறை செயலர்களுக்கு
உதவி பேராசிரியர் பிரேம்குமார்
முன்கூட்டியே கடிதம் அனுப்பி இருந்தார்.
ஆசிரியர் சங்க நிர்வாகி என்ற
பொறுப்பில்தான் இந்த கடிதத்தை
அனுப்பி இருந்தார்.

விசாரணைக்குழு பேராசிரியர்கள் சங்கீதா – ராஜூ – முருகேசன்

இதனால்,
மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த
சிண்டிகேட் கூட்டம் உடனடியாக
ரத்து செய்யப்பட்டது.
இதை பல்கலை நிர்வாகம்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ரகசியம் காக்கப்பட வேண்டிய
சிண்டிகேட் தீர்மானத்தை
பொதுவெளியில் பகிர்ந்ததாகக் கூறி
அவரை, பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல்
சஸ்பெண்ட் செய்தார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து
பிரேம்குமார் உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்
உரிய பதில்களை தாக்கல் செய்யும்படி
உயர்நீதிமன்றம் பல்கலைக்கு
உத்தரவிட்டுள்ளது.

 

வயதில் இளையவர். புதியவர் என்று
பிரேம்குமாரை பல்கலை நிர்வாகம்
லேசுபாசாக நினைத்தோ என்னவோ…
அவர் நீதிமன்றம் வரை செல்வார்
என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அதனால் பிரேம்குமாரை வலுவாக
எதிலாவது சிக்க வைக்க வேண்டும் என்று
கருதிய பல்கலை நிர்வாகம்,
தற்போது அவருக்கு எதிராக பட்டியல்
சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை
தூண்டிவிட்டு செக்ஸ் புகார்
கொடுக்க வைத்திருக்கிறது,” என்கிறார்கள்
பல்கலை ஆசிரியர்கள்.

 

இது தொடர்பாக பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் வைத்தியநாதனிடம் பேசினோம்.

வைத்தியநாதன்

”பல்கலையில் நடக்கும்
விதிமீறல்களை, ஒரு சங்கவாதியாக
விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை.
அது, சங்கத்தின் அடிப்படை உரிமை.
ஆனால், பல்கலை நிர்வாகம்
உள்நோக்கத்துடன் பிரேம்குமாரை
பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.
அவருக்கு கடந்த மார்ச் 3ம் தேதி
விளக்கம் கேட்டு மெமோ கொடுத்தனர்.
24 மணி நேரத்திற்குள் விளக்கம்
கொடுக்க வேண்டும் என்றனர்.

 

எங்கள் அனுபவத்தில்
இத்தனை விரைவாக விசாரிக்கப்பட
வேண்டிய அளவுக்கு இந்தப் புகார்
‘ஒர்த்’ இல்லை என்றே சொல்கிறோம்.
ஆனாலும் பிரேம்குமாரும்
விளக்கம் அளித்தார். பிறகு மார்ச் 5ம் தேதி
அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக
இமெயில் வாயிலாக தகவல்
அனுப்பி இருக்கிறது பெரியார் பல்கலை.

 

சஸ்பெண்ட் நடவடிக்கையை
நீதிமன்றம் மூலம் பிரேம்குமார் முறியடித்து
விடுவார் என்பதால், அவரை வேறு புகாரில்
சிக்க வைக்க வேண்டும் என்ற
முனைப்புடன் பல்கலை
செயல்பட்டு உள்ளது.

 

அதனால்தான் எம்.ஏ., வரலாறு
படித்து வரும் பட்டியல் சமூகத்தைச்
சேர்ந்த ஒரு மாணவியை தூண்டிவிட்டு,
தன்னிடம் உதவி பேராசிரியர் பிரேம்குமார்,
இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்;
தொட்டு பேசுகிறார்; சாதி பெயரைச் சொல்லி
திட்டினார் என்றெல்லாம் பொய் புகார்
கொடுக்க வைத்திருக்கிறார்கள்.
அதன்பேரில் சூரமங்கலம் போலீசார்
அவர் மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

 

அதுவும் மாணவியை
புகார் அளிக்க விடாமல்,
அவருக்கு பதிலாக பதிவாளர் (பொறுப்பு)
தங்கவேல் புகார் அளித்துள்ளார்.
அந்த மாணவியிடம் இது தொடர்பாக
யாரும் பேசி விடக்கூடாது என்பதற்காக,
விடுதியில் தனி அறையில்
அடைத்து வைத்துள்ளனர்.

 

சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து
பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டதை அடுத்துதான்,
ஒவ்வொரு மாணவ, மாணவியாக
தேடிச்சென்று பேராசிரியர்கள் சிலர்,
பிரேம்குமாருக்கு எதிராக ஏதேனும்
புகார்கள் இருக்கிறதா என்று
மெனக்கெட்டு விசாரித்திருக்கிறார்கள்.

 

புகார் அளித்த மாணவியும் கூட
நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்துதான்
இதற்கு சம்மதித்திருக்க வேண்டும்.
அந்த மாணவியை பகடை காயாக
பயன்படுத்தி உள்ளனர். இதுபோன்ற
மிரட்டல்களால் பல்கலையில் நடக்கும்
ஊழல்களுக்கு எதிராக ஆசிரியர்களுக்கு
வாய்ப்பூட்டு போட பார்க்கின்றனர்,”
என்றார் வைத்தியநாதன்.

 

தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம்தான், பிரேம்குமாரின்
சொந்த ஊர். இவருடைய மனைவி,
முதல்வர் மு.க.ஸ்டாலினின்
மனைவி துர்காவுக்கு ஒரு வகையில்
உறவுக்காரர் என்கிறார்கள்.

 

கல்லூரியிலும், பாரதிதாசன் பல்கலையிலும்
படித்தபோது மூன்று தங்கப்பதக்கங்களை
வென்றிருக்கிறார் என பிரேம்குமாரின்
பின்னணி குறித்துச் சொல்கிறார்கள்.

 

போலீசார் வழக்கு பதிவு
செய்ததை அடுத்து, பிரேம்குமார்
தலைமறைவு ஆனார். அவரை
செல்போனில் தொடர்பு
கொண்டு பேசினோம்.

 

”என் மீது புகார் கூறியதாக
சொல்லப்படும் மாணவி, திருமணமானவர்.
அவர் சரியாக வகுப்புக்கு வருவதில்லை.
அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொள்வார்.
சரியாகவும் படிக்க மாட்டார்.
பாடம் நடத்தியபிறகு கேள்வி
கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்.
அவரிடம் மட்டுமல்ல; பொதுவாக
எல்லா மாணவர்களிடமும் நான் கொஞ்சம்
கண்டிப்புடன் தான் இருப்பேன்.

 

இதுவரை அந்த மாணவியை
எந்த இடத்திலும் தனியாக
சந்தித்ததுகூட இல்லை.
ஆசிரியர் – மாணவி என்ற உறவைத்
தாண்டி எங்களுக்குள் எந்த ரகசிய
பேச்சும் இருந்ததில்லை. இதெல்லாம்
அந்த மாணவிக்கும் தெரியும்.
அவரும் மனமுவந்து இப்படியொரு
புகாரை கொடுத்திருக்க மாட்டார்
என்று நம்புகிறேன்.

 

தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி
என்பவரை சிண்டிகேட் உறுப்பினராக
நியமித்தது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்தேன்.
அதன்பிறகு, பேராசிரியர் குமாரதாஸூக்கு
மீள் பணியமர்த்தும் முடிவுக்கும்
எதிர்ப்பு தெரிவித்தேன். இதையெல்லாம்
மனதில் வைத்துக் கொண்டு
பெரியசாமியின் தூண்டுதலால்
எனக்கு எதிராக பொய் புகார்களை
கட்டமைக்கிறார்கள்,”
என்கிறார் பிரேம்குமார்.

 

மாணவியின் செக்ஸ் புகார் குறித்து
விசாரிக்க பேராசிரியர்கள் சங்கீதா ராஜூ,
முருகேசன் ஆகியோர் கொண்ட
குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காக
பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள
நிரந்தர அமைப்பில் இந்த மூவருமே இல்லை.
ஆனால், நிர்வாகம், பிரேம்குமாருக்கு எதிராக
தங்களுக்கு சாதகமான விசாரணை
அறிக்கையை பெறுவதற்காகவே
பேராசிரியர் சங்கீதா தலைமையில் குழு
போட்டு உள்ளதாகவும்
ஒரு பேச்சு உலாவுகிறது.

ஜெகநாதன்

இதுகுறித்து பெரியார் பல்கலை
துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது,
”சிண்டிகேட் அஜண்டா விவரங்களை
கூட்டம் நடத்தப்படுவதற்கு
முன்பே வெளியிட்டது பல்கலை
விதிகளுக்கு எதிரானது. அதனால்தான்
உதவி பேராசிரியர் பிரேம்குமாரை
சஸ்பெண்ட் செய்திருக்கிறோம்.
அவருக்கு அஜண்டா விவரங்களை
கொடுத்தது யார் என்று சொல்லி இருந்தால்,
சஸ்பெண்ட் வரை இந்த
விவகாரம் சென்றிருக்காது.

 

அதேபோல் மாணவி ஒருவர்,
அவர் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார்.
அதையும் விசாரணை நடத்தி
உறுதிபடுத்திய பிறகு, அவருடைய
ஒப்புதலின்பேரில் பிரேம்குமார் மீது
போலீசில் பதிவாளர் மூலம்
புகார் தரப்பட்டுள்ளது.
எல்லாம் சட்டப்படிதான்
செய்திருக்கிறோம்,” என்றார்.

 

இதே பல்கலையில்
கடந்த காலங்களில் இரண்டு
பேராசிரியர்கள் மீது செக்ஸ் புகார்
எழுந்தபோது விசாரணை அளவில்கூட
செல்லாமல் அமுக்கிவிட்ட நிர்வாகம்,
தற்போது இளம் ஆசிரியருக்கு எதிராக
முண்டா தட்டுவதில் வேறு
உள்நோக்கங்கள் இருப்பதாகவும்
தகவல்கள் உலா வருகின்றன.

 

– பேனாக்காரன்