Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

 

ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது
உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு
சர்ச்சையிலும் பெரியார் பல்கலை
முன்னாள் துணை வேந்தர்,
பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது,
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை அடுத்த சித்தனூர்
புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52).
இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார
துறையில் உதவி பேராசிரியராக
கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
இவர் சேலம் மாவட்ட மூன்றாவது
கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்
ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதன் சாராம்சம்:

வைத்தியநாதன்

கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான
தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில்
நடந்து வரும் ஊழல் தொடர்பாக
ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில்,
அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன்,
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி உயர்வு
வழங்குவதாகவும் சொல்லப்பட்டு இருந்தது.
பெரியார் பல்கலை ஆசிரியர்கள்
சங்க நிர்வாகி வைத்தியநாதன் என்பவர்
இவ்வாறு சொன்னதாகவும் அந்த நாளிதழில்
குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

தான் சொல்லாத ஒரு தகவலை,
தன் பெயரில் வெளியிட்டுள்ளதைக் கண்டித்தும்,
விளக்கம் கேட்டும் அந்த நாளிதழ் ஆசிரியருக்கு
வைத்தியநாதன் சட்டப்பூர்வ நோட்டீஸ்
அளித்தார். 3.4.2017ம் தேதியன்று அவர்,
தனக்கும் இந்த செய்திக்கும் யாதொரு
தொடர்பும் இல்லை என்று பல்கலை
நிர்வாகத்திடமும் விளக்கம் அளித்தார்.
தான் எந்த ஒரு சங்கத்திலும் அடிப்படை
உறுப்பினர்கூட இல்லாதபோது, சங்க நிர்வாகி
என்று என் பெயரை வேண்டுமென்றே
அந்த நாளிதழ் குறிப்பிட்டு செய்தி
வெளியிட்டு உள்ளதாகவும் கூறினார்.

சுவாமிநாதன்

இதையெல்லாம் பொருட்படுத்தாத அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன், 4.4.2017ம் தேதியன்று அவரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக பேச வேண்டும் என்றும் சுவாமிநாதனை துணைவேந்தர் அன்றைய தினம் தன் அலுவலக அறைக்கு அழைத்துள்ளார். ஏற்கனவே அந்த அறையில் அப்போதைய பதிவாளரான மணிவண்ணன், இப்போது டீன் ஆக உள்ள பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் இருந்துள்ளனர்.

மணிவண்ணன்

உதவி பேராசிரியர் வைத்தியநாதனைப் பார்த்து கிருஷ்ணகுமார், வேறு சாதி பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, ஏன் என் சாதி பெயரையும் சேர்த்துக் கெடுக்கிறாய் என்று கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுவாமிநாதன், உதவி பேராசிரியர் வைத்தியநாதன் கன்னத்தில் அறைந்துள்ளார். மணிவண்ணனும் அவரை தாக்க முயற்சித்துள்ளார்.

கிருஷ்ணகுமார்

அவர்களிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்த வைத்தியநாதன் திடீரென்று மூர்ச்சையாகி கீழே சரிந்தார். அதைப்பார்த்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சிலர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி க்கப்பட்டார்.

 

தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வைத்தியநாதன் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன்மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் இழுத்தடித்து வந்துள்ளார். முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதனும், ஆய்வாளர் செந்தில்குமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் அவர் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும் வைத்தியநாதன் கூறுகிறார்.

செந்தில்குமார்

இதையடுத்து அவர் தன்னை தாக்கியவர்கள் மீதும், புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர் மீதும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்த மனுவுக்கு திங்கள்கிழமையன்று விசாரணை எண் (சிஆர்.பி. எண்: 1/2019) வழங்கப்பட்டது. வரும் பிப்ரவரி 8ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

 

உதவி பேராசிரியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் துணைவேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ள சம்பவம் பெரியார் பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

– பேனாக்காரன்.