சில பணிகளில் குறைந்த உழைப்பு இருக்கும். அதீத லாபம் கிடைக்கும். சில பணிகளில் உழைப்பு விழுங்கும் அளவுக்கு பணப்பலன்கள் இருக்காது. இதில் இரண்டாவது வகையிலானது, வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடும் ‘லைன் பாய்’களின் வாழ்க்கை.
செய்தித்தாளும் ஒரு கோப்பை தேநீரும்:
”காலையில பேப்பர் பார்க்கலைனா எனக்கு பொழுதே ஓடாது. அதுவும், ஒரு கையில தேநீர் கோப்பையை பிடித்து ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி சுவைத்தபடி, செய்தித்தாள் வாசிக்கும் அனுபவமே தனிதான்,” என பலர் சுகானுபவமாக சொல்வதுண்டு.
அவர்களில் பலர், செய்தித்தாள் விநியோகத்தில் இருக்கும் வலைப்பின்னல் அமைப்பு, உழைப்பு, கூலி, ‘லைன் பாய்’களின் வாழ்க்கை போராட்டம் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பே இல்லை.
முகவர்கள்:
தினசரி செய்தித்தாளோ அல்லது வார / மாத சஞ்சிகைகளோ எதுவாக இருந்தாலும், அவை மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட பெரிய முகவர்களுக்கு (நியூஸ் பேப்பர் டீலர் / மெயின் ஏஜன்ட்) அனுப்பி வைக்கப்படுகிறது. அவரிடம் இருந்து ஒவ்வொரு பகுதிக்குமான கிளை முகவருக்கு (சப்-ஏஜன்ட்) பத்திரிகைகள் பிரித்து வழங்கப்படுகிறது.
அதன்பின் கிளை முகவர்களின் கீழ் வேலை செய்யும், ‘லைன் பாய்’களுக்கு தேவையான பத்திரிகைகள் வழங்கப்படுகிறது. இவர்கள்தான் வீடுகளுக்கு செய்தித்தாள், சஞ்சிகைகளை கொண்டு வரும் தூதுவர்கள். அதாவது, பத்திரிகை நிறுவனம் – மெயின் ஏஜன்ட் – சப் ஏஜன்ட் – லைன் பாய் – வாடிக்கையாளர் என்ற வலைப்பின்னலுடன் பணிபுரிகின்றனர்.
அதிகாலை தூதுவர்கள்:
இடியோ, மழையோ அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் செய்தித்தாள், ‘லைன் பாய்’களின் பணிகள் தொடங்கி விடுகின்றன. காரணம், ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடுமே. அதனால், வீடுகளுக்கு காலை 7 மணிக்குள் செய்தித்தாள்களை விநியோகம் செய்தாக வேண்டும்.
இவர்களின் பணிச்சூழலை அறிந்துகொள்ள ஓர் அதிகாலை பொழுதில் (4 மணி), சேலம் பழைய பேருந்து நிலையம் வணிக வளாகத்திற்குச் சென்றோம்.
யாவரும் இங்கே தொழிலாளி வர்க்கமே!:
பள்ளி வயது சிறுவன் முதல் மூத்தக்குடிமகன் வரை குழுமி இருந்தனர். மெயின் ஏஜன்ட்தான், சப்-ஏஜன்டுகளுக்கு கமிஷன் தரக்கூடிய முதலாளி. என்றாலும், இத்தொழிலைப் பொருத்தவரை எல்லோரும் தொழிலாளிகளே. அனைவருமே பாகுபாடின்றி அனைத்து வகையான தினசரி செய்தித்தாள்களையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
சிலர், செய்தித்தாள்களுக்குள் இணைக்க வேண்டிய துண்டு பிரசுரங்களை மின்னல் வேகத்தில் உள்சொருகுவதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரம்கூட தோற்றுப்போய்விடும். வேகம்…அவ்வளவு வேகம்.

கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகை முகவராக இருக்கும் வீரமணி (47), ”எங்க அப்பா ஆரம்பத்தில் முரசொலி ஏஜன்டாக இருந்தார். அவருக்கு வயதானதால், நான் இத்தொழிலுக்குள் வந்தேன். அதனால் சின்ன வயதில் இருந்தே இத்தொழிலைப் பார்த்து வளர்ந்தவன்தான்.
இப்போது, அனைத்து நாளிதழ்களையுமே ஏஜன்சி எடுத்து இருக்கிறேன். தினமும் சுமார் 10 ஆயிரம் பிரதிகள் விநியோகிக்கிறேன். பத்திரிகை நிறுவனங்கள் எனக்கு 25 சதவீதம் கமிஷன் தருகின்றன. அதில் இருந்து, என்னுடைய சப் ஏஜன்டுகளுக்கு 15 சதவீதம் கமிஷன் தருகிறேன்.
வசூல் சிக்கல்:
இந்த தொழிலில் பெரிய சவால்னா, அது ‘கலெக்ஷன்’ மட்டும்தான். குறிப்பிட்ட நாளுக்குள் ஏஜன்டுகளிடம் இருந்து பணம் கைக்கு வந்து சேராது. சில நேரங்களில், சப்-ஏஜன்டுகள் வசூலித்த பணத்தை செலுத்தாமல் சுய தேவைக்கு பயன்படுத்தி விடுவதும் உண்டு.
மாதந்தோறும் 10ம் தேதிக்குள் பத்திரிகை அலுவலகங்களில் செய்தித்தாளுக்குரிய தொகையை செலுத்தினால், கூடுதலாக 5 சதவீதம் ஊக்கத்தொகை கிடைக்கும். அதனால், சில நேரங்களில் கைக்காசை போட்டு கணக்கை நேர் செய்து விடுவோம்.
மழையோ, புயலோ, கடும் குளிரோ எந்த பேரிடர் என்றாலும் நாங்கள் சமாளித்துதான் ஆக வேண்டும். குறித்த நேரத்தில் வீடுகளுக்கு செய்தித்தாள்கள் போகவில்லை என்றால், எங்களுக்கு நட்டம்தான்.
தனி மரியாதை:
இவ்வளவு சவால்களும், கடின உழைப்பும் இருந்தாலும் நாங்களும் பத்திரிகை தொடர்பான பணியில் இருப்பதால், நமக்கு எங்க போனாலும் தனி மரியாதைதான். அதற்காகவே எந்த ஒரு கஷ்டத்தையும் சகித்துக் கொள்ளலாம்.
சுகமான சுமை:
வருஷத்துல 360 நாளும் வேலைதான். லீவ் எடுக்கவே முடியாது. ஆனாலும், இதெல்லாமே சுகமான சுமைதான். என்ன…எனக்கு பிறகு, இந்த தொழிலை எடுத்து நடத்த ஆள்தான் இல்லை. என் மகன்கூட இந்த தொழிலுக்கு வரக்கூடாதுனுதான் நினைக்கிறேன். எல்லாம் ‘வசூல்’ பயம்தான்,” என்கிறார் வீரமணி.
இந்த வேலைக்கும் இப்போது ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருப்பதாகவே செய்தித்தாள் முகவர்கள் கூறுகின்றனர்.

பகுதிநேர வேலை:
”நானெல்லாம் 3.30 மணிக்கு வேலைக்கு வந்துடுவேன். தினமும் 100 வீடுகளுக்கு பேப்பர் போடுகிறேன். காலை 8.30 மணிக்குள் வேலையை முடித்து விடுவேன். எனக்கு இது பகுதிநேர வேலைதான். மாதம் ரூ.3000 வருமானம் வருது,” எனக்கூறும் உஸ்மான், மூன்றே நிமிடங்களில் 100 செய்தித்தாள்களுக்குள் துண்டு பிரசுரங்களை சொருகுவதில் கெட்டிக்காரர்.
பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ்குமாரின் தாய், தந்தை இருவரும் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் பகுதி நேரமாக ‘லைன் பாய்’ வேலை செய்து வரும் சந்தோஷ்குமார், அதிகாலை 5 மணி முதல் 7.30 மணிக்குள் வீடுகளுக்கு செய்தித்தாள்களை விநியோகம் செய்துவிட்டு, 8.30 மணிக்கெல்லாம் பள்ளிக்கு பறந்து விடுகிறார். இதன்மூலம் மாதம் 1000 ரூபாய் சம்பாதிப்பதாக கூறினார்.

சில்லரை செலவுகளை ஈடுகட்டுகிறது:
பொன்னம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த சங்கர் (37), கடந்த 20 ஆண்டுகளாக ‘லைன் பாய்’ ஆக இருக்கிறார். அரிசி கடையில் வேலை பார்க்கும் இவரும், பகுதி நேரமாகவே இந்த வேலையில் இருக்கிறார்.
”காலை 6.30 மணிக்கு ஆரம்பித்து 8.30 மணிக்குள் 100 வீடுகளுக்கு பேப்பர் போட்டுவிடுவேன். பத்திரிகை அலுவலகங்களில் இருந்து எங்கள் கைக்கு வரவே தாமதம் ஆனால்தான் நாங்களும் வீடுகளில் கொண்டு சேர்க்க தாமதம் ஆகும்.
ஆரம்பத்தில் அதிகாலையில் எழுந்திருப்பது சிரமமாக இருந்தாலும், போகப்போக பழகிவிட்டது. காலை 8 மணி வரை தூங்கினால் சோம்பேறித்தனம்தான் வரும். அதிகாலையில் எழுவதால் உடலும், மனசும் சுறுசுறுப்பாகிறது. குழந்தைகளின் பால் செலவு, திண்பண்டங்கள் வாங்க இந்த வருமானம் உதவுகிறது.

மறக்க முடியாத அங்கீகாரம்:
ஒருமுறை தினமலர் அலுவலகத்தில் பேப்பர் ஏஜன்டுகளுக்கான மீட்டிங் நடந்தது. அப்போது எங்களை பாராட்டி, ஒரு சுவர்க் கடிகாரம் கொடுத்தனர். கடந்த 15 ஆண்டாக எங்கள் வீட்டில் அந்த கடிகாரம்தான் ஓடுகிறது. அந்த அங்கீகாரத்தை என்னால் மறக்கவே முடியாது,” என்றார் சங்கர்.
வேலை வாங்குவதே சவால்தான்:
மற்றொரு மெயின் ஏஜன்டான பொன்னம்மாபேட்டை செந்தில் (32), அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் தனது பணியை துவங்கி விடுகிறார். இவரிடம் வேலை பார்க்கும் ‘லைன் பாய்’களை எழுப்புவதே இவர்தானாம்.
”நான் நாலு பேரை வைத்து வேலை வாங்குவதே சவால்தான். ஓன்றிரண்டு பேர் பணிக்கு வராவிட்டால் டேஞ்சர்தான். அதுபோன்ற சூழல்களில் அவர்களது லைனையும் நான்தான் பார்த்தாக வேண்டும்.
இன்றைக்கு பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் பலரும் காலை 7 மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு கிளம்பி விடுகின்றனர். அதனால், அவர்கள் அதிகாலை 5 மணிக்கே பேப்பர் கேட்கின்றனர். ஆனால், சில நாளிதழ்கள் அச்சாகி எங்கள் கைக்கு வரும்போதே அதிகாலை 5.45 மணி ஆகிவிடுகிறது. இதெல்லாமே எங்களுக்கு சவால்தான்.
விடுப்பு எடுக்க முடியாது:
நாமக்கல், சென்னையில் பேப்பர் ஏஜன்ட், ‘லைன் பாய்’களுக்கென சங்கம் உள்ளது. நாங்களும் சங்கம் ஆரம்பிப்பது குறித்து யோசித்து வருகிறோம். இரண்டு அல்லது மூன்று மணி நேரம்தான் வேலை என்றாலும், ‘லைன் பாய்’ பணி ரொம்பவே ‘ஹெவி’.

ஒருநாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. அதனால், பத்திரிகை நிறுவனங்களும் எங்களுக்கு கூடுதல் கமிஷன் ஒதுக்கினால், நாங்களும் ‘லைன்பாய்’களுக்கு கூடுதலாக சம்பளம் தர முடியும். பத்திரிகை நிறுவனங்கள் ‘லைன்பாய்’களுக்கு சைக்கிள் வழங்கினால் நல்லது. அரசாங்கமும் எங்களுக்கு ஏதேனும் சலுகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்,” என்றார்.
அவரிடம் இந்த தொழிலில் மறக்க முடியாத அனுபவம் என்ன என்று கேட்போது, ”இந்த பசங்க இப்படி இம்ச பன்றானுங்களேனு” அடிக்கடி நினைச்சுக்குவேன் என்றார் சிரித்தபடியே.
செய்தித்தாள் முகவர்களின்றி அமையாது ஊடக உலகு.
தொடர்புக்கு:
வீரமணி: 94432 48522.
செந்தில்: 97902 32784.
– இளையராஜா சுப்ரமணியம்.
நன்றி: புதிய அகராதி திங்கள் இதழ்.