தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும் (பிப்ரவரி 6, 2018) சரிவுடன் தொடங்கின. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பங்குச்சந்தையில் நீண்டகால முதலீட்டிற்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் கடும் சரிவுடன் பங்குச்சந்தைகள் முடிவு பெற்றன. இதன் தாக்கம் மறுநாளும் தொடர்ந்தது. 2ம் தேதியன்றும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் தொடங்கின.
இந்நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகள் இன்றைக்கு எதிர்பாராத சரிவை சந்தித்தன. அமெரிக்கா டாலருக்கான தேவை அதிகரிப்பு, அந்நாட்டு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் பெரும் சரிவுடன் இன்று தொடங்கியது. தைவான், ஜப்பான் நாடுகளிலும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.
அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் தொடங்கியது.
இழப்பு எவ்வளவு?:
மதியம் 1.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 877 புள்ளிகள் குறைந்து, 33879.18 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி, 264 புள்ளிகள் சரிந்து 10402.50 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிக்கொண்டிருந்தது.
இந்தியாவைப் பொருத்தவரை சர்வதேச பங்குச்சந்தைகளின் சரிவு மட்டுமின்றி, மத்திய அரசின் பட்ஜெட்டின் தாக்கமும், பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
வங்கி சார்ந்த பங்குகளும், தகவல் தொ-ழில்நுட்பத் துறை சார்ந்த பங்குகளும் கடும் வீழ்ச்சி அடைந்தன. கடந்த மூன்று நாள்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகள் 9.61 லட்சம் கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பங்குசந்தைகள் இப்போதுதான் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
தங்கம், வெள்ளி விலை உயர்வு:
அதேநேரம் தங்கம், வெள்ளி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தங்கம் (24 கேரட்) பாருக்கு ரூ.262ம், வெள்ளி பாருக்கு ரூ.428ம் விலை உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ.7 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.