Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கல்லூரி ஆசிரியர் தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 1, 2018) வெளியிட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (Teacher Eligibility Test – TET), அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 57 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும். இதன் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 1883 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான போட்டித்தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும்.

ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1065 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அண்மையில் டிஆர்பி அறிவித்தது.

அதனால் அதே காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு மீண்டும் இந்தாண்டு ஆகஸ்ட் 4ம் தேதி நடத்தப்படும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு, மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். இத்தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியாகும்.

இத்துடன், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு வரும் ஜூலை மாதம் 14ம் தேதி நடத்தப்படும் என்றும், விண்ணப்பிக்கும் விவரங்கள் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.