Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களே அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று அருண் நகர், ராஜராஜன் நகர் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வந்தாலும் வந்தது, சேலம் மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. என்னதான் சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக நிலை உயர்த்தப்பட்டாலும், நகர் ஊரமைப்பு பொறியியலில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறது எனலாம்.

 

சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சாலைகள்; கால்வாய்கள், ஒழிக்கவே முடியாத கொசுத்தொல்லை, அவற்றால் உண்டாகும் காய்ச்சல் என அவலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது, மாம்பழ மாநகராட்சி.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி பெய்து வரும் பருவ மழையால், சேலம் 5வது கோட்டத்தற்கு உட்பட்ட அருண் நகர், நியூ அருண் நகர், ராஜராஜன் நகர், முருகன் நகர் ஆகிய பகுதிகள் நசநசத்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில் வயல்வெளிகளாக இருந்த கேஎம்எஸ் கார்டன் உள்ளிட்ட மேற்சொன்ன பகுதிகள், 1983ம் ஆண்டுவாக்கில் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

கடந்த இருபது ஆண்டுகளில் இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், அடுக்குமாடி வீடுகள் முளைத்துவிட்டன. ஆனாலும், சாக்கடைக் கழிவு நீர் செல்வதற்கான வடிகால் வசதிகளோ, பல இடங்களில் ஊர்ப்புற சாலைகளோ இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. இப்பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் உயர்நடுத்தர பிரிவினர்; அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் கணிசமாக இருக்கின்றனர்.

 

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சாக்கடை கால்வாய் வசதி கேட்டு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.

இதுகுறித்து அருண் நகர், நியூ அருண் நகர், முருகன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், செங்கோட்டுவேல், பாலசுப்ரமணியம், பானுமதி, கவிதா, ஹரிகுமார் ஆகியோர் கூறியது:

 

மழைக்காலம் வந்தாலே இந்தப் பகுதியில் சாலையில் யாரும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு முழங்கால் உயரத்திற்கு மழைநீரும், சாக்கடைக் கழிவுநீரும் தேங்கி நிற்கும். ஏற்காடு மலையில் இருந்து வரும் மழைநீர், கேஎம்எஸ் கார்டன் பகுதியில் உள்ள ஓர் ஓடையில் கலக்கிறது. அந்த ஓடை வழிந்து சாக்கடை நீருடன் கலந்து இங்குள்ள ஒரு காலி மனைகளில் நிரம்புகிறது.

 

அவற்றில் இருந்து சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீர் தேங்குகிறது. இதுவரை சாக்கடைக் கால்வாய் வசதி செய்து தரப்படாததால், சாலையில் கழிவு நீர் பல நாள்களுக்கு தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். சில நாள்களுக்கு முன்பு வந்த ஊழியர்கள் சிலர், சாலையின் குறுக்கே வாய்க்கால் போல வெட்டிவிட்டுச் சென்றனர். அதன்பிறகு இந்த சாலை வழியாக வாகனப் போக்குவரத்து முடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இப்போது சாலையின் நடுவே வெட்டி வாய்க்கால் அமைத்துள்ளதால், நடந்து செல்லும் பெண்கள், வயதானவர்கள் இந்த சாலையில் வாய்க்காலை தாண்டி வர ரொம்பவே சிரமப்படுகின்றனர்.

பாதாள சாக்கடைக்காக
குழிகள் வெட்டப்பட்டு சிமெண்ட்
மூடி போட்டு மூடியுள்ளனர்.
மழைக்காலங்களில் அந்த
குழிகளில் இருந்து தண்ணீர்
வெள்ளம்போல் பல அடி
உயரத்திற்கு குபுகுபுவென்று
வெளியேறும். இன்னும் பாதாள
சாக்கடைக் குழிக்கும்,
வீடுகளுக்கும் இணைப்பு
கொடுக்கப்படவில்லை.
முதலமைச்சரின்
சொந்த மாவட்டமாக இருந்தும்
இத்தனை துயரத்தை நித்தமும்
அனுபவித்துக் கொண்டுதான்
இருக்கிறோம்.

கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், எல்லா வீடுகளிலும் உறிஞ்சு குழி (சோக் பிட்) மூலம்தான் கழிவுநீரை அப்புறப்படுத்தி வருகிறோம். சேலம் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி என எல்லா வரிகளும் காலம் காலமாக முறையாக செலுத்தி வருகிறோம். இனியும் எங்களுக்கு போதிய சாலை வசதி, சாக்கடைக் கால்வாய் வசதிகள் செய்து தராவிட்டால், நாங்கள் மாநகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம் என்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

 

முருகன் நகரில் காலி மனைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அந்த நிலத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்கின்றனர். அந்த மனையில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

பானுமதி மனோகரன் என்பவர்,
”ஒவ்வொரு வீட்டு முன்பும்
மழைநீர் தேங்கியதால், வடிந்து
ஓடுவதற்கு வசதியாக மாநகராட்சி
ஊழியர்கள் வீடுகளையொட்டி
நான்கு அடி ஆழத்திற்கு
வாய்க்கால் வெட்டிவிட்டுச்
சென்றனர். ஆனால், மழை
நின்றதும் அந்த வாய்க்கால்
குழியை நீங்கள்தான்
மூடிக்கொள்ள வேண்டும் என்று
சொல்லிவிட்டுப் போயிருக்கின்றனர்.
மேலும், அவரவரே சொந்த
செலவில் இந்த வாய்க்காலில்
சிமெண்ட் குழாய்கள் பதித்துக்
கொள்ள வேண்டும்
என்கிறார்கள்.

நாங்களே அந்த வேலைகளைச் செய்வது எனில், எதற்காக மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்? வீட்டு முன்பு வெட்டப்பட்ட வாய்க்காலால் கார் உள்ளிட்ட வாகனங்களை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் உள்ள இந்த வாய்க்காலில் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது,” என்றார்.

நியூ அருண் நகரின் மற்றொரு பகுதியில் திறந்தவெளியில் பாசம் படிந்து தேங்கிக் கிடக்கும் நீர், டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் ஆலையாக இருப்பதைக் காண முடிந்தது. அங்குள்ள காலி மனைகளின் உரிமையாளர்கள் யார் என்பது பற்றி அப்பகுதி மக்களுக்கே சரியாகத் தெரியவில்லை. அங்கே இன்னும் ஓர் ஆபத்தும் இருக்கிறது.

அப்பகுதியைச் சேர்ந்த
சுதா என்பவர்,
”இந்தப் பகுதியில்
திறந்தவெளியில்
தனியாருக்குச் சொந்தமான
ஒரு விவசாயக்கிணறு உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால்
அந்தக் கிணறு தரை மட்டம்
அளவுக்கு நிரம்பி வழிகிறது.
மழை வந்தாலும் வராமல்
போனாலும், சுற்றுச்சுவரோ,
மூடியோ இல்லாத அந்தக்
கிணற்றில் கடந்த பத்து
ஆண்டுகளில் 4 சிறுவர்கள்
தவறி விழுந்து இறந்திருக்கிறார்கள்.
யாராவது இறக்கும்போது
காவல்துறையினர் வந்து
பார்த்துவிட்டு, கிணற்றை மூட
நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.
ஆனால், இதுவரை யாரும்
அதற்கான ஒரு சிறு
நடவடிக்கைகூட எடுக்கவில்லை,”
என்றார்.

 

அதே பகுதியைச் சேர்ந்த அசோக் கூறுகையில், ”நியூ அருண் நகரில் உள்ள காலி மனைகளில் திறந்தவெளியில் எப்போதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. அடிக்கடி பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து சிலர் வெளியேற்றும் கழிவு நீர் நீண்ட நாள்களுக்கு தேங்கிக் கிடக்கிறது.

 

தனியார் நிலங்களில் தண்ணீர் தேங்கினால் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்கிறது. ஆனால் போதிய வடிகால் வசதி செய்து தரப்படாததால்தான் மழைநீரும், கழிவுநீரும் தெருவில் தேங்கி நிற்கிறது. மக்கள் செய்தால் தப்பு; அதையே மாநகராட்சி செய்தால் தப்பு இல்லையா? அலட்சியமாக நடந்து கொள்ளும் சேலம் மாநகராட்சிக்கும் அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். சாலை போடுவதில் கமிஷன் கொள்ளை அடிப்பதில் மட்டும்தான் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்,” என்றார் ஆவேசமாக.

 

எனினும், எல்லா குறைபாடுகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை மட்டுமே மக்கள் முற்றாக குறைசொல்லி விட முடியாது. இக்குற்றங்களில் மக்களுக்கும் கணிசமாக பங்கு இருக்கவே செய்கிறது. திறந்தவெளி கிணறு இருப்பதாகச் சொல்லப்படும் பகுதியில் வழக்கறிஞர்கள் கணிசமாக வசிக்கின்றனர். அவர்களில் ஒருவர்கூட, பாதுகாப்பற்ற அந்த கிணற்றை மூட முயற்சிக்காமல் மேட்டுக்குடி மனோபாவத்துடன் ஒதுங்கி நிற்பதும் நமக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

 

கழிவுநீர் வடிகால்
வசதி இல்லாதது,
டெங்கு காய்ச்சல்,
சாலை வசதி குறைபாடு என
குறைகளைச் சொன்னாலும்,
வீடுகளில் சேகரமாகும்
குப்பைகளை அன்றாடம்
காலையில் மாநகராட்சி
ஊழியர்கள் வீடு வீடாகச்
சென்று சேகரித்துச் செல்வதாக
கூறுகின்றனர். அதே அக்கறை
மேற்சொன்ன புகார்களின் மீதும்
செலுத்த வேண்டும் என்பது
அப்பகுதி மக்களின் ஆகப்பெரும்
கோரிக்கைகளாக உள்ளன.

 

– பேனாக்காரன்