Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தொட்டால் கை கால் வௌங்காமல் போய்டும்!” – பூசாரி அருள்வாக்கு; போலீசார் ஓட்டம்!!

சேலம் அருகே, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் குலதெய்வ கோயிலில் படையலிட்டு வேண்டியபொழுது, திடீரென்று அருள் வந்து ஆடிய பூசாரி, ‘எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை தொடும் அதிகாரிகளுக்கு கை, கால் வௌங்காமல் போய்டும்…. கண்ணு தெரியாமல் போய்டும்…’ என்று அருள்வாக்கு கூறியதால் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் பதற்றத்தில் தெறித்து ஓடினர்.

 

சேலம் – சென்னை இடையில் எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 36.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழிச்சாலை அமைகிறது. இதற்காக தனியார் பட்டா நிலம் 186 ஹெக்டேர் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 95 விழுக்காடு, ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் என்பதால், நிலத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் பூலாவரி அருகே உள்ள கூமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 60க்கும் மேற்பட்டோர் இன்று (ஜூலை 27, 2018) மதியம் 2.30 மணியளவில், அங்குள்ள செல்வக்குமாரன், குப்பண்ணன், மகாமுனி ஆகிய கோயில்களில் பொங்கல் வைத்து, கடவுளிடம் கோரிக்கை மனு அளித்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்தக் கோயில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும், சக்தி வாய்ந்த கடவுள் என்றும் கிராம மக்கள் கூறினர்.

முதலில் செல்வக்குமாரன் கோயிலில் பொங்கல் படையலிட்டு கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ‘விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும்,’ என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு, கடவுளின் காலடியில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்து வழிபட்டனர். கோரிக்கை மனுவை, பெரிய தாம்பாளத் தட்டில் தேங்காய், பூ, பழங்களுடன் கொண்டு வந்து கடவுள் காலடியில் வைத்தனர்.

கோயில் பூசாரி செல்வம் சங்கு ஊதி, கடவுளுக்கு அர்ச்சனைகள் செய்தார். திடீரென்று அவர் அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடினார். வயிற்றிலும், தொடையிலும், கன்னத்திலும் தனக்குத்தானே அடித்தபடி வினோதமாக பேசினார். அப்போது கிராமத்துப் பெரியவர்கள் அவரிடம் அருள்வாக்கு கேட்டனர்.

அருள்வாக்கு வந்த பூசாரியிடம், ”எட்டு வழிச்சாலை ஏன் வந்தது? அதை எப்படியாவது நிறுத்திவிடு… எங்கள் ஊருக்கு வேண்டாம்,” என பக்தர்கள் கோரினர். அதற்கு செல்வக்குமாரன் சாமியும் (அருள் வந்தவர்), ”அப்படியே நிறுத்திக் காட்டுகிறேன். என்னை மீறி யாரும் இந்த நிலத்தை தொட்டு விட முடியாது. அதையும் மீறி நிலத்தை தொடும் அதிகாரிகளோ, யாராக இருந்தாலும் அவர்களுக்கு கை கால் வௌங்காமல் செய்துடுவேன். கண்ணு தெரியாமல் போய்டும்… இதே இடத்துல உங்களை எல்லாம் தங்க வைப்பான் இந்த மூக்குத்திக்கண்ணன்…,” என்றார். அதற்கு ஊர் மக்கள், ‘அப்படி என்றால் வலக்கை (சத்தியம் செய்தல்) போட்டுக்கொடு,’ என்றனர். அருள்வாக்கு சொன்னவரும் பக்தர்களின் கைகளில் அடித்து வலக்கை செய்தார். பின்னர் அருள் வந்து ஆடியவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.

திடீரென்று பூசாரி அருள் வந்து ஆடியதுடன், அதிகாரிகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு கை, கால்கள் விளங்காமல் போய்விடும் என்று சொன்னதால் பாதுகாப்புக்கு சாதாரண உடையில் வந்து நின்ற காவல்துறையினர் பதற்றத்தில் தெறித்து ஓடினர்.

இதையடுத்து, அதே வளாகத்தில் உள்ள குப்பண்ணன் கோயிலிலும் ஊர் மக்கள் கூடி வழிபாடு நடத்தினர். அந்தக் கோயிலில் சின்னதம்பி என்ற பக்தர் அருள்வாக்கு கூறினர். அவரும் எட்டு வழிச்சாலை வரவிடாமல் தடுத்து, ஊர்மக்களை காத்து நிற்பேன் என்று உறுதி அளித்தார். சொன்னசொல் தவற மாட்டேன் என்று அவர் கூறினாலும், பக்தர்களின் கையில் அடித்து வலக்கை கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

 

#வீடியோ

 

– பேனாக்காரன்.