Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த முகாமைச் சேர்ந்த மோதிலால், அடிப்படையில் ஒரு சிற்பி. கோயில்களில் கடவுள் சிலைகளை செதுக்கி வருகிறார். என்னதான் கலை நயத்துடன் சிலை வடித்தாலும், கிடைப்பது சொற்ப கூலிதான். இவருடைய மகள் வழி பேத்தி காவினியா (13); பேரன் ரனுஷன் (14). இருவரையும் மோதிலாலும் அவருடைய மனைவி பரமேஸ்வரியும்தான் பராமரித்து வருகின்றனர்.

 

இந்த குழந்தைகளின் அப்பா திருமுருகன், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கிடைக்கின்ற கூலியை டாஸ்மாக்கிடம் கொடுத்துவிட, அதனால் மனைவி புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு மூள, விரக்தி அடைந்த புவனேஸ்வரி குழந்தைகளை தவிக்கவிட்டு தீக்குளித்து இறந்து போனார். 2007ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை சிற்பி மோதிலால்தான் படிக்க வைத்து வருகிறார்.

 

சிறுமி காவினியா, தாரமங்கலத்தில் உள்ள ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தாள். ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்க ரொம்பவே சிரமமாக இருப்பதால், சமச்சீர் கல்வியில் சேர்ந்து பயில விருப்பம் தெரிவித்தாள். பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) பெற்றால்தான் வேறு பள்ளியில் சேர முடியும். அந்தப்பள்ளிக்குச் சென்று காவினியாவின் டி.சி.யைக் கேட்டால், ‘இன்னும் 16500 ரூபாய் கல்விக்கட்டணம் பாக்கி இருக்கு. அதை கொடுத்துவிட்டு டி.சி.யை வாங்கிச் செல்லுங்கள்’ என்று பள்ளி நிர்வாகம் ரொம்பவே கறாராகச் சொல்லிவிட்டது.

பள்ளியின் தாராள மனதால், 1500 ரூபாய் தள்ளுபடி சலுகை கிடைத்ததே தவிர, கல்விக்கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தனர். பள்ளி சான்றிதழில் கையெழுத்திட மட்டுமே காவினியாவின் தந்தை வருவார்; அவரிடம் பேசியும் பலனில்லை. இப்போதிருக்கும் நிலையில், கந்துவட்டிக்கும் கடன் பெற முடியாத நிலையில்தான், காவினியாவுக்கு உதவுமாறு மோதிலாலும், அவருடைய மனைவி பரமேஸ்வரியும் நம்மிடம் நேரில் கேட்டனர். இது நடந்தது ஒன்றரை மாதத்திற்கு முன்பு.

 

இந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. காவினியாவை 8ம் வகுப்பில் சேர்ப்பதற்காக, அவளுடைய தாத்தாவும், பாட்டியும் சிறுமியுடன் தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றனர். அப்பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரோ, டி.சி. இல்லமல் மாணவியை சேர்க்கவே முடியாது என கண்டிப்பு காட்டினார். சிறுமி காவினியா ஏமாற்றம் அடைந்தாள். நடந்த விவரங்களை சிறுமியின் தாத்தா, பாட்டி நம்மிடம் கூறினர்.

 

இப்படியான சூழ்நிலையில்தான், நாம் இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, மாணவி காவினியாவுக்கு உதவுமாறு விரிவாக எழுதி அனுப்பினோம். அதேநேரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். காவினியாவின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரும் உத்தரவிட, அடுத்தடுத்த சில மணி நேரங்களில் தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காவினியா எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டாள்.

 

இன்னொரு கோரிக்கையும் இருக்கே…

 

எட்டாம் வகுப்பில் சேர்க்கை முடித்ததோடு ஆட்சியர் நின்று விடவில்லை. சிறுமிக்கு டி.சி. கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாரமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு இருந்திருக்கிறார். வருவாய்த்துறை அதிகாரிகள் ஜூன் 3ம் தேதி மாலையில், சிறுமியையும் அவளது தாத்தா, பாட்டியையும் நேரில் ஜோதி மெட்ரிக் பள்ளிக்கு அழைத்துச்சென்று, ஆட்சியர் உத்தரவு குறித்து கூறியிருக்கிறார்கள். பிறகு, மறுநாள் காலையில் வந்து டி.சி. பெற்றுக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.,

அதையடுத்து, ஜூன் 4ம் தேதி காலையில், சிறுமியை நேரில் வரவழைத்த தனியார் பள்ளி நிர்வாகம் டி.சி. வழங்கி, அதற்கு ஆதாரமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளது. ஆட்சியர் ரோகிணி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரின் முயற்சியால் இன்று அகதி முகாம் சிறுமிக்கு பள்ளிக்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு கனிந்து இருக்கிறது.

 

ஆட்சியர் ரோகிணி இந்த மாவட்டத்தில்
பொறுப்பேற்றதில் இருந்தே கல்வித்துறை மீது,
குறிப்பாக பெண் குழந்தைகளின்
கல்வி நலனில் கூடுதல் அக்கறை
செலுத்தி வருகிறார். அதனால்தான்
மாணவிகள் அவரை நெருக்கமாக
அணுக முடிகிறது. கடந்த ஆண்டு
ஆசிரியர் தினத்தன்று, கோட்டை அரசு
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர்
சில மாணவிகளுக்கு கேக் ஊட்டிவிட,
பதிலுக்கு மாணவிகளும் போட்டிப்போட்டு
அவருக்கு கேக் ஊட்டிவிட
முகச்சுழிப்பின்றி வாஞ்சையுடன்
அதை அனுமதித்தார்.

 

ஓர் இஸ்லாமிய மாணவி, கல்வி கற்பதில் இருந்த தடையை உடைத்து, அவருக்கு உதவியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியில் அவரும் உடைந்து அழுதார். எங்கேயாவது பள்ளியில் உணவு இடைவேளை நேரத்தில் ஆய்வுக்குச் செல்ல நேர்ந்தால், குழந்தைகளுடனேயே தரையில் அமர்ந்து மதிய உணவை எடுத்துக்கொள்ளவும் தயங்கியதில்லை.

மாணவிகளின் அன்பு மழையில்…

இன்னொரு நிகழ்வில்…

 

வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில்,
‘காலையில் மாணவர்கள்; மாலையில்
குழந்தை தொழிலாளர்கள்’ என்ற தலைப்பில்
‘புதிய அகராதி’யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அவருடைய தனிப்பட்ட கவனத்திற்கும்
கொண்டு சென்றிருந்தேன்.
இதுபோன்ற தருணங்களில்,
‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று
ஆங்கிலத்தில் பதில் அனுப்பி விடுவார்.
அன்றும், ‘குழந்தைகளுக்கும் அவர்களின்
பெற்றோர்களுக்கும் நிச்சயமாக உதவுவோம்’
என்று மறுமொழி அனுப்பி இருந்தார்.
ஆனால், அதன் மீதான நடவடிக்கை குறித்து
அன்றைய தினம் அவரிடம் இருந்து
எந்த மறுமொழியும் இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து,
வேடுகாத்தாம்பட்டி பள்ளி விவகாரத்தில்
நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?
என்று கொஞ்சம் சலிப்புடனேயே கேட்டிருந்தேன்.

 

அந்த செய்தியின் அடிப்படையில்
அப்பள்ளியில் எஸ்எஸ்ஏ அதிகாரிகள்,
தொழிலாளர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் மூலமாக முழுமையாக விசாரணை
நடத்தி இருப்பதையும், வீடு வீடாக தணிக்கை
செய்திருப்பதையும் படங்களுடன் எனக்கு
அனுப்பியிருந்தார். ஆக, அவர் பள்ளிகள் மீது
தனி கவனம் செலுத்துகிறார் என்பதில்
எனக்கு எப்போதும் ஐயம் ஏற்பட்டதில்லை.

முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி

ஆனால், அந்தப்பள்ளியில்,
தாய் அல்லது தந்தையை இழந்த
15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
அவர்களுக்கு அரசு உதவித்தொகையைப்
பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
விபத்தில் இறந்திருந்தால்தான் உதவித்தொகை
என்ற நிலையை மாற்றி, எந்த வகையில்
இறந்திருந்தாலும் உதவித்தொகை கிடைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்
என் கோரிக்கை. அதேபோல்
இந்த மாவட்டத்தில் அரசு சார்பில்
ஒரு முதியோர் இல்லம் திறக்கப்பட
வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.
அவ்விரண்டும் இன்னும் அப்படியேதான்
இருக்கிறது என்பதை இதன்
வாயிலாக அவருக்கு நினைவூட்டுகிறேன்.

 

இப்படிச் சொல்வதால் ஆட்சியரால் நமக்கு தனிப்பட்ட ஆதாயம் ஏதும் கிட்டிவிடப்போவதில்லை. நாமும் அந்த இரகத்தினர் அல்லர். அவர் இன்று இந்த மாவட்டத்தில் இருக்கிறார்; நாளை அவர் வேறு மாவட்டத்தில் ஆட்சியர் அல்லது ஏதேனும் ஒரு துறையில் செயலராக இருப்பார். ஆனால், கல்வி நலனில் அவரின் தனித்த ஈடுபாட்டைச் சொல்வதும் பத்திரிகையாளரின் கடமை என்றளவில் குறிப்பிடுகிறேன்.

 

சரி.

 

குறுக்குப்பட்டி சிறுமி காவினியாவுக்கு டி.சி.யும் கிடைச்சாச்சு. அரசுப்பள்ளியில் இடமும் கிடைச்சாச்சு. அதைப்பற்றி அவளுடைய பாட்டி பரமேஸ்வரி நம்மிடம், ”திடீரென்று தாரமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் எங்களுக்கு போன் செய்து, சிறுமி காவினியாவுக்கு டி.சி. கிடைக்கவில்லை என்று கலெக்டருக்கு வாட்ஸ்அப்பில் புகார் செய்தது யார் என்று கேட்டார்கள். அடுத்தடுத்து வேறு சில அதிகாரிகளும் எங்களுக்கு போன் செய்து இது தொடர்பாக கேட்டதால், நாங்கள் பயந்து விட்டோம். நீங்கள்தான் (புதிய அகராதி மற்றும் நக்கீரன்) கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றீர்கள் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால் அதிகாரிகள், கலெக்டர் மேடம் உத்தரவு என்பதால் சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்தோம் என்றார்கள்.

 

பின்னர் நாலைந்து அதிகாரிகளுடன் நாங்களும் எங்கள் பிள்ளையை அழைத்துக்கொண்டு அவள் படித்து வந்த பள்ளிக்குச் சென்றோம். அங்கு காவினியாவை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் மறுநாள் காலையில் வந்து டி.சி. பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். அதன்படி இன்று (ஜூன் 4) எங்களுக்கு டி.சி. கிடைத்தது. கலெக்டரும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், நீங்களும் உதவியிருக்காவிட்டால் எங்கள் பேத்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும். எல்லோருக்கும் நன்றி,” என்றார்.

 

சிறுமியை பள்ளியில் சேர்க்கப்பட்டதற்கான
விண்ணப்பப் படிவத்தையும்கூட நமக்கு
வாட்ஸ்அப்பில் ஆட்சியர் 3ம் தேதி
இரவு 7.59 மணிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
ஒரு செயல்… அதன் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கை என்ன? ஆகிய இரண்டும்
உரியவருக்கு தெரிவிப்பது
முக்கியம் என்பதை, தனது மறுமொழி
மூலம் உணர்த்தி இருந்தார்.
அதுதான் ஆட்சியர் ரோகிணி!

 

– பேனாக்காரன்