Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

(ரசிகன் பக்கம்)

 

 

இளையராஜா…

 

இந்த ஒற்றைப்பெயர் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்குமுள்ள திரையிசை ரசிகனை மீள் உருவாக்கம் செய்த மந்திரம் என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் கதாநாயக பிம்பத்தை உடைத்து, ‘இசையமைப்பாளர் இளையராஜா’ என்றாலே படம் பார்க்க போகலாம் என்ற நிலையை உருவாக்கிய பெருமை, ராகதேவனையே சேரும்.

 

மாட்டு வண்டி போகாத பாதையில் எல்லாம்கூட ராஜாவின் பாட்டு வண்டி போய்ச்சேர்ந்தது நிகழ்கால நிதர்சனம். ‘வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா… வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா…’ என்று அவருக்கு முன்பு இருந்த இசை ஜாம்பவான்களையும், அவருக்குப் பின்னால் வந்த இசைக்கலைஞர்களையும் ‘ஓரம்போ… ஓரம்போ…’ என்று ஓரங்கட்டிவிட்டு, உச்சாணிக்கொம்பில் வீற்றிருக்கும் ஒரே இசைக்கலைஞன் இளையராஜா.

 

அவருக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிக பட்டாளங்கள் இருந்தாலும், சேலத்தைச் சேர்ந்த பரந்தாமன் ரொம்பவே வித்தியாசமானவர்.

”அது ஒரு திருமண மண்டபம். யார் வீட்டு கல்யாணம் என்றெல்லாம் தெரியாது. ஆனால், மண்டபத்தில் கூம்பு வடிவ ஸ்பீக்கரில் இளையராஜா இசை அமைத்த படத்தின் பாடல்கள் ஒலிக்கின்றன. மெய்மறந்து கேட்கிறேன். மண்டபம் காலியாகும் வரை கேட்டுக்கொண்டே இருந்தேன். எங்கெல்லாம் ராஜா அய்யா பாடல்கள் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் மலர்களைத் தேடிச்செல்லும் தும்பிபோல என்னை அறியாமல் சென்று விடுவேன்,” என்கிறார் பரந்தாமன்.

 

சேலம் வாய்க்கால்பட்டறை சிவாஜி நகரை சேர்ந்த பரந்தாமன், மாவட்ட நீதிமன்றத்தில் முதுநிலை தட்டச்சர். மனைவி சுபஷிதா, ஆர்எம்எஸ் ஊழியர். மகன், ஆகாஷ். மகள், அனன்யா காயத்ரி. குடும்பத்தில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரே சக்தி, ‘ராகதேவன் இளையராஜா’ மட்டுமே.

 

இசைஞானியை அவர்கள் ‘அய்யா’ என்றே அழைக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை, இளையராஜா என்பவர் குடும்ப அட்டையில் இல்லாத குடும்ப உறுப்பினர்.

 

வீட்டு வரவேற்பறையில் இளையராஜாவின், மிகப்பிரபலமான அரை இருட்டில் எடுக்கப்பட்ட படத்தை, பரந்தாமன் இசைக்கருவிகளால் வரைந்து இருந்தார். கணினி உதவியுடன் வடிவமைத்து, சுவர் ஓவியமாக மாட்டி வைத்து இருக்கிறார். வீடுகளில் சாமி படங்களுக்கு மேல் ஒரு விளக்கு எரியும். இளையராஜாவின் ஓவியத்திற்கு மேலேயும் ஒரு விளக்கு எரியச் செய்திருக்கிறார். அந்த ஓவியத்தின் பின்னணி படு சுவாரஸ்யமானது.

 

திரை இசையமைப்பாளர்களில் இன்று வரை ‘மேனுவல்’ இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் இளையராஜா ஒருவரே. அவர் பயன்படுத்திய இசைக்கருவிகளைக்கொண்டே ஓவியத்தின் ‘அவுட் லைன்’, உடல் பாகங்களை வரைந்திருக்கிறார் பரந்தாமன்.

”ராஜா அய்யாவுக்கு, ‘ஹார்மோனியம்’ பெட்டிதான் கண் போன்றது. அதனால், ஹார்மோனியத்தின் ஒரு பகுதியை அவரது கண்களின் கருவிழியில் பயன்படுத்தி இருக்கிறேன். ‘வில்லுப்பாட்டுக்காரன்’ என்ற ஒரே ஒரு படத்தில்தான் வில்லுப்பாட்டுக் கருவியை பயன்படுத்தினார். அதன் நினைவாக, வில்லுப்பாட்டு இசைக்கருவியை அய்யாவின் தாடை பகுதியை வரைய பயன்படுத்தினேன்.

 

‘டிரம்ஸ்’ வாத்தியத்தின் ‘சைடு ரிம்’ பகுதியை, அய்யா அணிந்திருக்கும் கண்ணாடி வளைவிலும், ஃபிரேமில் ‘கிளாரினெட்’ கருவியையும், நெற்றியில் வைத்திருக்கும் குங்குமத்திற்கு பதிலாக கடம் கருவியையும் பயன்படுத்தி இருக்கிறேன்.

 

மூக்கு தண்டில், ‘குங்குமச்சிமிழ்’ படத்தில் வரும் ‘மவுத் ஆர்கன்’, ‘சேக்ஸபோன்’, தாடை பகுதியில் ‘தவில்’, ‘அக்கார்டியன்’, வாய் பகுதியில் ‘கஞ்சிரா’, ‘வீணை’, நெற்றிக்கு ‘டபுள் செல்லோ’, ‘கடம்’, ‘புல்புல்தாரா’, ‘வீணை’, ‘அக்கார்டியன்’, ‘சந்தூர்’, ‘மிருதங்கம்’ ஆகிய இசைக்கருவிகளையும் பயன்படுத்தி இருக்கிறேன்.

 

அய்யாவின் உதடுகளை வரைய அவருக்கு மிகவும் பிடித்த ‘கீ போர்டு’, ‘டிரம்ப்பட்’, ‘ரிக்கார்டர்’ கருவிகளையும், கண்ணின் வெள்ளை படலத்திற்கு ‘பேன்ஜோ’, உச்சந்தலையை வரைய ‘வீணை’, ‘கடம்’, ‘சந்தூர்’, ‘கிடார்’, ‘வயலின்’, ‘டபுள் செல்லோ’, ‘செல்லோ’ வாத்திய கருவிகளையும் பயன்படுத்தி இருக்கிறேன்,” என்கிறார் பரந்தாமன்.

 

‘விக்ரம்’ படத்தில்தான் முதன்முதலில் இசையில் கணினி தொழில்நுட்பத்தை புகுத்தியதாக பலர் சொல்கின்றனர். ஆனால், ‘புன்னகை மன்னன்’ படத்திலேயே கணினி தொழில்நுட்பத்தை அய்யா பயன்படுத்திவிட்டார் என்ற தகவலையும் சொல்கிறார்.

 

‘கான்செப்ட் டிராயிங்’ போல, மிகவும் வித்தியாசமான கான்செப்டில் ஒரு சுவர்க் கடிகாரமும் தயார் செய்திருக்கிறார். இதற்காக அவர் மெனக்கெட்ட காலத்தைக்கேட்டாலே அவர் இசைஞானி மீது எவ்வளவு ஈர்ப்பு கொண்டவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆமாம், மூன்றாண்டுகள் மெனக்கெட்டு இந்த ‘கான்செப்ட்’ கடிகாரத்தை தயார் செய்திருக்கிறார்.

 

”சிறு வயதில் அய்யா, ஈத்தையில் புல்லாங்குழல் செய்து வாசித்ததாக அவரது ‘பால் நிலாப்பாதை’ நூலில் குறிப்பிட்டு இருந்தார். அதனால், கடிகாரத்தின் 1 மணியைக் குறிக்க புல்லாங்குழலை பயன்படுத்தினேன். முதன்முதலில் அவர்தான் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார் என்பதால், 2 மணியைக் குறிக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை பயன்படுத்தினேன்.

கிராமஃபோன் தலைமுறை காலத்தில் திரை இசைக்கு வந்து, கேசட் வடிவ காலத்தில் உச்சத்திற்கு சென்று, இப்போது சி.டி., ‘புளூ ரே’ வடிவம் என மூன்று தலைமுறைகளையும் இசையால் ஆள்வதால் ‘3 ஜி’ என்ற பொருளில், 3 மணியை வடிவமைத்திருக்கிறேன்.

 

கடைசியாக ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு முன்பாக, 1983ல் ‘சாகர சங்கமம்’ (தெலுங்கு), 1985ல் ‘சிந்து பைரவி’, 1989ல் ‘ருத்ர வீணை’ (தெலுங்கு), 2009ல் ‘பழசி ராஜா’ (மலையாளம்) ஆகிய நான்கு படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். இந்த விருதுகளை வழங்கிய தேசிய திரைப்பட விழாக்குழுவின் இலச்சினையான தாமரை சின்னத்தை 4 மணியைக் குறிக்க பயன்படுத்தி இருக்கிறேன்,” என்றார்.

 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசம், ஒதிஷா ஆகிய ஐந்து மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து இருப்பதன் அடையாளங்களை 5 மணியிலும், இசைஞானியின் அன்புக்குரிய அவரது அம்மா சின்னத்தாயி காதில் அணிந்திருக்கும் பாம்படம், அவருடைய இஷ்ட தெய்வங்களான கொல்லூர் மூகாம்பிகை, நடராஜர், லட்சுமி மற்றும் ரமணர், சாய் பாபா ஆகிய படங்களை 6 மணியைக் குறிக்க பயன்படுத்தி இருக்கிறார்.

 

எல்லாவற்றுக்கும் மேல், ராகதேவன் முதன்முதலில் இசையமைத்த ‘அன்னக்கிளி’ கான்செப்டை விளக்கும் வகையில், கடிகாரத்தின் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் ஒவ்வொரு ஒரு மணி நேரம் 5 நிமிட இடைவேளையின்போது அன்னமும் கிளியும் சந்தித்திக்கொள்வது போல் கடிகாரத்தை வடிவமைத்து இருப்பது, இசைஞானி மீதான ஈர்ப்பின் உச்சம்.

 

இளையராஜா என்பதன் ஆங்கில எழுத்தில் ‘ஐ’ மற்றும் ‘ஆர்’ ஆகியவற்றை 12 மணியைக் குறிக்க பயன்படுத்தி இருக்கிறார்.

 

”சரி. இசைஞானியை எளிதில் சந்திக்க முடிந்ததா? அதைப்பற்றி சொல்லுங்களேன்” என்றோம்.

 

”அய்யாவின் இசை ரசிகன்
என்பதைத்தாண்டி அவரை சந்திக்கும்
வழிமுறைகள் குறித்தெல்லாம் எதுவும்
தெரியாது. ஆனால், ஒருமுறையாவது
சந்தித்தே ஆக வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்தேன்.

 

அய்யாவின் குரு டி.வி.ஜி. என்கிற
டி.வி.கோபாலகிருஷ்ணன் என்பவரைப் பற்றி
கேள்விப்பட்டு இருக்கிறேன். டி.வி.ஜி. சாருக்கு,
சேலத்தில் உள்ள சீதாராம அய்யர் நெருக்கம்
என்பதை தெரிந்து கொண்டேன்.

 

அவரை சந்தித்தால் நிச்சயமாக
ராஜா அய்யாவை சந்தித்து விட முடியும்
என்ற நம்பிக்கை பிறந்தது.
அதனால், டிவிஜி அய்யா மூலமாக
ராஜா அய்யாவை சந்திக்கும்
ஏற்பாடுகள் நடந்தன.

 

கடந்த 2013ம் ஆண்டு அக்., 3ம் தேதி
ராஜா அய்யாவை நாங்கள் குடும்பத்துடன்
சந்தித்தோம். எங்களுடன், என் மனைவிக்கு
தெரிந்தவர்களும், என் நண்பர்கள் சிலரும்
என ஒரு பட்டாளமே சென்றிருந்தோம்.
சென்னையில் உள்ள அவரது ஸ்டூடியோவில்
45 நிமிடங்கள் சந்தித்து, உரையாடி மகிழ்ந்தோம்.

 

அவரை சந்திக்க செல்லுமுன்,
டிவிஜி சார் எங்களுக்கு 10 கட்டளைகள்
விதித்தார். ராஜா அய்யாவை கூட்டமாக
சந்திப்பது பிடிக்காது. யாரும் காலில்
விழக்கூடாது. அவர் அனுமதியின்றி
யாரும் ஃபோட்டோ எடுக்கக்கூடாது.
குறிப்பாக மியூஸிக் பற்றி விமர்சிக்கக்
கூடாது. இவைதான் அந்த பத்துக்கட்டளைகளில்
மிக முக்கியமானவை.

 

ஆனால், ராஜா அய்யாவை சந்தித்த
அடுத்த நிமிடமே அந்த கட்டளைகளை,
எங்களை அறியாமலேயே நாங்கள்
மீறி விட்டோம். எல்லோருமே அய்யாவின்
காலில் விழுந்து ஆசி பெற்றோம்.
அவ்வாறு செய்வது அவருக்குப் பிடிக்காது.
ஆனால், அவரை சந்தித்த மாத்திரத்தில்
அவரை வணங்கும் உணர்வு எங்கிருந்து
வந்ததென்றே தெரியவில்லை.
என் மகள்தான் முதலில் அவர்
காலில் விழுந்து ஆசி பெற்றாள்.

 

நான் வரைந்திருந்த கான்செப்ட் டிராயிங்,
வடிவமைத்த கான்செப்ட் கடிகாரம்
ஆகியவற்றை பார்த்து ரசித்ததுடன்,
அவற்றில் ஆட்டோகிராபும் போட்டுக்
கொடுத்தார். அவருக்காக தயாரித்த
ஆல்பத்தையும் அவருக்கு பரிசளித்தேன்,”
என்றார் பூரிப்புடன்.

 

”எனக்கொரு ஆசை இருக்கு. ராஜா அய்யா இசையமைத்த ஆயிரம் படங்களில் இருந்தும் ஒவ்வொரு பாட்டை எடுத்து அதில் அவர் புகுத்திய இசை நுட்பங்களைப் பற்றி பேசணும். அதுபற்றி புத்தகமாக எழுதணும்,” என்றவர், ‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத’ என்ற வாக்கியத்துக்கு ஒரே அர்த்தம் ராஜா அய்யா மட்டும்தான்” என்கிறார் பெருமிதத்துடன்.

 

(புதிய அகராதி, 2016 ஜூன் திங்கள் இதழில் இருந்து)

 

பரந்தாமன் அவர்களை தொடர்பு கொள்ள: 9942323065

 

– பேனாக்காரன்.