Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

ரஜினி, அஜித்திற்கு சமூக அக்கறையே இல்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பால் உற்பத்தியில் இந்தியா முன்னணிக்கு வந்துவிட்டாலும், இன்னும் அனைத்து மக்களுக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. 20 விழுக்காடு வளரிளம் பெண் குழந்தைளுக்கு பாலில் உள்ள கால்சியம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்கிறது ஓர் ஆய்வு.

 

அதேபோல் வயதான, கர்ப்பிணி பெண்களுக்கும் கால்சியம் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் போதிய அளவுக்கு பால் அல்லது பால் பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை என்கிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்திலோ சினிமா ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான போக்கு இன்றும் நிலவுகிறது. இது போன்ற செயல்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அடிக்கடி கண்டனம் தெரிவித்து வந்தாலும், தமிழகத்தில் முன்னணி நடிகர்களே அவர்களின் கூக்குரலை கண்டுகொள்வதில்லை.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ‘ஜனதா கேரேஜ்’ பட வெளியீட்டின்போது கட்- அவுட்டுகளுக்கு ரசிகர்கள் யாரும் பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். அத்தகைய நிலை இன்னும் தமிழகத்தில் ஏற்படவில்லை. ஆயினும் இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ‘புதிய அகராதி’ மின்னிதழுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடிகர் அஜீத்குமார் நடிப்பில், ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகும்போது, அவரது ‘கட்அவுட்’களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக ‘விவேகம்’ படம் திரையிடப்படும் வளாகங்களில் இரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம், போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்.

ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். எங்களின் இந்தக் கோரிக்கையை நடிகர் அஜீத்குமாரின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சித்தோம்.

ஆனால் நடிகர் அஜீத்குமாருக்கு ரசிகர் மன்றங்களே இல்லை என்று கூறி அவரை நேரில் சந்திக்கவும், கோரிக்கை மனுவை வழங்கவும் அனுமதி கிடைக்கவில்லை. அவருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும், அவரின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதனால், எங்களது சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய 3 பக்க கடிதத்தை, 4ம் தேதி பதிவு தபால் மூலமாக அனுப்பினோம்.

அதேபோல், கபாலி பட வெளியீட்டின் போதும், நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்கும் மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தோம். ரஜினிகாந்த், எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாததால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் நடிகர் அஜீத்குமாராவது விவேகம் பட வெளியீட்டின் போது சமூக அக்கறையோடு நல்லதொரு அறிவிப்பை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவார் என எதிர்பார்த்திருந்தோம்.

பொன்னுசாமி

எங்களது எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாக முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தனது பெயரில் கணக்கு துவக்கி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் தனது சுயநலத்திற்காக அறிக்கை வெளியிட்டார்.

அஜித்குமார் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த சமூக அக்கறையோடும், பொதுநலனோடும் இன்றைய (23/8/17) தினம் வரை முன் வராதது வேதனையளிக்கிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

உச்சகட்ட நடிகர்களாக இருந்தும் ரசிகர்கள் மீதும், இந்த சமூகத்தின் மீதும் சற்றும் அக்கறையில்லாத சுயநலமிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத் ஆகியோரின் நோக்கமெல்லாம் 100% வணிக நோக்கம் மட்டுமே. ரசிகர்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டால் தங்களுக்கு கட்அவுட் வைத்து தனிமனித வழிபாடு நடத்திட எவரும் இல்லாமல் போய் விடுவார்கள் என்கிற அச்சமும், சுயநலமும் அவர்களுக்கு மேலோங்கி நிற்கிறது.

தமிழர்கள் இனியாவது நடிகர்களுக்கு ரசிகர்களாக இருந்து, விட்டில் பூச்சிகளாக மாறி தங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணாக்க வேண்டாம். சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

பொன்னுசாமியை தொடர்பு கொள்ள: 9566121277 / 9600131725.