Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

ஸ்ரீலங்காவில் இலக்கிய படைப்பாளிகள் அதிகளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதிலும், இஸ்லாமிய சமூகத்தில் நிறைய பேர் எழுத்தாற்றலுடன் இருப்பதையும் அறிவேன். அவர்களுள் புதிய வரவாக, கவிதை உலகில் நாலு கால் பாய்ச்சலில் களம் இறங்கி இருக்கிறார், நுஸ்கி இக்பால். காத்தான்குடியைச் சேர்ந்தவர்.

அவருடைய முதல் படைப்பு, ‘விடியல் உனக்காக…’ கவிதை நூல். இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கட்டடப் பொறியாளரான நுஸ்கி இக்பால், அடுக்கு மாடி கட்டடத்தின் உப்பரிகையில் நின்று உலகத்தைப் பார்க்காமல், சாமானிய மக்களோடு சாமானியராக பயணப்பட்டே, கவிதைகளை வடித்திருக்கிறார் என்பதை இந்நூலில் உள்ள பல கவிதைகள் உணர்த்துகின்றன.

கல்லூரிக்கால நண்பன், பேருந்துப்பயண அனுபவம், நடைபாதைவாசிகளின் துயரம், அகதிகளின் ஓலம், ஒருதலைக்காதல், மதுப்பழக்கத்தின் கொடூரம், உழைக்கும் வர்க்கம் என பாடுபொருள்களாகக் கொண்ட கரு ஒவ்வொன்றும் முத்துக்கள்.

சில கவிதைகளில் சில வரிகள், கற்பனைத்திறன் உச்சம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. (உ.ம்: பட்ட மரத்தில் / பச்சையம் / சுரக்க / வைப்பவன் / தொழிலாளி).

தனிமையில் தவிக்கும் முதியோரின் ஓலத்தைப் பற்றி ஒரு கவிதையில் இப்படி பதிவு செய்கிறார்…

”பாசத்தோடு வளர்த்த பிள்ளை
பாவி நீ
எனக்குத் தொல்லையென்று
தனியே விட்டுப் போகும்

என் சாண் வயிறு
சேதி ஒன்றும் அறியாமல்
என்னை அள்ளித்தின்னும்

பொறுக்கி வந்த மீனை
பிரித்து அறுக்கும்போது
பூனையும் அதற்கு ஏங்கும்
அந்த வயோதிபம் உலையிலே வேகும்”

பல நேரங்களில் மிருகங்களைவிட மனிதன் கொடூரமானவனாகவே இருக்கிறான். நாயிடம் இருக்கும் நன்றியுணர்வை மறந்தும்கூட. தகாத உறவில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்று குப்பைத் தொட்டியில் கிடக்கிறது. அந்த சிசுவின் அழுகுரலுக்கு இரங்கும் நாயின் பரிதாபம்கூட மனிதனிடம் இல்லாததே சமூக அவலத்தின் உச்சம் அல்லவா?!

அதை ஒரு கவிதையில்…

பத்துத் திங்கள்
பதுங்கி இருந்து
இருளை விட்டு
பிண்டம் தள்ள
விழுந்த இடம்
குப்பை மேடு

நாய்கள் கண்டு
கவ்வி இழுத்து
காம்பை நீட்ட
விடியல் உனக்காக…

பசித்த பிண்டம்
புசித்த காம்பு
விடாமல் கொண்டு
உறிஞ்சி அருந்த

நாய்கள் கொண்ட பாசம்கூட
ஆறறிவன் அற்று
எதிரில் நின்று
எட்டிப்பார்க்க
கூட்டத்தில் ஒருவன்
கூவிச்சொன்னான்
பாவி பெத்த பாலகனாக்கும்
குப்பைத்தொட்டி
சேர்ந்து கொண்டான்

குரைத்து ஓடிய
நாயும் சொன்னது…
அழும் குழந்தை
அள்ளித்தூக்கி
பசி தீர்க்க மனமற்ற
மனிதன் நீ
மற்றவனைப் பார்த்து
குரையாதேயென்று.

இப்படி மனிதர்களின் போர்வையில் இருக்கும் விலங்குகளை நன்றியுள்ள ஜீவனின் பார்வையில் சாடுகிறார் நுஸ்கி இக்பால். இஸ்லாமிய இலக்கிய கழகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. முற்றிலும் ‘கிளேஸ்’ தாளில் அச்சிட்டுள்ளது, கவிதையின் உள்ளடக்கத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. நுஸ்கி இக்பால், ஸ்ரீலங்காவின் நம்பிக்கைக்குரிய படைப்பாளிகளுள் ஒருவராக திகழ்வார் என நம்பலாம்.

நூல்: விடியல் உனக்காக…
வெளியீடு: இஸ்லாமிய இலக்கிய கழகம்
விலை: ரூ.300/-
தொடர்புக்கு: +94770390869

– பேனாக்காரன்.