Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தஞ்சையில் வருகிறது ‘எய்ம்ஸ்’!

தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ எனப்படும் அகில இந்திய மருத்துவக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (All India Institute of Medical Sciences), தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேரு பிரதமராக இருந்தபோது, தெற்கு ஆசியா அளவில் மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்றும், அதுவே தனது கனவு என்றும் கூறினார். பின்னர், 1956ம் ஆண்டில் புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.

இது ஒரு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனம். இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி பல் மருத்துவம், செவிலியர் பயிற்சி, துணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. மருத்துவத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் எய்ம்ஸ் நிறுவனத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும் என்று நடுவண் அரசு, கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் மக்களவையில் அறிவித்தது. அதில் தமிழகமும் ஒன்று. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் (செங்கிப்பட்டி), ஈரோடு (பெருந்துறை), புதுக்கோட்டை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் நிறுவனம் கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அறிவிப்பு வெளியிட்டதுடன் பாஜக அரசு இதைப்பற்றி கண்டுகொள்ளாததால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிறகு ஓ.பன்னீர்செல்வம், அதன்பின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பிரதமரை நேரில் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும்படி கோரினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பிரதமரை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினார். இதற்கிடையே, தமிழக அரசு பரிந்துரை செய்த இடங்களை நடுவண் நிபுணர் குழு ஆய்வு செய்தது.

இந்த ஆறு இடங்களில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் நிறுவனம் அமைப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் அதிகளவில் இருப்பதாக, முதல் வாய்ப்பாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஒருவேளை, தஞ்சாவூரில் எய்ம்ஸ் அமைக்கப்படாவிட்டால், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைக்கப்படும் எனத்தெரிகிறது. இந்த இடமும் இல்லாவிட்டால் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பாக புதுக்கோட்டை மாவட்டம் தேர்வு பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டின் மையப்பகுதியாகவும், நீர் வளம், ஒரே இடத்தில் 250 ஏக்கர் நிலமும் கிடைப்பதற்கான வசதிகளும் இருப்பதால் தஞ்சைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், செங்கிப்பட்டியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையமும், 15 கி.மீ. தொலைவில் தஞ்சை விமான நிலையமும் அமைந்துள்ளதும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படாத இடமாகவும் இருப்பதும் செங்கிப்பட்டிக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது

ஏற்கனவே திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்போது தஞ்சையில் எய்ம்ஸ் நிறுவனம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதால், டெல்டா மாவட்டங்களின் மீது மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்துவதும் தெரியவந்துள்ளது.