Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்!

நாயகர்கள் பிறப்பதில்லை.
சூழ்நிலைகளும்
நிகழ்வுகளுமே
நிஜ நாயகர்களை
உலகுக்கு அவ்வப்போது
அடையாளம் காட்டி
விடுகிறது. அப்படி,
நாடு போற்றும் நாயகனாக
ஆனவர்தான்
‘பாயிண்ட்ஸ்மேன்’
மயூர் ஷெல்கே.

மஹாராஷ்டிரா மாநிலம்
மும்பையில் உள்ள
மத்திய வாங்கனி ரயில்
நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேன்
ஆக பணியாற்றி வருகிறார்,
மயூர் சகாராம் ஷெல்கே
என்ற இளைஞர்.
ஏப். 17ம் தேதி,
இந்த ரயில் நிலையத்தில்
2வது நடைமேடையில்
தாயுடன் 6 வயது சிறுவன்
நடந்து சென்று
கொண்டிருந்தான்.
திடீரென்று,
சிறுவன் கால் இடறி,
நடைமேடையில் இருந்து
தண்டவாளத்தில்
விழுந்துவிட்டான்.

 

பதறிப்போன தாய்,
மகனின் அழுகுரல் சத்தம்
கேட்டு மேலும் பதற்றம்
அடைகிறார். குழந்தையின்
மரண ஓலம் வந்த திசையை
அவரால் உணர முடியவில்லை.
அப்போதுதான் அந்த தாய்,
பார்வைத்திறனற்ற
மாற்றுத்திறனாளி என்பதே
தெரியவருகிறது.

தொலைவில்,
அதே பாதையில் ரயில்
வேகமாக வந்து
கொண்டிருப்பதை உணர்ந்த
பாயிண்ட்ஸ்மேன்
மயூர் ஷெல்கே,
மின்னல் வேகத்தில்
குழந்தையை நோக்கி
ஓடிச்சென்று லாவகமாக
தூக்கிப்பிடித்து
நடைமேடையில் போடுகிறார்.
அவரும் கண்ணிமைக்கும்
நேரத்தில் மேடையில்
ஏறி உயிர் தப்பிக்கிறார்.
புறநகர் விரைவு ரயிலும்
அவர்களை அந்த
நொடியில் கடந்து செல்கிறது.

 

இந்த சம்பவத்தை நேரில்
பார்த்தவர்களுக்கு,
உண்மையிலேயே
அவர்களின்
நடுமுதுகுத்தண்டு
ஜில்லிப்பு தட்டியிருக்கும்.
இந்தக் காட்சிகள்
அடங்கிய காணொலியை
ரயில்வே நிர்வாகம்
ட்விட்டர் தளத்தில்
வெளியிட்டுள்ளது.
காணொலியை பார்த்தவர்களே
இப்படியொரு
மயிர்கூச்செறியும் நிகழ்வை
இதற்குமுன் பார்த்திருக்க
மாட்டார்கள்.

இதையடுத்து,
இந்திய ரயில்வே நிர்வாகம்,
மயூரை பாராட்டியுள்ளது.
வாங்கனி ரயில் நிலைய
ஊழியர்கள், அவருக்கு
மலர் மாலை அணிவித்து,
இருபுறமும் நின்று
உற்சாகமாக கையொலி
எழுப்பி வாழ்த்துகளை
தெரிவித்தனர்.
அவரை,
‘உண்மையான ஹீரோ’
என்றும் ரயில்வே நிர்வாகம்
ட்விட்டர் தளத்தில்
புகழ்ந்து எழுதியிருக்கிறது.

 

சமூக ஊடகங்களிலும்
அவரை பலரும் பாராட்டி
வருகின்றனர்.

 

இது தொடர்பாக
மயூர் கூறுகையில்,
”தாயுடன் சென்று
கொண்டிருந்த
ஒரு சிறுவன் நடைமேடையில்
இருந்து தவறி ரயில்
தண்டவாளத்தில் விழுந்து
விட்டதையும்,
அவன் நடைமேடை
மீது ஏற முடியாமல்
தடுமாறுவதையும் கவனித்து
விட்டேன். அதேநேரத்தில்
மும்பையை நோக்கி
உதயன் விரைவு பயணிகள்
ரயில் அந்த பாதையில்,
சொல்லப்போனால்
குழந்தை இருக்கும்
இடத்தை சற்று நேரத்தில்
நெருங்கப்போவதையும்
கணித்து விட்டேன்.

 

நான் அப்போது
60 மீட்டர் தூரத்தில்
இருந்தேன். சிவப்புக்கொடி
காட்டி ரயிலை நிறுத்தலாம்தான்.
ஆனால் ரயில் வந்த வேகத்தில்,
குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்த
முடியாமல் போனால்
குழந்தை என்னாவது
என்ற பதற்றமும் இருந்தது.
அந்த கணத்தில்தான்
எனக்கு என்ன நேர்ந்தாலும்
பரவாயில்லை… குழந்தையை
எப்படியாவது காப்பாற்றுவது
என்று தீர்மானித்துவிட்டேன்.

 

அதன்பிறகு குழந்தையை காப்பாற்ற அவனை நோக்கி ஓடினேன். ஆனாலும் ரயில் நெருங்க நெருங்க பாதி வழியில் எனக்குள் இனம்புரியாத பயமும் தொற்றிக்கொண்டதால் கால்கள் இடறியது உண்மைதான். ஆனாலும் துணிச்சலாக அவனிருக்கும் திசையை நோக்கி ஓடினேன்.

 

அந்த 15 முதல் 20 வினாடிகளில் என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. நான் அந்தச் சிறுவனை காப்பாற்றிவிட்டேனா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு பலரும் என்னை பாராட்டும்போதுதான் நான் அவனை காப்பாற்றிவிட்டேன் என்பதையே உணர முடிந்தது.

 

நான் நினைக்கிறேன்….
இங்கு ஒவ்வொரு செயலும்
காரணம் இல்லாமல்
நிகழ்வதில்லை. அன்று
நான் அங்கு பணியில்
இருந்தது கூட அந்தச்
சிறுவனை
காப்பாற்றுவதற்காகத்தான்
என்று நினைக்கிறேன்,”
என்றார் மயூர்.

 

மயூரின் கண்ணிமைக்கும்
நேரத்து அறிவும்,
அசாத்திய துணிச்சலுமே
ஒரு குழந்தையை காப்பாற்றி
இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ரயில்வே துறையும்,
பொதுமக்களும் வெகுவாக
மயூரை கொண்டாடி
வருகின்றனர்.

#see video

– பேனாக்காரன்