Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

பிளஸ்-2 பொதுத்தேர்வில்
முதல் நாள் நடந்த தமிழ்
மொழிப்பாடத்தேர்வு சற்று
கடினமாக இருந்ததாக மாணவர்கள்
கவலையுடன் தெரிவித்து உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 1, 2019) பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 7082 பள்ளிகளைச் சேர்ந்த 861107 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களோடு சேர்த்து மொத்தம் 887992 பேர் இந்த தேர்வை எழுதுவதாக அரசுத்தேர்வுகள்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 105476 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 40068 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

 

பிளஸ்-2 பொதுத்தேர்வு இதுவரை 6 பாடங்களுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்று வந்தது. நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து பிளஸ்-2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்களுக்கு மட்டும் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, ஒவ்வொரு தேர்வும் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

செய்முறைப் பயிற்சி இல்லாத வினாத்தாள்கள் 90 மதிப்பெண்களுக்கும் (10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்படும்) செய்முறைத் தேர்வுகள் கொண்ட இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களின் வினாத்தாள்கள் 70 மதிப்பெண்களுக்கும் வடிவமைக்கப்படும். அதன்படி இன்று (மார்ச் 1, 2019) நடந்த தமிழ் மொழிப்பாடத் தேர்வு வினாத்தாள் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு விடையளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது.

 

குறுவினா பகுதியில் (அ) பிரிவில்,
நான்கு வினாக்கள் கொடுக்கப்பட்டு,
அதில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு
விடையளிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும்
இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்தப் பகுதியில், 15வது வினாவாக,
”’அன்புடை மரபின் நின்கிளையோடார
வல்சி தருகு வென்’ இதன்கண் அமைந்துள்ள
இறைச்சிப் பொருளைச் சுட்டுக”
என்று கேட்கப்பட்டு இருந்தது.
இந்த வினா, எந்தப் பாடப்பகுதியில்
இருந்து கேட்கப்பட்டது என்றே
பல மாணவர்களுக்குத் தெரியவில்லை.

 

அதேபோல், 17வது வினாவான
சுந்தர காண்டம் என்று பெயர்
வரக்காரணம் என்ன? என்ற கேள்வியும்
இதற்குமுன் கேட்கப்படாமல் முதன்முதலாக
பொதுத்தேர்வில் கேட்கப்பட்டதால் அதற்கும்
விடையளிக்க சற்று கடினமானதாக இருந்தது
என்றும் மாணவர்கள் கூறினர்.
‘ஆ’ பிரிவில் 20வது வினாவான ‘உய்த்து’
என்னும் சொல் உணர்த்தும்
பொருள் யாது? என்ற கேள்வியும்
புதிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.

 

மேலும், பெரு வினா பகுதியில் எதிர்பார்த்ததுபோலவே ‘பால் வண்ணம் பிள்ளை’ தலைப்பில் கதை எழுதும் கேள்வி கேட்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், இப்பகுதியில் ஏனைய வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சொன்னார்கள்.

 

இதுகுறித்து மேல்நிலைப்பள்ளி மூத்த தமிழாசிரியர்களிடம் கேட்டபோது, ”வழக்கமாக தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடத்தேர்வுகளின் வினாத்தாள்கள் மிக எளிமையாகவே வடிவமைக்கப்படும். ஆனால், இந்தமுறை மிக நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே முழுமையாக விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 20 சதவீதம் வரையிலான வினாக்கள் கடினம் என்று சொல்லலாம். சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது சற்று கடினம்.

 

எப்போதும் நெடுவினா பகுதியில் திருக்குறள் பாடப்பகுதியில் இருந்து ஒரு வினா கேட்கப்படும். ஆனால் பொதுத்தேர்வில் அந்தப் பகுதியில் வினா வரவில்லை. அதை எதிர்பார்த்துச் சென்ற மாணவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கும்.

 

கடந்த காலங்களைப்போல் 99 சதவீதம் வரையில் மதிப்பெண்களை நெருங்கி வருவதும் சவாலாகத்தான் இருக்கும். அடுத்தடுத்து வரும் தேர்வுகளும் இப்படித்தான் இருக்கும் என்று தெரிகிறது. தேர்வர்கள் நேரத்தை வீணாக்காமல் எதிர்கால போட்டிகளை மனதில் வைத்துப் படிக்க வேண்டும்,” என்றனர்.

 

– பேனாக்காரன்