Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

‘தடையறத்தாக்க’, ‘மீகாமன்’ வரிசையில்
இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இருந்து
வந்திருக்கும் மற்றுமொரு
சிறந்த படைப்பு, ‘தடம்’.
அண்மைக்காலமாக நல்ல கதைகளை
தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து
இருக்கிறார், அருண்விஜய்.
அந்த பட்டியலில் அவரின்
ஆகச்சிறந்த படங்களுள் ‘தடம்’
படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

நடிகர்கள்:

அருண்விஜய்
தன்யா ஹோப்
ஸ்மிருதி
வித்யா பிரதீப்
யோகிபாபு
பெப்சி விஜயன்
மீரா கிருஷ்ணன்
மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: கோபிநாத்; இசை: அருண் ராஜ்; எடிட்டிங்: ஸ்ரீகாந்த்
இயக்கம்: மகிழ் திருமேனி

 

கதையின் ‘ஒன்லைன்’: ஓருரு இரட்டையர்கள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அந்தக் கொலை வழக்கில் இருந்து சட்ட ரீதியாக விடுதலை செய்யப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதுதான் படத்தின் கதை.

 

அதென்ன ஓருரு இரட்டையர்கள்? (Identical Twins):

 

பெண்ணுக்கு மாதாந்திர சுழற்சியில்
ஒரே ஒரு கருமுட்டை உருவாகிறது.
அதில் ஆணின் ஓர் உயிரணு மட்டும்
சென்று சூல் கொண்டு குழந்தை உருவாகிறது.
மிக அரிதாக சில பெண்களுக்கு
ஒரு சுழற்சியில் இரண்டு கருமுட்டை
உருவாகி, அதில் தனித்தனியாக
ஆணின் உயிரணு செல்லும்போது
இரட்டைக்கரு வளர்கிறது. அதாவது,
இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன.
அவர்கள் உருவ அமைப்பில் ஒத்துப்போனாலும்,
இருவரின் டிஎன்ஏ வேறு
வேறானதாக இருக்கும்.

இவற்றிலும் மிக மிக அரிதாக,
பெண்ணின் கர்ப்பப்பையில் உருவாகும்
ஒரே கருமுட்டை இரண்டாக பிரிந்து
வளரும்போது ஓருரு இரட்டையர்கள்
பிறக்க வாய்ப்பு இருப்பதாக
மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது,
இவர்களின் உடல் அமைப்புகள்
துல்லியமாக ஒத்துப்போகும். அதேநேரம்,
அவர்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளும்
95 சதவீதம் வரை ஒத்துப்போகும்
என்கிறார்கள். ஆனால்,
விரல் ரேகைகள் மாறுபடும்.

 

திரைமொழி:

 

நாயகர்கள் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படங்கள் ஒன்றும் ரசிகர்களுக்கு புதிதல்ல. ஆனால் இதுவரை ஆகிவந்த இரட்டை வேட படங்களை அப்படியே முற்றாகப் புறந்தள்ளிவிட்டு புதிய களத்தில் தடம் பதிக்கிறது இந்த தடம்.

 

கவின் மற்றும் எழில் ஆகிய இரண்டு வேடங்களில் வருகிறார், அருண்விஜய். கவின் பக்கா லோக்கல். சின்னச்சின்ன திருட்டு, பெண்களை ஏமாற்றுவது என கவின் பாத்திரத்தை கன கச்சிதமான உடல்மொழியுடன் அனாயசமாக தூள் கிளப்புகிறார். அவருக்கு நேர் எதிரான பாத்திரத்தில் எழில். வேகமாக வளர்ந்து வரும் கட்டட பொறியாளர். சிறு வயதில் இருந்தே மேட்டுக்குடி சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட பிள்ளை அவர்.

 

படம் தொடங்கிய 40 நிமிடத்திற்கு மேலாக இவ்விரு பாத்திரங்களின் குணாம்சங்கள், அவர்களின் காதல் உள்ளிட்ட காட்சிகள் ரொம்பவே விரிவாக விவரிக்கிறார் இயக்குநர். அவ்வளவுதான் படமா? என்று ரசிகர்கள் கேட்பதற்குள், ஒரு மழை நாள் இரவில் செல்வந்தர் வீட்டுப் பையனை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடுகிறார் அருண்விஜய். கொலையாளி யார் என்று நீட்டிச் சொல்லாமல், அடுத்த ஓரிரு காட்சிகளிலேயே ஒரு செல்ஃபியை வைத்து சந்தேகத்தின்பேரில் எழிலை தூக்கி விடுகிறது காவல்துறை.

 

கொலை நடந்த வீட்டின் மாடியில், சம்பவம் நடந்த நேரத்தில், கொட்டும் மழையில் அருண்விஜய் நின்று கொண்டிருக்கும் செல்ஃபி ஆதாரமே கிடைத்துவிட்டது இதற்குமேல் இந்தப்படத்தில் என்ன சொல்லிவிட முடியும் என ரசிகர்கள் குறைத்து மதிப்பிட்டிருந்தால் நிச்சயம் ஏமாந்து போவார்கள். அந்தளவுக்கு இடைவேளைக்குப் பிறகான காட்சிகளை, யூகிக்க முடியாத சம்பவங்களால் விறுவிறுப்பான திரைக்கதையால் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

 

ஒரே சாயலில் இருக்கும் இருவருமே காவல்துறையில் சிக்கிவிடும்போதும், அந்த இருவரின் டிஎன்ஏ மூலக்கூறுகளும் ஒத்துப்போகும்போதும், விரல் ரேகை போன்ற முக்கிய தடயங்கள் கிடைக்காதபோதும் என கொலையாளியை யார் என தீர்மானிக்க முடியாமல் காவல்துறையை சுற்றலில் விடுகின்றனர் கவினும், எழிலும். காவல் நிலையத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சியை பிரமாதப்படுத்தியிருக்கின்றனர் ஸ்டண்ட் சில்வா மற்றும் அன்பறிவ். இருவரில் ஒருவர் கொல்லப்பட்டு விடுவார் என்ற பதைபதைப்பை ஏற்படுத்தி, அந்த யூகத்தையும் முறியடிக்கிறார் இயக்குநர்.

 

இரண்டாம் பாதி காட்சிகள் பெரும்பாலும் காவல்நிலையம், காவல்துறையைச் சுற்றியே நடந்தாலும் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையவில்லை. காவல்நிலைய காட்சிகளில், விசாரணையின் இயல்பான போக்கில் நிகழும் பின்னடைவுகளால் ஏற்படும் நகைச்சுவை யோகிபாபுவின் காமெடியை விட நன்றாகவே இருக்கிறது. அதற்காக யோகிபாபுவின் பாத்திரத்தையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. கவினுடன் வரும் நண்பன் சுருளி பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவருக்குப் பின்னாலும் கந்துவட்டி சோகம், போலீஸ், கோர்ட்டு என சிக்கல் என யோகிபாபு பாத்திரத்திற்கும் கனம் சேர்த்திருக்கிறார் இயக்குநர். மீரா கிருஷ்ணன் யோகிபாபு, கவின் அருண்விஜயுடன் சேர்ந்து ஏமாற்றும் வேலைகளை நிறைவாகச் செய்திருக்கிறார்.

 

காவல் ஆய்வாளர் ஜிகே பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் பெப்சி விஜயன். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவருக்கு இந்தப் படம் நல்ல ‘கம்பேக்’ எனலாம். மலர் என்னும் பாத்திரத்தில் காவல் உதவி ஆய்வாளராக வரும் வித்யா பிரதீப், அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். உருட்டி மிரட்டும் விழிகளாலேயே உதவி ஆய்வாளரின் பாத்திரத் தன்மையை காட்சி மொழியாக உணர்த்தி விடுகிறார்.

கொலை வழக்கில் தனது மேலதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதைத் தெரிந்து அதை முறியடிக்கத் துடிக்கும்போதும், தன்னையே பகடையாக்கி குற்றவாளிகள் தப்பித்திருப்பதை அறிந்து துடிக்கும்போதும் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார் வித்யா. படத்தில் வரும் இரண்டு நாயகிகளான தன்யா ஹோப், ஸ்மிருதி ஆகியோர் வந்து போகிறார்கள். அவர்களைக் காட்டிலும் வித்யா பிரதீப் ரசிகர்கள் மனதில் நின்று விடுகிறார்.

 

‘தடையறத்தாக்க’ படத்தில் நாயகியின் உள்ளாடையை வைத்து நாயகன், நாயகிக்குமான காதல் உரையாடல்களை அமைத்திருப்பார் மகிழ்திருமேனி. இந்தப்படத்திலும் அதேபோன்ற காட்சி உண்டு. எழில், பெண்களின் உள்ளாடையிலும் கட்டடப் பொறியியல் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் விவரிக்கும் காட்சியில் திரையரங்கமே விசில் சத்தத்தால் அதிர்கிறது.

 

கவினாக வரும் அருண்விஜய், காவல்நிலையத்தில் வரும் ஒரு காட்சியில் பெண்ணின் கர்சீப்பால் முகத்தைத் துடைப்பார். அதை சக ஆண் காவலர்கள் கேலி செய்வார்கள். அப்போது விசாரணைக்காக வந்திருக்கும் பெண் உதவி ஆய்வாளர், வெடுக்கென்று அந்த கர்சீப்பை பிடுங்கி குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிவார். அந்தக் காட்சியிலும், திரையரங்கம் அதிர்கிறது.

 

கவின் ஒருமுறை, தன்னை விரும்பும் ஸ்மிருதியிடம் இருந்து ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் வாங்கிச் செல்வார். அப்போது நாயகி ஸ்மிருதி, ‘கவின்… உங்களுக்கு என்னோட பேரு என்னனாவது தெரியுமா?’ எனும்போதும், அதே பெண் பிறந்த நாள் வாழ்த்து அட்டையைத் தரும்போது, பரிசு எங்கே எனக்கேட்கும் கவினிடம், தான் அணிந்திருக்கும் துப்பட்டாவை விலக்கிக் காண்பிப்பார். அப்போது அவர் கழுத்தில் பரிசுப்பெட்டியின் மீது சுற்றப்பட்டிருக்கும் நாடா முடிச்சிடப்பட்டிருக்கும் காட்சியின் மூலம் நாயகியே தன்னை பரிசாக தந்திருப்பதை உணர்த்தும் காட்சியிலும் வெகுவாக ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.

 

பெரிய இடைவேளைக்குப் பிறகு, அம்மா வேடத்திற்கு இறங்கி வந்திருக்கிறார் சோனியா அகர்வால். இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவான அவர், புகைப்பழக்கம், சூதாட்டத்திற்கு அடிமையாகிறார். கணவருடன் பிரிந்து வாழும் அவரை தன் மகனே சந்தேகப்பட்டதால் உயிரை மாய்த்துக் கொள்கிறார். அவருடைய பாத்திர வார்ப்பு சற்றே நெருடல் ஏற்படுகிறது. என்றாலும், கதையின் தன்மை அப்படியானது என்பதால் ஏற்க முடிகிறது.

 

பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருக்கும் கவின் சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பது, அவரிடமும் சூதாட்டப்பழக்கம் நீடிப்பது போன்ற குணாம்சங்கள் எப்படி வந்திருக்கும் என்பதை, காட்சி மொழியாகவே தர்க்க விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஓருரு இரட்டையர்களின் குற்றச் செயல்கள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்ற உண்மைச் சம்பவங்களையும் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.

 

தொழில்நுட்பம் எப்படி?

 

ஒரு கிரைம் திரில்லர் கதைக்குத் தேவையான எடிட்டிங் வேலைகளை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் இப்படத்தின் எடிட்டர் ஸ்ரீகாந்த். ஒளிப்பதிவும் வேகமான திரைக்கதைக்கு ரொம்பவே துணை புரிந்துள்ளது. இரண்டாம் பாதியில் கதையோடு முழுதாக ஒன்ற வைத்துவிடுகிறது அருண்ராஜின் பின்னணி இசை.

 

வலுவான கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை ஆழமாக பதிவு செய்திருக்கிறது, தடம்.

 

– வெண்திரையான்.