Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

 

உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதோடு, நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டு வருவதாக பெரியார் பல்கலை மீது அதிருப்தி கிளம்பியுள்ளது.

 

நீதிமன்றம், காவல்துறை உத்தரவுகள் எல்லாம் எப்போதுமே விளிம்புநிலை மக்களை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகார பலம், பொருளாதார பலம் கொண்டவர்கள் பெரும்பாலும் எவ்வித சட்டவிதிகளையும் முறையாக பின்பற்றுவதில்லை. அதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல.

பெரியார் பல்கலையில் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். பத்திரிகைளுக்கு பல்கலையைப் பற்றி தவறாக செய்திகள் கொடுத்ததாக அவரிடம் விளக்கம் கேட்டு, அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். இந்தப் புகாரின்பேரில், அவர் ஏப்ரல் 4, 2017ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

இச்சம்பவத்திற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, அதாவது ஜூன் 2017ல் வைத்தியநாதனுக்கு பல்கலை தரப்பில் இருந்து ஒரு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. அதில் மூன்று விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன.

 

முதலாவது குற்றச்சாட்டு, பத்திரிகைகளுக்கு தவறான தகவல்களை தந்தது. அடுத்து, 23 உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக தலா 3 லட்சம் ரூபாய் வசூலித்ததாக துணைவேந்தர் சுவாமிநாதன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது விதிகளை மீறிய செயல் என்பதாகும். மூன்றாவது குற்றச்சாட்டு, பதவி உயர்வுக்காக லஞ்சம் பெற்றதாக வந்த புகாரை பல்கலையே விசாரிக்கலாம் என உயர்கல்வித்துறை அளித்த உத்தரவு பற்றியது.

 

அதன்பிறகு, வைத்தியநாதன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சாத்தப்பிள்ளை தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தன் மீதான சஸ்பெண்ட் உத்தரவே தவறானது எனக்கூறி அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வைத்தியநாதன்

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வைத்தியநாதன் மீதான சஸ்பெண்ட் புகார் குறித்து தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று 3.7.2017ல் தீர்ப்பு அளித்தது. ஆனால் இதுவரை அவர் மீது யாதொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

 

தன் மீதான மூன்று குற்றச்சாட்டு குறிப்பாணைகளையும் விசாரிக்கப்பட்டதற்கான இறுதி அறிக்கை பற்றி வைத்தியநாதன் பலமுறை கேட்டும் பல்கலை நிர்வாகம் உதட்டை பிதுக்கியதோடு சரி. பத்திரிகையில் அவர் சேதி சொன்னதாக கூறப்பட்ட புகார் குறித்து மட்டுமே விசாரித்துள்ளனர். மற்ற இரு குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை.

 

இதற்கிடையே, 20.11.2017ல் உதவி பேராசிரியர் வைத்தியநாதன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அன்றே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பினார். என்றாலும், தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து 6 மாதத்திற்குள் விசாரித்து இறுதி அறிக்கை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை இதுவரை பின்பற்றாததால் உயர்நீதிமன்றத்தை அவமதித்ததாக பெரியார் பல்கலை மீது வைத்தியநாதன் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

 

இது இப்படி இருக்க, முன்னாள் துணைப்பதிவாளர் விவகாரத்திலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பெரியார் பல்கலை மறுப்பதாக பல்கலை வட்டாரத்தில் கூறுகின்றனர்.

 

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர், இப்பல்கலையில் கடந்த 8.5.2000ம் தேதி உதவி பதிவாளராக பணியில் சேர்ந்தார். அவர் 2006ல் துணை பதிவாளராக பதவி உயர்வும் பெற்றார். இந்நிலையில் அவர் உரிய அனுமதியின்றி கல்வியியல் கல்லூரி தொடங்கியது, போதிய கல்வித்தகுதி இல்லாதது, அனுமதியின்றி கார் வாங்கியது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2012ம் ஆண்டு, அப்போது இருந்த துணைவேந்தர் முத்துச்செழியன் அவரை டிஸ்மிஸ் செய்தார்.

சரவணன்

இந்த உத்தரவை எதிர்த்து சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய நியமனத்தில் தவறு இல்லை என்றும், மீள்பணியமர்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், இன்றுவரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரியார் பல்கலை அமல்படுத்தாமல் காலம்தாழ்த்தி வருகிறது.

 

இது தொடர்பாக அனைத்துப்பல்கலை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நம்மிடம் பேசுகையில், துணைப்பதிவாளர் சரவணன் பெற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பல்கலை நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அதைப்பற்றி அதற்குமேல் பேச முடியாது என்று தற்போதைய துணைவேந்தர் குழந்தைவேல் கைவிரித்துவிட்டதாகவும் கூறினார். ஆனால் மேல்முறையீடும் செய்யாமல் வேண்டுமென்றே பல்கலை நிர்வாகம் காலம் கடத்துவதாகவும், இதன் பின்னணியில் அரசியலும், ஜாதி பாகுபாடும் இருப்பதாகவும் அந்த நிர்வாகி கூறினார்.

 

அதேபோல், மேட்டூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரியில் பணியாற்றி வந்த 15 தொகுப்பூதிய ஆசிரியர்கள், தங்களை பணி வரன்முறை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்து, தங்களுக்கு சாதகமாக தீர்ப்பைப் பெற்றனர். இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதிலும் பெரியார் பல்கலை திட்டமிட்டே இழுத்தடித்து வருகிறது. எங்கே நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடுவோமே என அச்சப்பட்டு, பெயரளவுக்கு தொகுப்பூதிய ஆசிரியர்களிடம் இருந்து கல்விச்சான்றிதழ்களை மட்டும் சரிபார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆசிரியர் நியமனங்களில் ஊழல், தகுதியே இல்லாதவர்களுக்கு துறைத்தலைவர் பதவி, புகாரில் சிக்கியவருக்கு டீன் பதவி, என பல்வேறு கோமாளித்தனங்களை அரங்கேற்றி வரும் பெரியார் பல்கலை நீதிமன்ற அவமதிப்பிலும் அதே தொணியில் நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக பல்கலை பேராசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குமுறி வருகின்றனர்.

 

– பேனாக்காரன்.

Leave a Reply