Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

 

சேலம் அருகே, நடந்து முடிந்த தேமுதிக பிரமுகர் படுகொலையின் பின்னணியில் , சமூகத்தை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). விவசாயி. சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு வாகனமும் ஓட்டி வந்தார். தேமுதிக கட்சியில் சில ஆண்டுகள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (32). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கலியமூர்த்தி

கடந்த ஆகஸ்ட் 17, 2018ம் தேதியன்று இரவு 10 மணியளவில் தன் மனைவி ஆலயமணி, மகன்கள் இருவரையும் திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வதற்காக வாடகை காரில் ஏற்றி, வழியனுப்பி வைத்தார் கலியமூர்த்தி. அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு நேரப்போகும் விபரீதம் குறித்து அப்போது அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை.

 

‘எப்போதும்போல வாசலில் படுத்துத்தூங்காமல் வீட்டுக்குள் போய் தூங்குங்க மாமா…’ என்று காரில் கிளம்பும்முன் மனைவி சொன்னதுதான் கலியமூர்த்திக்கு வேதவாக்கு. இரவு 10.45 மணியளவில் வீட்டுக்குள் போய் கட்டிலில் படுத்துத் தூங்கினார்.

 

 

கலியமூர்த்தி வைத்திருக்கும் கறவை மாட்டில் பால் கறக்க தினமும் காலையில் அவருடைய சித்தப்பா மனைவி காங்கம்மாள் அங்கு வருவது வழக்கம். ஆகஸ்ட் 18ம் தேதி காலை 6 மணியளவில், கலியமூர்த்தி வீட்டுக்கதவு லேசாக திறந்து இருப்பதை பார்த்து உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே ரத்தம்கூட உறையாத நிலையில், கலியமூர்த்தி ரத்தசகதியாக நிர்வாண நிலையில் சடலமாக தலைகுப்புற கிடந்தார். பின்பக்க கழுத்து, முதுகு, தலை, மார்பு என பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. வாசல் அருகே இருந்த ஃபிரிட்ஜ், பக்கவாட்டு சுவர் என எங்கும் ரத்தம்… ரத்தம்…

 

அதிர்ச்சியில் இருந்து விலகாத காங்கம்மாள் கணவர் கோவிந்தன், அவருடைய தம்பி வெள்ளையன் ஆகியோரிடமும் கூற அலறியடித்தபடி ஓடி வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் சடலமாக…

 

அன்று காலை 6.30 மணிக்கெல்லாம் ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கலியமூர்த்தி வட்டித்தொழிலும் செய்து வந்தார். பணம் வைத்து தாயம் விளையாடும் பழக்கமும் உண்டு. அதனால் கொடுக்கல் வாங்கல் ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இந்த கொலை நடந்திருக்குமோ என்றுகூட காவல்துறையினர் விசாரித்தனர். கலியமூர்த்தி சற்று கணத்த உடலுடன் இருந்தாலும் யாரிடமும் அதிர்ந்துகூட பேசியதில்லை என்று ஒட்டுமொத்த ஊர்க்காரர்களும் சொன்னதோடு, மனைவி ஆலயமணியின் நடத்தை பற்றியும் சில தகவல்களை சொல்லியுள்ளனர்.

 

ஆலயமணி யார் யாரிடம் பேசினார் என்ற செல்போன் விவரங்களை சேகரித்தனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரைச் சேர்ந்த குமார் என்கிற தேன்குமார் என்பவருடன் ஆலயமணி தினமும் மணிக்கணக்கில் பேசியிருப்பதை போலீசார் மோப்பம் பிடித்தனர். கலியமூர்த்தி கொலை செய்யப்பட்டபோதும் ஆலயமணிக்கு குறிப்பிட்ட சில எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் சென்றுள்ளன.

 

அவரை அழைத்து வழக்கமான விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஆலயமணி சென்றபோது, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் வேன் டிரைவர் தேன்குமாருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கொலை நடந்த கலியமூர்த்தியின் வீடு

அந்த வேனில்தான் ஆலயமணியும், மகளிர் குழுக்களைச் சேர்ந்த சிலரும் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஆலயமணியின் பர்ஸ் தொலைந்து போனதால், உடனடியாக டிரைவர் தேன்குமார்தான் கைச்செலவுக்காக அவருக்கு தன் பாக்கெட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார்.

 

இப்படி ஆரம்பித்த பழக்கம்தான், தேன்குமாரும் ஆலயமணியும் ஈருயிர் ஓருடலாகும் வரை நெருக்கமானது. தேன்குமாரும் காதல் திருமணம் செய்தவர்தான். மனைவி ஊரில் இல்லாதபோது ஆலயமணியை தன் வீட்டுக்கே வரவழைத்து பலமுறை ‘நெருக்கமாக’ இருந்துள்ளனர். அதேபோல், அர்த்த ராத்திரியில்கூட தேன்குமாரை தன் தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து பலமுறை ஆலயமணி அவருடன் ‘நெருக்கமாக’ இருந்துள்ளார்.

சுவர், குளிர்சாதனப்பெட்டி மீது ரத்தம் உறைந்து கிடைக்கும் காட்சி

தேன்குமாருக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆலயமணி மகளிர் சுய உதவிக்குழு மூலமாக வங்கியில் இருந்து கடன் பெற்றும், தன் நகைகளை கழற்றிக்கொடுத்தும் உதவியிருக்கிறார். சமீபத்தில்கூட 11 பவுன் நகைகளை தேன்குமாருக்கு கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில், கலியமூர்த்திக்கு மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிட்டது என்றும், ஆனாலும் குழந்தைகளின் நலன் கருதி அதை கண்டும்காணாமல் இருந்து விட்டதாகவும் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள்.

 

என்றாலும், தேன்குமாருடன் ‘தொடர்பு’ ஏற்பட்ட இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆலயமணி, கணவர் ‘அழைத்தாலும்’ அவருக்கு இணங்கவில்லை என்கிறது போலீஸ் தரப்பு. இந்த நிலையில்தான் தேன்குமார், ‘என் பொண்டாட்டி மரியாதையே கொடுக்க மாட்டேன்கிறா. போடா வாடானுதான் பேசறா. உன்னோடு வாழ்வதுதான் பிடிச்சிருக்கு. கடைசி வரை உன்னை காப்பாற்றுவேன்,’ என்று ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

தேன்குமாரின் குழைவான பேச்சில் ஏற்கனவே கிறங்கிப் போயிருந்த ஆலயமணி, அதற்கும் ஒப்புக்கொண்டார். ”இவன் (கலியமூர்த்தி) உசுரோட இருக்கற வரைக்கும் நம்மால நிம்மதியா இருக்க முடியாது. எத்தனை நாளைக்குதான் பயந்து பயந்து சந்திக்கறது… பேசாமல் அவனை போட்டுரு குமாரு…,” என்று ஆலயமணிதான் தேன்குமாருக்கு யோசனை கொடுத்துள்ளார்.

 

இதன்பிறகுதான் கலியமூர்த்தியை போட்டுத்தள்ள தேன்குமார் திட்டம் தீட்டுகிறார். பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத தேன்குமார், கொலையும் நடக்க வேண்டும்; அதேநேரத்தில் தன் மீது ரத்தக்கறை படிந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்திருப்பதை பார்த்து போலீசாரே திகைக்கின்றனர்.

 

 

கலியமூர்த்தியை காலி பண்ண வேண்டுமானால் சிறுவர்களை வைத்துதான் காரியத்தை முடிக்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டுள்ளார். சிறுவர்களுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது என்பதோடு, சீக்கிரம் விடுதலை ஆகிவிடுவார்கள். தீர்த்துக்கட்டுவதற்கான செலவும் குறையும் என்றெல்லாம் தேன்குமார் திட்டமிட்டுள்ளார்.

 

இதையடுத்து, கள்ளக்குறிச்சி ஏமப்பேரைச் சேர்ந்த சூர்யா, ஹரிகிருஷ்ணன் (19) ஆகியோரை இதற்காக ஒப்பந்தம் செய்கிறார். கொலைக்கு அவர்களும் புதியவர்கள்தான். இவர்கள் இருவருமே பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்கள்.

ஆலயமணி

 

கடந்த ஜூலை மாதம் புத்தூரில் தேர்த்திருவிழா நடந்தது. அப்போதே அவர்கள் கலியமூர்த்தியை தீர்த்துக்கட்ட இரவு நேரத்தில் கத்தியுடன் வீட்டுக்கு வந்துள்ளனர். ஆனால் நாய் குரைத்து காட்டிக்கொடுத்ததால், திடுக்கிட்டு எழுந்த கலியமூர்த்தி ‘திருடன் திருடன்’ என கூச்சல்போட, அவர்கள் தலைதெறிக்க தப்பி ஓடிவிட்டனர். இல்லாவிட்டால் அன்றைக்கே கலியமூர்த்தியின் கதை முடிந்திருக்கும் என விவரித்துள்ளார் ஆலயமணி.

 

கொலை நடந்த இடத்தில் நாமும் நேரில் பார்வையிட்டோம். அங்கே இருந்த கலியமூர்த்தியின் சித்தப்பாக்கள் கோவிந்தன், வெள்ளையன் ஆகியோரிடம் பேசினோம். அவர்களும் கலியமூர்த்தி வீட்டுக்குள் ஒரு மாதத்திற்கு முன்பு திருடர்கள் வந்ததை ஒப்புக்கொண்டனர். ஆனால், அவரை கொல்வதற்கான முயற்சிதான் அது என்பது அப்போது இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

 

இதற்கிடையே சூர்யா என்ற சிறுவன் இடையில் கழன்றுகொள்ளவே, அவனுக்குப் பதிலாக ஏமப்பேரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்ற பதினாறு வயது சிறுவனை தன்னுடைய கொலை திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் தேன்குமார். இதற்காக ஒரு மாதமாக ஆதிகேசவனுக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் மதுபானங்களை வாங்கிக் கொடுத்து போதையிலேயே வைத்திருந்திருக்கிறார். அதோடு, கஞ்சா போதைக்கும் பழக்கப்படுத்தி இருந்தார் தேன்குமார். கேட்டபோது மதுவும், கஞ்சாவும் கிடைப்பதால் சிறுவன் ஆதிகேசவன் தேன்குமாரிடம் பணம் ஏதும் கேட்கவில்லை.

தேன்குமார்

ஐடிஐயில் ஏசி மெக்கானிக் படித்துள்ள ஹரிகிருஷ்ணன் மட்டும் கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டினால் என்ன தருவீர்கள்? என தேன்குமாரிடம் டீல் பேசியிருக்கிறான். அதற்கு தேன்குமார், ‘கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டினால் அவனுடைய மனைவி ஆலயமணியையும், சொத்துகளையும் நான் சொந்தமாக்கிக் கொள்வேன். கலியமூர்த்தி வைத்திருந்த டாடா ஏஸ் வாகனத்தை உனக்குத் தந்து விடுகிறேன்,’ என்று சத்தியம் செய்திருக்கிறார் தேன்குமார்.

 

இதன் பிறகுதான் கலியமூர்த்தியை ஆகஸ்ட் 17, 2018ம் தேதி இரவு தீர்த்துக்கட்டுவது என்று நாள் குறித்தனர். ஆதிகேசவனும், ஹரிகிருஷ்ணனும் நயன்தாராவின் தீவிர ரசிகர்களாம். அன்றைக்கு அவர் நடித்த, ‘கோலமாவு கோகிலா’ படம் வெளியாவதால் அதை பார்த்துவிட்டு, அன்று இரவே காரியத்தை முடித்துவிடலாம் என்று சொன்னதால் அந்த தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.

 

ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ஆலயமணி தன் மகன்களை அழைத்துக்கொண்டு ஆகஸ்ட் 17ம் தேதி இரவு திருநள்ளாறுக்குச் சென்றுவிட்டார்.

 

சம்பவத்தன்று மாலையில் சின்னசேலத்தில் ஒரு தியேட்டரில் தேன்குமார், சிறுவன் ஆதிகேசவன், ஹரிகிருஷ்ணன் மூவரும் ‘கோலமாவு கோகிலா’ படம் பார்த்தனர். படம் முடிந்து இரவு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தலைவாசல் நோக்கி வருகின்றனர். வரும் வழியில் அம்மைஅகரத்தில் மூவரும் மது மற்றும் கஞ்சா ஏற்றிக்கொண்டனர். பின்னர் மேல்நாரியப்பனூரில் உள்ள பிரபல சர்ச் வளாகத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கே மீண்டும் மது அருந்தினர். பின்னர் அங்கேயே தூங்கியும் விட்டனர்.

 

அதிகாலை 2.30 மணியளவில் அவர்களை எழுப்பிய தேன்குமார் தானே வண்டி ஓட்ட, இருவரும் பின்னால் அமர்ந்து தலைவாசல் புத்தூர் நோக்கி வந்தனர்.

ஹரிகிருஷ்ணன்

ஆகஸ்ட் 18ம் தேதி. அதிகாலை 3.15 மணி. வீட்டுக்குள் கலியமூர்த்தி கட்டிலில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். தேன்குமார் மிகத்தந்திரமாக காவல் காப்பதாக கூறிவிட்டு வீட்டுக்கு வெளியிலேயே நின்று கொண்டார். ஆதிகேசவனும், ஹரிகிருஷ்ணனும் மட்டுமே உள்ளே நுழைந்ததும் வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்த பல்பை கழற்றிவிட்டனர்.

 

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கலியமூர்த்தியை தலையணையால் ஆதிகேசவன் அமுக்க, திமிறியபடி கலியமூர்த்தி புரள, பின்பக்க கழுத்து, தலை, முதுகு என 14க்கும் மேற்பட்ட இடங்களில் தன்னுடைய கத்தியால் குத்தியுள்ளார் ஹரிகிருஷ்ணன். அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் கலியமூர்த்தி வெளியே ஓடிவர முயற்சிக்க, ஆதிகேசவன் காலை வாறிவிட கதவருகே குப்புற விழுந்தார் கலியமூர்த்தி.

 

முன்பக்க கழுத்து, முகம், மார்பு என இருவரும் சரமாரியாக குத்திக் கொன்றனர். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் கத்திக்குத்து விழுந்ததால் ரத்தம் அதிகளவில் பீறிட்டு வெளியேறியுள்ளது. கதவருகே இருந்த ஃபிரிட்ஜ், பக்கவாட்டு சுவரில் எல்லாம் ரத்தம் தெறித்துக் கிடந்தது.

 

அடிக்கடி ஆலயமணி வீட்டுக்கு தேன்குமார் சென்று இருந்ததால் அவரைப் பார்த்து நாய் குரைக்கவில்லை. மற்றவர்கள் மீது பாய்ந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பிஸ்கெட்டுகளை வாங்கிச் சென்று இருந்தனர். அதனால் இந்த முறை நாய் குரைக்கவே இல்லை.

 

”கம்ப்ரஸர் ஓடிக்கொண்டு இருந்ததால் எங்களுக்கு என்ன நடந்தது என்று கொஞ்சம்கூட சத்தம் கேட்கவில்லை. ஆனாலும், சம்பவ இடத்துக்கு பக்கத்திலயே வீடு இருந்தும் எப்படி சத்தம் கேட்காமல் இருக்கும்? என்று போலீசார் எங்களை அடித்துக் கேட்கின்றனர். கலியமூர்த்தி கொலை பற்றி நாங்கள்தான் தகவல் கொடுத்தோம். கொலையாளிகளை பிடிக்க எங்களுக்கு மட்டும் விருப்பம் இல்லாமல் போகுமா?,” என்கின்றனர் கலியமூர்த்தியின் சித்தப்பாக்களான வெள்ளையனும், கோவிந்தனும்.

 

தலையணையால் கலியமூர்த்தியை அமுக்கி இருந்தபோது ஹரிகிருஷ்ணன் குத்தியதில் ஒரு குத்து ஆதிகேசவனின் கையிலும் இறங்கியுள்ளது. காரியத்தை கச்சிமாக முடித்துவிட்டு வீட்டு பின்பக்கமாக தப்பிச்செல்லும்போது ஆதிகேசவனின் கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்த ரத்தம் வழியெங்கும் சொட்டு சொட்டாக சிதறி இருந்தது.

 

கலியமூர்த்தியின் கதையை முடித்த பிறகு, ஆலயமணியை செல்போனில் தொடர்பு கொண்ட தேன்குமார், ‘காரியம்லாம் கச்சிதமாக முடிஞ்சது. இனி நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே. கோயிலில் இருந்து நீ எதுவும் தெரியாததுபோல வீட்டுக்கு வந்துடு. மத்தத காலையில பேசறேன்,’ என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஆலயமணி, ‘அப்பாடா… இப்பதான் எனக்கு நிம்மதி கிடைச்சிருக்கு…,’ என்று கூறியிருக்கிறார்.

 

ஏமப்பேருக்குத் தப்பிச்சென்ற அவர்கள், அங்குள்ள ஏரியில் அமர்ந்து மீண்டும் மது குடித்துள்ளனர். ரத்தச்சகதியாக இருந்த சட்டையை இருவரும் கழற்றி தீயிட்டு எரித்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய ஒரு கத்தியை அந்த ஏரியில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். தேன்குமார் பயன்படுத்திய கத்தி மீட்கப்படவில்லை.

 

ஆகஸ்ட் 18ம் தேதி காலையில் இந்த கொலை குறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் 6.30 மணியளவில் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது வரை ரத்தம் உறையாமல் அப்படியே இருந்தது.

 

சம்பவ இடத்தில் இருந்து சில தடயங்களை சேகரித்த போலீசார், ஃபாரன்ஸிக் லேப் டெஸ்டுக்காக ரத்தம் தோய்ந்த சிமெண்ட் காரையையும் கொஞ்சம் பெயர்த்து எடுத்துக் கொண்டனர். பிரேத பரிசோதனையில் கலியமூர்த்தியின் உடலில் மொத்தம் 34 இடங்களில் கத்திக்குத்து இருந்ததும், பல இடங்களில் 4 அங்குல ஆழம் வரை கத்திக்குத்து இறங்கியிருப்பதும் தெரிய வந்தது.

 

ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல்பாண்டியன், கேசவன் (ஆத்தூர் டவுன்), சரவணன் (ஆத்தூர் ஊரகம்) ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் கலியமூர்த்தியின் மனைவி ஆலயமணியை அழைத்து விசாரித்ததில் கொலையில் அவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது.

 

அதன்பின், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள் போல சுற்றிக்கொண்டிருந்த ஆதிகேசவனையும், ஹரிகிருஷ்ணனையும் தூக்கிய போலீசார் முழு வாக்குமூலத்தை பதிவு செய்தனர். தேன்குமார் மட்டும் போலீசில் சிக்காமல் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் 21ம் தேதி சரணடைந்தார்.

 

சிறுவன் ஆதிகேசவன் கடந்த 20ம் தேதி சேலம் சிறுவர் காப்பகத்திலும், ஹரிகிருஷ்ணன் ஆத்தூர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

 

கொலை குற்றத்திற்கு இருவருமே புதியவர்கள். மேலும், ஏமப்பேர் ஏரியில் வைத்து ஆதிகேசவனுக்கு தேன்குமார் 500 ரூபாய் கொடுத்து கைச்செலவுக்கு வைத்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். நிலைமை சரியானவுடன் சொன்னபடி டாடா ஏஸ் வாகனத்தை தந்து விடுகிறேன் என்று ஹரிகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு தலைமறைவாகி விடுவோம் என்று கூறிவிட்டு தேன்குமார் அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

 

”நான் கூலிப்படை எல்லாம் கிடையாது. ஆனால் முதன்முதலில் செய்த இந்த கொலைக்கு நான் வாங்கிய முதல் கூலி 500 ரூபாய்தான் என்றும் ஆதிகேசவன் அப்பாவியாக வாக்குமூலத்தின்போது கூறினான்,” என்கிறார்கள் போலீசார். நாடு முழுக்கவே இப்போது கொடுங்குற்றங்களை நிறைவேற்ற ரவுடி கும்பல் சிறார்களை பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. அதே உத்தியைத்தான் தேன்குமாரும் பின்பற்றி இருக்கிறார்.

 

ஆதிகேசவனும், ஹரிகிருஷ்ணனும் போலீசில் சிக்கியதை அறிந்த தேன்குமார் மிக சாதுர்யமாக கடந்த 21ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

இந்த வழக்கில் தேன்குமார் முதல் குற்றவாளியாகவும், ஹரிகிருஷ்ணன், ஆதிகேசவன் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது குற்றவாளியாகவும், ஆலயமணி குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.