Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இன்று மாலை அவர், வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்கும்படி, பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, இன்று இரவு 8: 55 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

”பொதுவாக இரவு நேரத்தில் யாரையும் பரோலில் விடுவிப்பது இதுவரை நடைமுறையில் இருந்ததில்லை. சர்ச்சைக்குரிய வழக்கில் தொடர்புடையவர் என்பதோடு, சென்சிடிவ் ஆக எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே பேரறிவாளன் இரவு நேரத்தில் விடுவிக்கப்பட்டார்,” என்கிறார்கள் கியூ பிரிவு போலீசார்.

விடுதலையான பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மூன்று காவல்துறை வாகனங்களும் பாதுகாப்புக்கு சென்றன.

பரோலில் விடுவிக்கப்பட்டாலும், பேரறிவாளனுக்கு சில கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அவர், சிறையில் அளிக்கப்பட்ட முகவரியில் தான் தங்கி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கூடாது. ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளன. அதேநேரம், தலைவர்களை சந்தித்துப் பேச தடையேதும் விதிக்கப்படவில்லை.