Monday, November 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’?

பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் அந்தஸ்தில் ஒருவரை தமிழக அரசு நியமித்திருப்பதன் மூலம், பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்து வரும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு, தமிழக அரசு மறைமுகமாக கடிவாளம் போட்டுள்ளது. இதன் பின்னணியில் தனியார் பள்ளிகளின் அழுத்தமும், காண்டிராக்டர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சபீதா ஐஏஎஸ், கடந்த மார்ச் மாதம் அதிரடியாக மாற்றப்பட்டார். உடனடியாக அந்த பதவிக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியராக இருந்தபோதே மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து இருந்ததால், அவரால் பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் – உதயச்சந்திரன் ஆகியோர் கூட்டணியில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்தன. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களின் அதிரடியில் முக்கியமானது. யார் முதல் மதிப்பெண் பெற்றனர் என்ற விவரங்களையோ, சாதனை மாணவர்களின் புகைப்படங்களையோ ஊடகங்களில் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பு, பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. அதேநேரம், ரிசல்டை காட்டி, காலங்காலமாக அட்மிஷன்களை வாரி குவித்து வந்த பல்வேறு ‘கோழிப்பண்ணை’ வணிகப்பள்ளிகளுக்கும் பலத்த அடியை ஏற்படுத்தின. அரசு உத்தரவை மீறி சில பள்ளிகள், சாதனை மாணவர்களின் படங்களுடன் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டபோது, சம்பந்தப்பட்ட பள்¢ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கெடுபிடிகளால் தனியார் பள்ளிகளும் ரொம்பவே கலங்கிப்போயின.

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது 37 முக்கிய அறிவிப்புகள் வெளியிட காரணமாக இருந்தவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முடக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், உதய ச்சந்திரன் பொறுப்புக்கு வந்த உடன் புத்துயிர் பெற்றது. அந்த நூலகத்திற்கு ரூ.5 கோடியில் புதிய நூல்கள் வாங்கப்படும் என்றார்.

ரூ.3 கோடியில் எல்லா மாவட்டங்களிலும் அரசு புத்தகக் கண்காட்சிகள், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் தனி இணையதளம், மலைப்பகுதிகளில் புதிதாக 30 தொடக்கப்பள்ளிகள், கீழடியில் சிந்து சமவெளி நாகரீகம் பேசும் நூலகம் போன்றவை முக்கியமான அறிவிப்புகளுக்கும் அடித்தளமிட்டார்.

அது மட்டுமில்லாமல், பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு, மேல்நிலை வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு போன்ற புதிய முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலைக் கல்வித்திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) திட்டங்களின் கீழ் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நாட்களில் வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை, விடுமுறை நாட்களில் வ-ழங்கப்படும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தார். மேலும், அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கால அட்டவணையையும் கொண்டு வந்தார்.

இப்படி பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களுக்கு கர்த்தாவான உதயச்சந்திரன் மீது இந்த அரசு க்கு எந்த இடத்தில் விரிசல் வந்தது? கடந்த மாதம் அவரை வேறு துறைக்கு மாற்றுவதற்கான கோப்புகள்கூட நகர்ந்ததாகச் சொல்லப்பட்டனவே.

திடீரென்று உதயச்சந்திரன் ஐஏஎஸ் மீது அரசின் அதிகார மையம் அமில பார்வையை வீச காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தபோது, ஆளும் தரப்பினருக்கு ‘ப’ வைட்டமின் பாய்வதற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் பெரும் தடையாக இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

என்னதான் அரசுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் 35 விழுக்காடு வரை மறைமுகமாக ஆதாயம் அடையலாம் என்றாலும், ஊழியர் இடம £ற்றம், பதவி நியமனம் போன்றவற்றில்தான் சுடச்சுட சில்லரைகளை புரட்ட முடியும் என்பதை தெரிந்தவர்கள்தானே அரசியல்வாதிகள். அவ்வகை ஆதாயங்களுக்கு உதயச்சந்திரனின் நடவடிக்கைகள் பெரும் இடையூறாக இருந்துள்ளன.

முட்டுக்கட்டை 1: கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வை, 100 விழுக்காடு ஒளிவு மறைவற்ற கலந்த £ய்வாக நடத்திக் காட்டினார், உதயச்சந்திரன். தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிட விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. எந்தெந்த இடங்களுக்கு யார் யார் இடமாற்றம் கேட்டுள்ளனர் என்ற விவரங்களும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டது.

கலந்தாய்வின்போது, சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாற்றம் நடந்தது. இதற்கு முன்பும் ‘வெளிப்படையான கலந்தாய்வு’ நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், திரை மறைவு ‘உடன்பாடு’கள் ஏராளமாக இருந்தை ஆசிரியர்களே ஒப்புக்கொள்கின்றனர். இதுபோன்ற கலந்தாய்வின்போது பெருந்தொகையை கல்லா கட்டிவிடும் அதிகார வர்க்கத்திற்கு இந்த முறை ஏமாற்றமே.

முட்டுக்கட்டை 2: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் பல கோடி ரூபாய்க்கு டெண்டர் போகும்.

புத்தகங்கள், நோட்டுகளை அச்சிட்டு வழங்க அரசுப்பாடநூல் கழகம் இருந்தாலும், தனியார் அச்சகங்களுக்கே இப்பணிகள் அனைத்தும ஒப்பந்தம் கொடுக்கப்படுவதுதான் இதுவரையிலான நடைமுறை. இந்த எழுதப்படாத நடைமுறைக்கும் ‘செக்’ வைத்த உதயச்சந்திரன், இனிமேல் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை அரசுப் பாடநூல் கழகமே அச்சிடும் என்று அறிவித்தார்.

முட்டுக்கட்டை 3: பள்ளிகளில் ரேங்க் முறையை ஒழித்ததால், பல சுயநிதி பள்ளிகளில் இந்தாண்டு அட்மிஷன் கணிசமாக குறை ந்துள்ளது. நாமக்கல்லில் பிரபலமான ஒரு சுயநிதி பள்ளிக்கூடம் அட்மிஷன் குறைந்ததாலும், சம்பளம் கொடுக்க முடியாததாலும் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

தற்போது, ஆளும் அரசில் கொங்கு மண்டலத்தின் கை ஓங்கியுள்ளது. சுயநிதி பள்ளிகளின் ஆதிக்கமும் கொங்கு மண்டல பகுதியில்தான் அதிகம். அதனால் இங் குள்ள பள்ளிக்கூட அதிபர்கள் தரப்பில் இருந்தும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஐ- மாற்ற வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சுயநிதி பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலேயே அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டால், அவர்களின் வியாபாரம் படுத்து விடுமே.

ஆனாலும் இதையெல்லாம் மீறி, சமீபத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்ததில் பெரிய அளவில் முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளது ஆளும் தரப்பு. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு பணியிடத்திற்கு 8 லகரங்கள் வரை கைமாறி இருக்கிறதாம். சேலத்தில் ஒரு பள்ளியில், இல்லாத பணியிடத்தில்கூட ஆசிரியர்களை நியமித்து பல லகரங்களை சுருட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஊழலில் புரட்சி: ”வழக்கமாக, இருக்கின்ற காலியிடத்தை நிரப்புவதற்குத்தான் அரசியல்வாதிகள் பணம் பெறுவார்கள்¢. ஆனால், இந்தமுறை பணத்தைப் பெற்றுக்கொண்டதற்காகவே பள்ளிகளில் புதிய பணியிடத்தை உருவாக்கி, ஊழலில் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்,” என்கிறார் ஓர் ஆசிரியர் சங்க நிர்வாகி.

உதயச்சந்திரன் தரப்பில் இருந்து இதுபோன்ற முட்டுக்கட்டைகள் நாளுக்குநாள் அதிகரிக்கவே, அவரை இடமாற்றம் செய்ய அரசும் முயற்சிகளை எடுத்தன. இதையறிந்த திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு நேரடியாக கண்டனங்களை பதிவு செய்தன. அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றத்திலும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு, வேறு வழியின்றி தமிழக அரசு, ‘உதயச்சந்திரன் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்படவில்லை; அவர் புதிய பாடத்திட்டக்குழு பொறுப்பாளராக இருக்கிறார்,’ என்று பம்மியது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்த கணக்கில், பள்ளிக்கல்வித்துறைக்கும் புதிதாக பிரதீப் யாதவ் என்பவரை முதன்மைச் செயலராக நியமித்துள்ளது தமிழக அரசு. வரலாற்றில் இல்லாத வகையில் பள்ளி க்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு, அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் பிரதீப் யாதவ். அவருக்குக் கீழ் உதயச்சந்திரன் செயல்படுவார் என்றும், புதிய பாடத்திட்டக்குழுவின் பொறுப்பாளராகத் தொடர்வார் என்றும் அறிவித்துள்ளது.

முரண்டு பிடிக்கும் நேர்மையான அதிகாரிகளை டம்மியான பதவிகளுக்கு தூக்கி அடிப்பதுதான் வழக்கமான அரசியல்வாதிகளின் நடைமுறை. ஆனால், உதயச்சந்திரன் விவகாரத்தில் அவரை வேறு துறைக்கு இடமாற்றமும் செய்யாமல், அதேநேரம், தங்களின் ‘வழக்கமான லாபி’ பாதிக்காத வகையிலும் புதிய நடைமுறையை உருவாக்கியிருக்கிறது அதிமுக அரசு.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

”காமராஜர் காலத்திற்குப் பின்னர் இப்போதுதான் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பெரிய அளவில் வெளியே தெரிய வ ந்துள்ளது என்றால், அதற்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ்&தான் காரணம். அவர் பொறுப்புக்கு வந்த பின்னர்தான் தமிழகத்தில் முதன்முதலாக 224 ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் நேரில் அழைத்து, குறைகள் கேட்கப்பட்டன. இதற்கு முன்பு இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் ஆசிரியர்களை புல், பூண்டை பார்ப்பதுபோல்தான் பார்த்தனர். உதயச்சந்திரன் மட்டும்தான் எங்களை மதித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

திறமையான ஆசிரியர்களை எல்லோர் முன்னிலையிலும் கவுரவிக்கும் பண்பும் அவரிடம் உண்டு. முன்பெல்லாம் பாடப்புத்தகம், சீருடை, நோட்டுப்புத்தகங்கள், காலணி, எழுதுபொருட்கள் ஆகியவற்றை பள்ளிக்கு கொண்டு வருவதற்காக ஆசிரியர்கள் பள்ளி வேளையில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. உதயச்சந்திரன் வந்த பிறகுதான், அந்தப் பொருட்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கே நேரடியாக டெலிவரி செய்யப்பட்டது. இதன்மூலம் பள்ளியில் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் நேரத்தை செலவிட முடிகிறது.

பள்ளிக்கல்வித்துறை எழுச்சி பெற வேண்டுமெனில், உதயச்சந்திரன் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். முதன்மை செயலரின் கீழ் செயல்படும்போது, அத்தகைய சுதந்திரம் இனி அவருக்குக் கிடைக்குமா என்பது தெரியவில்லை,” என்றனர்.

ஆசிரியர்கள் கூட்டத்தில் உதயச்சந்திரன் ஒருமுறை பேசும்போது, ”நான் சொல்லும் மாற்றங்களை செயல்படுத்தினால் உங்கள் பள்ளியிலேயே உங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். ஆனால் அதையெல்லாம் நீங்கள் கடந்து வர வேண்டும்,” என்றாராம். இன்றைய நிலையில், அவரது இந்தக் கூற்று, அவருக்கே பொருந்தும்.

– இளையராஜா .எஸ்
தொடர்புக்கு: selaya80@gmail.com