Monday, November 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

அதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக – துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக ‘முடித்து வைக்கப்பட்டு’ இருக்கிறது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்பதவியிலும் இல்லாத ‘முன்னாள்’களில் பெரும்பான்மையினர் அவருக்கே ஆதரவுக்கரம் நீட்டினர்.

வழக்கமாக காங்கிரஸ் கட்சியில்தான் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள், தங்களுக்கென ஒரு கோஷ்டியை சேர்த்துக்கொண்டு முஷ்டியை முறுக்குவார்கள். அதேநிலைதான், ஜெயலலிதா அற்ற அதிமுகவில் இப்போது நிலவுகிறது. ஓபிஎஸ் பிரிந்திருந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய ஆதரவாளர்கள், சத்திரங்களை தேடிப்பிடித்து கூட்டம் நடத்தி, ‘ஆதரவு படம்’ காட்டினர்.

ஆனால் இதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாதவர்களாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை, நீர்நிலைகளில் மராமத்து பணிகள், ஆசிரியர் நியமனம், காலியிடம் நிரப்புதல், பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள், நெடுஞ்சாலை பணிகள் என ரொம்பவே ஆக்கப்பூர்வமான (?!) பணிகளில் கவனம் செலுத்தியது.

இதற்கிடையே, டெல்லி நாட்டாண்மைகள் மூலம் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்த பஞ்சாயத்துகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. ஓபிஎஸ்ஸூம், இபிஎஸ்ஸூம் கரங்களை கோத்தபடி காட்சி அளித்தாலும், இன்னும் மாவட்ட அளவில் இரு அணி நிர்வாகிகளுக்குள்ளும் ஓர் இணக்கமான போக்கு காணப்படவில்லை என்றே கூறுகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய, ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் ஒருவர், உச்சக்கட்ட அதிருப்தியைக் கொட்டினார்.

”ஜெயலலிதா, உடல்நலமின்றி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போதிருந்தே தமிழக அளவில் எந்த ஒரு திட்டங்களும் பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை. திட்டங்கள் நடந்தால்தான் நாலு காசு பார்க்க முடியும். அமைச்சர், மாவட்டம், வட்டம் வரை பணப்புழக்கம் இருக்கும். ஜெயலலிதா மறைவு மற்றும் ஓபிஎஸ் நீக்கம் ஆகியவற்றுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இயல்பான அரசுப்பணிகளில் மும்முரம் காட்டினாலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு எந்தப்பலனும் கிடைக்கவில்லை. டாஸ்மாக் பார்களில் இருந்து மாதந்தோறும் கிடைத்து வந்த சொற்ப வருமானம் கூட நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில்கூட அதிமுகவினர் சிலர் பரிந்துரைகளைக் கொடுத்தால் செய்து கொடுத்தார்கள். ஆனால், அதிமுக ஆட்சி நடந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பதால், எங்களது சிபாரிசுகள் எதுவும் ஏற்கப்படவில்லை. எல்லாமே இபிஎஸ் அணியினரே சுருட்டிக் கொண்டனர். ஓபிஎஸ் – இபிஎஸ் மட்டும் சேர்ந்தால் போதுமா? கட்சியின் வேர்களே, எங்களைப்போன்ற மாவட்டம், ஒன்றியம், வட்டம் என்று நீளும் கிளைக்கழக நிர்வாகிகள்தான்.

மாவட்ட செயலாளர்களாக இருக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள், எங்களை (ஓபிஎஸ் ஆதரவாளர்கள்) இன்னும் அழைத்துப் பேசவில்லை. எங்களுக்கும் அவர்களைத் தேடிச்சென்று சந்திப்பதற்கு கொஞ்சம் மனத்தாங்கலும் இருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து இந்த இடைவெளியைப் போக்க வேண்டும்,” என்றார் அந்த ர.ர.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரோ, ”உள்ளாட்சி தேர்தல் வந்தால்கூட செலவு செய்ய கையில் யாரிடமும் பணமில்லை. இந்த நிலையில், மக்களவை தேர்தலை வேறு சந்திக்க வேண்டியிருக்கிறது. இரு அணிகளும் இணைந்தாலும், இன்னும் மாவட்ட அளவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இரு அணிகளுக்கும் இடையே நிலவும் கசப்புணர்வைப் போக்க ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

மண்ணுக்கடியில் வேர்கள் மட்டும் ஒப்பந்தம் செய்து கொண்டால் போதுமா? கிளைகள் மோதிக்கொண்டுதானே இருக்கின்றன.

– இளையராஜா.எஸ்
தொடர்புக்கு: selaya80@gmail.com