Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

 

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும்.

நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

 

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். 31.12.2003க்குள் பிறந்தவராக இருத்தல் அவசியம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 1500 ரூபாய். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவுற்ற முற்பட்ட வகுப்பினருக்கு 1400 ரூபாயும், பட்டியல் இனத்தவர்க்கு 800 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

இக்கட்டணத்தை கடன் அட்டை, பற்று அட்டை, இணைய வங்கி அல்லது யுபிஐ மூலம் செலுத்தலாம். விண்ணப்பக்கட்டணத்தை வரும் ஜனவரி 1ம் தேதி வரை செலுத்தலாம்.

 

ஆள்மாறாட்டம் உள்ளிட்ட
மோசடிகளைத் தவிர்க்க
ஆதார் எண், இடது கை
பெருவிரல் ரேகை
கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பத்தை
பதிவு செய்வதற்கு முன்,
தேர்வர்கள் தங்களுக்கென
தனி மின்னஞ்சல் முகவரி,
கைபேசி எண், புகைப்படம்
ஆகியவற்றை தயார் நிலையில்
வைத்துக் கொள்வது நல்லது.
நீட் தேர்வானது ஆங்கிலம்,
ஹிந்தி உள்ளிட்ட 11
மொழிகளில்
நடத்தப்படுகிறது.

அதனால் எந்த மொழியில்
தேர்வு எழுதப் போகிறோம்
என்பதையும், எந்த நகரத்தில்
தேர்வு எழுதுகிறோம்
என்பதையும் சரியாகவும்,
கவனமாகவும் குறிப்பிட
வேண்டியது அவசியம்.
கடைசியாக தேர்வர்
எந்தப்பள்ளியில் பத்தாம்
வகுப்பை படித்து முடித்தார்?
அந்தப்பள்ளியின் அமைவிடம்,
11, 12ம் வகுப்பு படித்த
பள்ளியின் விவரங்களும்
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டு
உள்ளது என்பதால்,
முன்கூட்டியே அதுகுறித்த
தரவுகளுடன் கணினி
முன்பு அமர்வது நல்லது.

 

முக்கிய நாள்கள் விவரம் வருமாறு…

 

விண்ணப்பப் பதிவு தொடக்கம்: 2.12.2019

தேர்வு நாள்: 3.5.2020

தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 4.6.2020

விண்ணப்பங்களை சரிபார்க்கும் நாள்: 15.1.2020 முதல் 31.1.2020 வரை

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் நாள்: 27.3.2020

 

மேலும் விவரங்களையும், விண்ணப்பப் படிவத்தையும் nta.ac.in மற்றும் https://www.ntaneet.nic.in/ என்ற இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.