நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பதவியேற்றுக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றி அமைக்கப்பட்டது. 9 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு மாற்றங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக தனி அதிகாரத்துடன் இருந்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு, நாட்டின் மிக இலாகாக்களில் ஒன்றான பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் இத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ம் ஆண்டில் சில மாதங்களும், அதன்பின் 1980 முதல் 1982ம் ஆண்டு வரை என இரண்டு முறை அவர் பாதுகாப்புத்துறையையும் சேர்த்து கவனித்து வந்தார்.
அதன்பிறகு பாதுகாப்புத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன். அதில் பெருமைப்படக்கூடிய செய்தி என்னவெனில், நிர்மலா சீதாராமன் திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் குடியேறி விட்டாலும், அவருடைய பூர்வீகம் மதுரை மாநகரம்தான். திருச்சியில்தான் அவர் பிஏ பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
இதற்குமுன் ஜகஜிவன் ராம், ஸ்வரன் சிங், பிரணாப் முகர்ஜி, ஏகே ஆன்டனி போன்ற ஜாம்பவான்கள் வகித்து வந்த பாதுகாப்புத்துறையில் இந்திரா காந்திக்குப் பிறகு, அதாவது 35 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஒரு பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சக அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை நிர்மலா சீதாராமன் வகித்து வந்த வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு, ரயில்வே அமைச்சராக இருந்து வந்த சுரேஷ்பிரபு மாற்றப்பட்டுள்ளார். ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நான்கு முறை ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்ளால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறையை கூடுதலாக கவனிப்பார்.
இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் இன்னொரு முக்கிய அம்சமாக, இதுவரை கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்து வரும் தமிழகத்தின் ஒரே பாஜக எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கூடுதலாக நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக உள்ள அருண் ஜெட்லிக்குக் கீழ் இணையமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் இந்தப் பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதில் அரசியல் முக்கியத்துவம் இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.