Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம் மாவட்ட மைய
நூலகத்திற்குச் சொந்தமான
இடத்தை நியூ செஞ்சுரி
புத்தக நிறுவனத்திற்கு
தாரை வார்க்கப்படுவதாக
வந்த தகவலால், அதிர்ச்சி
அடைந்த பாஜக, இந்து முன்னணி
நிர்வாகிகள், தங்கள்
கட்சிகளுக்கும் நூலக
வளாகத்தில் கடை
கட்டிக்கொள்ள இடம்
ஒதுக்குமாறு திடீர்
கோதாவில் குதித்துள்ளனர்.

 

சேலம் குமாரசாமிப்பட்டியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில், மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் பின்பகுதியில் 5000 சதுர அடிக்கு மேல் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டிக்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும்போது, பழைய பேலஸ் தியேட்டர் எதிரில் செயல்பட்டு வந்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்குச் சொந்தமான இடம் முற்றிலும் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக, நூலக வளாகத்திற்குள் இடம் ஒதுக்கித்தருமாறு அந்நிறுவனம் கோரியது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் முதல்வர் வரையிலும் பேசியிருக்கிறார்கள்.

 

அதனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்தே அழுத்தங்கள் வந்ததால், மாவட்ட ஆட்சியர் ராமன், வேறு வழியின்றி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டிக்கொள்ள ஒரு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 450 சதுர அடி நிலத்தை இலவசமாக ஒதுக்க கோப்புகளை இறுதி செய்திருந்தார். அதையொட்டி, கடந்த ஜூலை 31ம் தேதி ஆட்சியர் ராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மைய நூலக வளாகத்தில் நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து, ‘புதிய அகராதி’ இணைய இதழில், கடந்த 11ம் தேதி விரிவாக எழுதி இருந்தோம்.

 

இந்நிலையில்,
இந்து முன்னணி அமைப்பினரும்,
பாஜகவினரும் மாவட்ட மைய
நூலக வளாகத்தில் தங்கள்
அமைப்புகளுக்கும் கடை
கட்டிக்கொள்ள இடம்
ஒதுக்கித்தருமாறு மாவட்ட
நூலக அலுவலர்
கோகிலவாணியிடம்
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13)
நேரில் மனு அளித்துள்ளனர்.
இது, பெரும் சலசலப்பை
ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், மாவட்ட ஆட்சியரிடமும்
நேரில் மனு அளிக்கச் சென்றனர்.
அவர் முதல்வர் கலந்து
கொண்ட நிகழ்ச்சியில்
இருந்ததால், மனுவை
மின்னஞ்சல் மூலம்
அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்து முன்னணி அமைப்பின் கோட்டத் தலைவர் சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் குணசேகரன், சந்திரய்யர், ஜெயராமன், ரவி, கண்ணன், வெங்கடேஷ், தங்கம் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் கோபிநாத் ஆகியோர் மைய நூலக வளாகத்தில் இன்று பார்வையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உளவுத்துறை காவல்துறையினரும் அங்கு வந்ததால், பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்து முன்னணி கோட்டத் தலைவர் சந்தோஷ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் ஆகியோருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

 

சேலம் மாவட்ட மைய
நூலக வளாகத்தில் நியூ செஞ்சுரி
புத்தக நிறுவனத்திற்கு இடம்
ஒதுக்கித்தருவதாக அறிகிறோம்.
இது முற்றிலும் சட்டத்திற்குப்
புறம்பானது. மேம்பாலம்
கட்டுமானத்தால் அந்த
நிறுவனத்தின் கடை
பாதிக்கப்பட்டதற்காக அரசுக்குச்
சொந்தமான இடம்
ஒதுக்கப்படுவதாக இருந்தால்,
பாலங்கள், நெடுஞ்சாலைகளால்
பாதிக்கப்படும் அனைவருக்கும்
அரசு இடம் ஒதுக்கித்தர
வேண்டும். வீடிழந்தவர்கள்
நாளை ஆட்சியர்
அலுவலகத்தில் வீடு
கட்டிக்கொடுக்கும்படி கேட்டால்
அனுமதிக்க முடியுமா?

 

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச்
சொந்தமான உடைமை.
அக்கட்சிக்கு அரசு இடம்
வழங்கினால் எதிர்காலத்தில்
மற்ற எல்லா அரசியல்
கட்சிகளுக்கும் அரசு இடம்
ஒதுக்கித்தர முடியுமா?
அப்படி அரசுக்குச் சொந்தமான
இடத்தை தனியாருக்கு
ஒதுக்கினால் தவறான
முன்னுதாரணம் ஆகிவிடும்.
மாவட்ட நிர்வாகத்தின்
நடவடிக்கையை வன்மையாக
கண்டிக்கிறோம். ஆட்சியரும்,
நூலகத்துறையும் இந்த
நடவடிக்கையை கைவிடாவிட்டால்,
இந்து முன்னணி சார்பில்
தொடர் போராட்டங்களை
நடத்துவோம்.

 

மேலும், எங்கள் இயக்கத்திலும்
தேச பக்தி தொடர்பாக
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
புத்தக பிரதிகள் உள்ளன.
எனவே எங்களுக்கும் நூலக
வளாகத்தில் இடம் ஒதுக்கித்தர
வேண்டும். அந்த இடத்தை
இப்போதே அடையாளம்
காட்ட வேண்டும்.
இவ்வாறு மனுவில்
கூறியிருந்தார்.

 

நூலக அலுவலர் மற்றும் ஊழியர்கள் அவர்களிடம், ”நாங்கள் எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும் கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்தான் பதில் அளிக்க வேண்டும். இந்த நூலக வளாகத்தில் சிறுவர்களுக்கான நூலகம், விளையாட்டுப்பூங்கா கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினர். மேலும், ஆட்சியர் வந்து பார்வையிட்ட இடத்தையும் ஊழியர்கள் அவர்களிடம் காட்டினர்.

 

இந்திய கம்யூனிஸ்ட், இந்து முன்னணி, பாஜக என ஆளாளுக்கு இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்து கொடுக்க நூலகத்துறை எடுப்பார் கைப்பிள்ளையா என்ன?

 

– பேனாக்காரன்