Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

சிறந்த மாநகராட்சிக்கான
விருதுக்கு இந்த முறை
சேலம் மாநகராட்சி தேர்வு
செய்யப்பட்டு இருப்பது
நமக்கெல்லாம் பெருமைதான்.
ஆனால், அதற்கான தகுதிகள்
இருக்கின்றனவா என்பதை
கூர்ந்தாய்வு செய்தால்,
கேள்விகளே மிஞ்சும்.

எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு, பொதுக்கழிப்பறை இருந்தால் தண்ணீர் இருக்காது, தூய்மை இந்தியா திட்டத்தைப் போற்றுவோம்… ஆனால் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டோம். திடக்கழிவு மேலாண்மைப் பற்றி பேசுவோம்… ஆனால், செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கை மூடுவோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதற்குதான், அவார்டெல்லாம் கொடுக்கிறார்கள்.

 

ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவெல்லாம் குறை சொல்லவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கணக்கில், நாம் மணியனூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை நேரில் பார்வையிட்டோம்.

மாநகராட்சி கமிஷனர், சதீஸ்

சேலம் மாநகரில் திறந்தவெளியில் ஆடுகளை வெட்டி தொங்கவிட்டு, கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். பல நேரங்களில் நோய் தாக்குதலுக்கு உள்ளான ஆடுகள்கூட இறைச்சி மார்க்கெட்டில் போணியாகி விடுகின்றன. கொதிக்கும் நீரில் போட்டு, அஜினோமோட்டாவைச் சேர்த்த பிறகு நம்மவர்களுக்கு அது நோய்வாய்ப்பட்ட ஆடா அல்லது சேலம் கருப்பு ஆடா என்பதெல்லாம் கணக்குப்பார்ப்பது கிடையாது.

 

சரி. மாநகராட்சிக் கதைக்கு வருவோம்.

 

ஆடுகளை கறிக்காக வெட்டுவதற்காக, சேலம் மணியனூரில் கடந்த 2010ம் ஆண்டு புதிதாக ஓர் இறைச்சிக்கூடம் திறக்கப்பட்டது. மொத்த பட்ஜெட் 96 லட்சம் ரூபாய். அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். ஆரம்பத்தில் ஒரே வாரத்தில் 500க்கும் மேற்பட்ட ஆடுகள்கூட வெட்டப்பட்டு இருக்கின்றன. வெட்டுக்காக கொண்டுவரப்படும் ஆடுகள் நலமுடன் இருக்கிறதா? நோய் தாக்குதல் இருக்கிறதா? என பரிசோதித்த பிறகே வெட்டப்படும்.

இறைச்சிக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள்

இதற்காக ஒரு கால்நடை டாக்டரும் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால், அந்தப்பணியிடம் இன்று வரை காலியிடமாகத்தான் இருக்கிறது. அப்புறம் யார் ஆடுகளை பரிசோதனை செய்வார் என நீங்கள் கேட்கலாம். அதையெல்லாம் நம்ம சுகாதார ஆய்வாளர்களே செய்துடுவாங்களாம். அப்படித்தான் கார்ப்பரேஷன் தரப்பில் சொல்கின்றனர்.

 

அறுப்புக்கு கொண்டு வரப்படும் ஆடு ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணமாக இறைச்சிக்கூட ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டும். நடைமுறையில் அவர்கள் நூறு ரூபாய் வசூலிக்கின்றனர். பின்னே, வருஷத்துக்கு 8 லட்ச ரூபாய் ஒப்பந்தம். இருபது இருபது ரூபாயாக வாங்கி என்றைக்கு காசு பார்ப்பது?

பாடாவதியான குப்பை லாரிகள்

ஆடுகளை வெட்டிய பிறகு கொழுப்பு, இரைப்பை, குடல் கறி, கல்லீரல், நுரையீரல் போன்ற இறைச்சி வகைகளை தனித்தனியாக சேகரிப்பதற்காக இந்த இறைச்சிக்கூடத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆடுகளைக் கழுவ தண்ணீர் வசதியும் உண்டு. ஆனாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த இறைச்சிக்கூடத்தில் ஒருவர் கூட ஆடுகளை வெட்டுக்கு கொண்டு வருவது இல்லை. இந்த நிலையிலும்கூட, கடந்த நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் ஒப்பந்தத்தை புதுப்பித்து இருக்கிறது மாநகராட்சி.

 

சரி. ஆளே இல்லாத
கடையில் யாருக்குதான்
டீ ஆற்றுகிறார்கள் மாநகராட்சி
ஊழியர்கள்? அதையும்
விசாரித்தோம். கொண்டலாம்பட்டி
மண்டலத்தில் குப்பை
அள்ளி அள்ளி ‘கண்டம்’
ஆகிப்போன ஏழு லாரிகள்,
குப்பைகளை கொட்டி பாடாவதியான
இரும்பு தொட்டிகள் ஆகியவற்றை
எல்லாம் புதிதாக கட்டப்படும்
மூன்றடுக்கு வாகன நிறுத்தும்
இடத்திலா நிறுத்த முடியும்?
பார்த்தார்கள்… சும்மாதானே
கிடக்கிறது என்று
இறைச்சிக்கூடத்தில்
கொண்டு வந்து நிறுத்தி
விட்டார்கள். அவை மழையில்
நனைந்து, வெயிலில் காய்ந்து
மேலும் துருப்பிடித்துப்
போனது வேறு கதை.

இறைச்சிக்கூடத்தின் உள்புறம்

இறைச்சிக்கூடத்தை சுற்றிலும்
நோட்டம் விட்டோம்.
எங்கு பார்த்தாலும் புதர்
மண்டிக் கிடக்கிறது.
முல்லைக்குத் தேர் கொடுத்த
பாரியின் வள்ளல்தன்மை பற்றி
இலக்கியங்களில் படித்திருப்போம்.
பாரிக்குப் பிறகு,
பெரிய வள்ளல் யார் என்றால்
அது நம்ம கார்ப்பரேஷன்தான்.
பாடாவதி ஆம்புலன்ஸ்
வாகனத்தையே கொடிகள்
படர்வதற்கு தோதாக நிறுத்தி
இருக்கிறார்கள் எனும்போது
அதற்கு விருது கொடுக்காமல்
இருந்தால்தான் ஆச்சர்யம்.

 

கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி
என்று சொன்னார்கள்.
அந்த நீர் முழுக்க பாசி
படிந்து இருக்கிறது.
இறைச்சிக்கூடத்தின்
பின்பக்கத்தில் ஒரு நீண்ட
அறை இருக்கிறது.
அதில்தான் குளோரின் மருந்து
மூட்டைகளை அடுக்கி
வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு மூலையில்
களைப்பில் இரண்டு துப்புரவு
தொழிளாளர்கள் தூங்கிக்
கொண்டிருந்தனர்.
நாம் சென்றபோது
பகல் 1 மணி இருக்கும்.
அப்போதுகூட அவர்கள்
கொசுவத்தி சுருள் கொளுத்தி
வைத்துக்கொண்டு ஓய்வில்
இருந்தார்கள் என்றால்,
இறைச்சிக்கூடமும்
டெங்கு கொசு உற்பத்தி
தொழிற்சாலை என்பதை
நாம் சொல்லாமலே புரிந்து
கொள்ள முடியும்.
சேலம் மாநகருக்கு
டெங்கு கொசுக்களை
உற்பத்தி செய்யும்
கூடமாக இருக்கிறது.

திறந்தவெளி டாஸ்மாக் ‘பார்’

இது இப்படி என்றால், இறைச்சிக்கூடத்திற்கு வெளியே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள காலி இடத்தை, பட்டப்பகலிலேயே திறந்தவெளி டாஸ்மாக் ‘பார்’ ஆக மாற்றியிருந்தார்கள் குடிகாரர்கள். அவர்கள் குடித்துவிட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்கள், காலி பாட்டில்கள் கழிவுநீர் கால்வாயில் அடைத்துக்கொண்டு, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதையும் பார்க்க முடிகிறது. மாநகராட்சி கமிஷனர் சதீஸ், பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வதில் அதீத அக்கறை காட்டுவது பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனாலும், அங்கே தேங்கிக்கிடப்பவை எல்லாம் பிளாஸ்டிக் டம்ளர்கள்தானே எனும்போது கமிஷனரின் நடவடிக்கை போதாதோ என்றும் தோன்றுகிறது.

 

இறைச்சிக்கூடம் அருகிலேயே அங்கன்வாடி மையம், மாநகராட்சி மருத்துவமனை, அரசுப்பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. சுகாதார சீர்கேடு, நேரடியாக குழந்தைகளை பாதிக்கும் என்பதையெல்லாம் ஆணையருக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

சிவராமன்

தாதகாப்பட்டியைச் சேர்ந்த பாஜக முன்னாள் கிளைத்தலைவர் சிவராமன் என்பவரோ, மணியனூர் இறைச்சிக்கூடம் கடந்த சில வருடங்களாகவே செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகச் சொன்னார்.

 

மேலும், ”செயல்படாத இறைச்சிக்கூடத்திற்கு ஒப்பந்தம் மட்டும் விடப்படுவது எப்படி என்று தெரியவில்லை. இப்போது இந்த இடம், பழைய இரும்பு சாமான்கள், குப்பைகள், தூக்கி வீசப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பழுதடைந்த வாகனங்களை போட்டு வைக்கும் கிடங்காக மாற்றி விட்டனர்.

 

அறுப்புக்கு ஆடுகள் கொண்டு வரப்படும்போது அதை பரிசோதிக்க கால்நடை மருத்துவர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், எங்களுக்குத் தெரிந்து, இந்த மையத்தில் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் நியமிக்கப்பட்டதில்லை. ஆரம்பத்தில், சுகாதார ஆய்வாளர் ஒருவரை வைத்து ஆடுகளை பரிசோதனை செய்து வந்தனர். ஆடுகளை நோய் தாக்கி இருக்கிறதா என்பது குறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு என்ன தெரியும்?

 

டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறியிருக்கிறது இந்த இறைச்சிக்கூடம். இந்த லட்சணத்தில் சேலம் மாநகராட்சிக்கு, சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, சுதந்திரதின விழாவில் முதல்வர் கையால் விருது வழங்கப்படுகிறது. 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது.

 

இன்னும் இந்த மாநகரில் திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கப்படவில்லை. மழை வந்தால் நகரமே நாறி விடுகிறது. முற்றிலும் சுகாதாரம் செயல் இழந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தவறான புள்ளி விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து நம்ப வைத்துவிட்டதோ என்று சந்தேகம் எழுகிறது. அல்லது, முதல்வர் சொந்த மாவட்ட மாநகராட்சி என்பதால் சுய விருப்பத்தின்பேரில் விருதுக்கு தேர்வு செய்தாரா என்பதும் சந்தேகமாக உள்ளது,” என்று ஒரு குண்டைப் போட்டார் சிவராமன்.

 

இது ஒருபுறம் இருக்க, மணியனூர் இறைச்சிக்கூடத்தை அதிமுகவைச் சேர்ந்த விநாயகம் என்பவர் மீண்டும் 8 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். அவரிடமும் பேசினோம்.

முல்லைக்குத் தேர் கொடுத்த மாநகராட்சி

”கொண்டலாம்பட்டி மண்டல சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் என்பவர், பழைய குப்பை வண்டிகளையும், பேட்டரி வண்டிகளையும் இறைச்சிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் துர்நாற்றம் வீசுவதால், யாரும் ஆடுகளை வெட்ட வருவதில்லை. அந்த வண்டிகளை அப்புறப்படுத்துமாறு பலமுறை சித்தேஸ்வரனிடமும், கமிஷனரிடமும் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த கூடத்தை ஒப்பந்தம் எடுத்ததில் எங்களுக்கு நஷ்டம்தான்,” என்றார்.

 

ஆனால் சித்தேஸ்வரனோ, ”இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த குப்பை லாரிகள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. அதனால் நிறுத்தி வைத்திருக்கிறோம். பேட்டரி வண்டிகளை சில நாள்களில் அகற்றி விடுவோம். இந்த இறைச்சிக்கூடத்தை முன்மாதிரி கூடமாக மாற்றும் திட்டம் உள்ளது,” என்று முடித்துக்கொண்டார்.

 

எதற்கும் சேலம் மாநகர நல அலுவலர் பார்த்திபனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடமும் கேட்டோம்.

 

”மணியனூர் இறைச்சிக்கூடத்தில் நவீனமுறையில் ஆடுகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், எலக்ட்ரிகல் ஷாக் கொடுத்தும் வெட்டப்பட்டு வந்தது. இந்த முறையால் ஆட்டு ரத்தம் பெரிய அளவில் சேகரம் ஆகாது. அதனால் இறைச்சிக்கடைக்காரர்கள் இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் விரும்பாததால் ஓராண்டுக்கும் மேலாக யாரும் ஆடுகளை வெட்டுவதற்குக் கொண்டு வருவதில்லை.

இறைச்சிக்கூடத்திற்கு அருகில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசப்பட்ட காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குவளைகள்

மாநகரில் உள்ள பல இறைச்சிக் கடைக்காரர்களுக்கு, இறைச்சிக்கூடத்திற்கு வந்துதான் ஆடுகளை வெட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருக்கிறோம். இதுவரை மாநகராட்சிக்கென கால்நடை மருத்துவர் பணியிடம் ஒதுக்கப்படாததால், மணியனூர் இறைச்சிக்கூடத்தில் கால்நடை மருத்துவரை நியமிக்கவில்லை,” என்றார் மாநகர நல அலுவலர் பார்த்திபன்.

 

இறைச்சிக் கடைக்காரர்கள் தரப்பில் விசாரித்தபோது, ”சார்…. கறி, குடல் கறி, ஆட்டு ரத்தம் வாங்குவதற்காக காலை நேரத்திலேயே வாடிக்கையாளர்கள் கையில் பாத்திரங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனர். ஆனால், மணியனூர் இறைச்சிக்கூடத்திற்குச் சென்று ஆடுகளை வெட்டி கறியை எடுத்து வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. அவ்வளவு நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதில்லை. அதனால்தான் பலர் மணியனூர் இறைச்சிக்கூடத்திற்குச் செல்வதில்லை,” என்றார்கள்.

 

சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் இடத்தை சீர்கேடு அடையாமல் பராமரிப்பதும் மாநகராட்சியின் பொறுப்புதானே?

 

– பேனாக்காரன்