Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலங்காலமாக நம் சமூகத்தில் கெட்டித்தட்டிப்போன பாலபாடங்களை நகல் எடுத்து எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி, விஜய் வரை தமிழின் அத்தனை மாஸ் ஹீரோக்களும் தங்கள் படங்களில் பெண்களுக்கு வகுப்பெடுத்து வந்த நிலையில், முதன்முதலாக பெண்ணை சக மனுஷியாகவும், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்தாலே போதும் என்ற கருத்தை அஜித்குமார் என்ற மாஸ் ஹீரோ மூலமாக அழுத்தமாக பதிவு செய்திரு க்கிறது, ‘நேர்கொண்ட பார்வை’.

கடந்த 2016ம் ஆண்டு ஹிந்தியில் அமிதாபச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின், அதிகாரப்பூர்வ மறு ஆக்கம்தான் ‘நேர்கொண்ட பார்வை’. பெண்ணியம்தான் இப்படத்தின் பேசுபொருள். பெண்ணியம் என்றாலே, முண்டாசுக்கவிஞன் பாரதியை ஒதுக்கிவிட்டு நாம் அடுத்த அடி நகர முடியாதல்லவா? அதுதானோ என்னவோ, இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பைச் சூட்டியிருக்கிறார்கள். அதுவே ஆகப்பொருத்தமாகவும் இருக்கிறது.

 

கதை என்ன?:

 

நவயுகப் பெண்களான மீரா கிருஷ்ணன் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), ஃபமிதா (அபிராமி), ஆண்டிரியா ஆகிய மூவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசிக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்கின்றனர். பணி நிமித்தம் காரணமாக, பெற்றோரை பிரிந்து தனியே வசிக்கின்றனர். இந்த நிலையில் மூன்று பேரும் அவர்களின் ஆண் நண்பர்களுடன் ஒரு நாள் இரவு விருந்துக்குச் செல்ல நேரிடுகிறது. அங்கே மது அருந்துகின்றனர். அவர்களில் ஒருவன், திடீரென்று மீராவிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட முயல்கிறான். அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக மீரா, அவனை பாட்டிலால் தாக்கிவிட, அவனுக்கு நெற்றியிலும், இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டு விடுகிறது.

 

தாக்கப்பட்ட கயவன், ஊரில் செல்வாக்குமிக்க அரசியல்வாதி (ஜெயப்பிரகாஷ்) ஒருவரின் மகன். அதனால் மீராவும், அவளுடைய தோழிகளும் அடுத்தடுத்து பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். மீரா பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்றதாக அவள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மீராவுக்கும் அவளது தோழிகளுக்காகவும் வழக்கறிஞர் பரத் சுப்ரமணியம் (அஜித்குமார்) ஆஜராகிறார். இந்த வழக்கில் மீராவுக்கு தண்டனை கிடைத்ததா? அஜித்குமார் மீரா தரப்புக்காக ஏன் ஆஜராக வேண்டும்? என்பதை நேர்க்கோட்டில் அழகான திரைமொழி, ‘நறுக்’ வசனங்களால் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

 

திரைமொழி:

 

பிங்க் படத்தின் திரைக்கதையில் 90 விழுக்காடு அப்படியே நேர்கொண்ட பார்வையிலும் இருக்கிறது. அஜித்குமாரின் ரசிகர்களுக்காக திரைக்கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதுவும் கதைக்கு அலுப்பூட்டாமல், ஏற்கும் வகையில் இருக்கின்றன. பிங்க் படத்தின் வசனங்கள்தான் என்றாலும், அதை தமிழுக்கு ஏற்றார்போல், மிகக்கூர்மையாக எழுதியிருக்கிறார் இயக்குநர் வினோத்.

தமிழில் வசூல் நாயகனாக வலம் வரும் அஜித்குமார், இதுபோன்ற நாயகத்தனங்கள் இல்லாத, ஆரவாரம் இல்லாத பாத்திரத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு, இந்தப்படம் பேச வந்த செய்திக்காகத்தான் என்பதை படம் பார்க்கும் அவருடைய ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். அஜித், வழக்கறிஞர் பாத்திரத்தில் அசத்துகிறார். கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் அவருக்கு, படத்தின் முதல் பாதியில் பெரிதாக வேலைகள் இல்லை. இடைவேளைக்கு முன்பாக வரும் சண்டைக்காட்சியில் தூள் பறத்துகிறார் தல. அங்கிருந்து படம் வேகம் பிடிக்கிறது.

 

படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் அஜித்குமார் அதகளப்படுத்துகிறார். நீதிமன்றத்தில் மீரா மீதான வழக்கு விசாரணைதான் இரண்டாம் பாதி படமே. அரசியல் செல்வாக்குள்ள ஒருவருடன் சாமானியர்கள் மோதும்போது என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை நம்பும்படியாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தன்னை பாலியல் இச்சைக்கு பலவந்தப்படுத்தியவன் மீது புகார் கொடுத்தபோது, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அரசியல்வாதிகளுக்காக பாதிக்கப்பட்ட பெண் மீது பலான தொழில் செய்பவள் என்றும், அச்சுறுத்திப் பணம் பறித்தார், பணத்துக்காக அவரை பாட்டிலால் அடித்து கொல்ல முயன்றார், கொடுங்காயம் விளைவித்தார் என்றெல்லாம் காவல்துறையினர் பொய்யாக ஒரு வழக்கை ஜோடிக்கின்றனர்.

 

காவல்துறையினர் பதிந்த வழக்கு, ஜோடிக்கப்பட்டது வழக்கு என்பதை சாதுர்யமாக கண்டுபிடிக்கிறார் வழக்கறிஞர் பரத் சுப்ரமணியம். ‘அவரை கோபப்படுத்தும்படி பேசு’ என்று வில்லனுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சொல்லித்தர, அதையே தனக்கான அஸ்திரமாக பயன்படுத்துகிறார் அஜித்குமார். சாட்சி கூண்டில் நிற்கும் வில்லனை கேள்விகளாலேயே எரிச்சலூட்டும் அஜித்குமார், அவர் வாயாலேயே குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் காட்சிகள் மிகையில்லாமல் இருப்பது படத்திற்கு வலு சேர்க்கிறது.

 

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, அரசுத்தரப்பு வழக்கறிஞர் சத்யமூர்த்தி பாத்திரத்தில் வருகிறார். சில நேரம் அவர் தந்தி டிவியில் பேசுவதுபோல்தான் நீதிமன்ற காட்சிகளிலும் பேசுகிறாரோ என்றும் தோன்றுகிறது. சில இடங்களில் ரொம்பவே செயற்கைத்தனம் தெரிகிறது. என்றாலும் அவருக்கு இது முதல் படம் என்பதால் அந்த சிறு தவறுகள் ஏற்கப்படலாம். நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே, மீராவை குற்றவாளியாக சித்தரித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிடுவதை மாஜிஸ்ட்ரேட் கண்டிக்காதது ஏனென்று தெரியவில்லை.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர், வில்லனின் சாட்சியம் ஆகியவற்றிலிருந்து பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் விரும்புகிறது அல்லது எப்படி எல்லாம் இருந்தால் அவர்களிடம் ஆண்கள் தவறாக நடப்பார்கள் என்பதை ரூல் நம்பர் ஒன், ரூல் நம்பர் டூ, ரூல் நம்பர் த்ரீ, ரூல் நம்பர் 4 என இரட்டுற மொழிகிறார் அஜித்குமார்.

 

ஒரு காட்சியில் வில்லன்,
”நல்ல குடும்பத்து பொண்ணுங்க
எல்லாம் மொதல்ல நைட் பார்ட்டிக்கு
போகவே மாட்டாங்க.
தண்ணீ அடிக்க மாட்டாங்க.
அவ போடற மாதிரிலாம்
டிரஸ் போட மாட்டாங்க.
ஆம்பளைங்க தோள்மேல உரசிக்கிட்டு,
தொட்டு தொட்டு சிரிச்சி சிரிச்சி
எந்த பொண்ணுங்களும்
பேச மாட்டாங்க.
அப்படிலாம் அவ பேசறதாலதான்
அவளும் ‘அந்த மாதிரி’
பொண்ணுனு நினைச்சு
கூப்பிட தோணுச்சு….,”
என வாக்குமூலம் அளிப்பான்.

பல ஆயிரம் ஆண்டுகளாக
இருட்டறைக்குள் முடங்கிக் கிடந்த
பெண்கள், கடந்த இருபது
ஆண்டுகளாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக
பொதுவெளியில் முகம் காட்டத்
தொடங்கி இருக்கிறார்கள்.
ஆனாலும், நம் சமூகத்தில் பெண்கள்
இன்னும் முழு சுதந்திரப் பறவைகளாகி
விடவில்லை. இன்றைக்கும் இரவில்
பெண் பிள்ளைகள் செல்போனில்
தன் தோழிகளுடனோ,
ஆண் நண்பர்களுடனோ
அரட்டை அடிக்க முடியாது.
திருமணமானப் பெண்களும் இத்தகைய
அடிமைத்தளைகளில் இருந்து
விடுபட்டு விடவில்லை என்பதே
யதார்த்தம். இதுபோன்ற
கட்டுப்பாடுகளை மீராவும்,
அவளது தோழிகளும் மீறும்போது
கண்டிப்பாக அவர்கள்
‘பலான தொழில்’ செய்யும்
பெண்களாகத்தான் இருக்க முடியும்
என்ற பொதுப்புத்தியில் உறைந்து
கிடக்கும் அழுக்குகளை
வில்லன் பாத்திரத்தின் வசனங்கள்
மூலமாக சுட்டிக் காட்டுகிறார்
இயக்குநர்.

 

அத்துடன் இயக்குநர் திருப்தி
அடையவில்லை போலும்.
அரசுத்தரப்பு சாட்சியாக வரும்
ஒருவர், ‘ஆமா சார்…
அந்தப்பொண்ணுங்க இருக்கற
வீட்டுக்கு அடிக்கடி பசங்களாம்
வந்துட்டுப் போறத பார்த்துருக்கேன்.
அதுலருந்தே அந்த மூணு
பொண்ணுங்களும் தப்பானவங்கதான்
தெரிஞ்சுக்கிட்டேன்,’ என சாட்சியம்
அளிப்பார். அதற்கு எதிர்தரப்பு
வழக்கறிஞர் பரத் சுப்ரமணியம்,
‘அந்த பசங்க ஏன் அந்தப்
பொண்ணுங்களோட நண்பர்களாக
இருக்கக் கூடாது?.
சரி. அந்த வீட்டில் தப்பான
காரியங்கள் நடப்பதாக
என்றைக்காவது அவர்களுடைய
படுக்கை அறையில் போய்
பார்த்திருக்கீங்களா?’ என்று
வினாக்களை எழுப்புவார்.

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு?. நீதிமன்றத்திற்கு யூகங்கள் தேவையில்லை. சாட்சியங்கள்தான் தேவை என்பதை பதிலடி கொடுப்பார் அஜித்குமார்.

 

அண்மையில்,
பொள்ளாச்சியில் நடந்த பாலியல்
வக்கிரங்களின்போதும்கூட,
‘எல்லாம் தெரிஞ்சுதானே இந்த
பொம்பளப் புள்ளைங்க
அவனுங்களோட போனாளுங்க…,’
என்று மிக எளிமையாக
நாம் பாதிக்கப்பட்ட பெண்களை
புறந்தள்ளி விடுகிறோம்.

 

எங்கெல்லாம் பெண், பாலியல் ரீதியாக இன்னலுக்குள்ளாகிறாளோ அப்போதெல்லாம் ”அதுசரி… ஊசி இடம் கொடுக்காம நூல் நுழைய முடியுமா…?” என்றும் சொல்லிவிட்டு நாம் கடந்து போய் விடுகிறோம். அதே வினாவைத்தான் இப்படத்தில் பரத் சுப்ரமணியம், ”என்றைக்காவது நாம் நூலிடம் கேட்டுவிட்டுத்தான் ஊசியை நுழைத்திருக்கிறோமா?” என கேட்டதன் மூலம் புதிய விவாதத்திற்கு அழைக்கிறார் இயக்குநர்.

 

நீதிமன்ற வாதத்தின்போது அஜித்குமார், மீராவை பார்த்து, ‘நீங்க வர்ஜினா?’ என்று கேட்கும் காட்சி இடம் பெறுகிறது. தன் தரப்பு வழக்கறிஞர் அப்படியொரு வினாவை எழுப்புவார் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போகிறாள். ஷ்ரத்தா, தனக்கு ஏற்பட்ட அதிர்வை, திரைக்கு வெளியே ரசிகர்களுக்கும் கடத்தி விடுகிறார். பல காட்சிகளில் மெச்சும்படி நடித்திருக்கிறார் ஷ்ரத்தா.

 

வர்ஜின் பற்றிய வினாவிற்கு மீரா அளித்த பதிலில் இருந்தே, ஒரு பெண் சம்மதமின்றி அவள் மீது திணிக்கப்படும் எந்த நடவடிக்கைகளுமே, அவள் மீதான வன்முறைதான் என்பதை விளக்குகிறார் வழக்கறிஞர் பரத் சுப்ரமணியம்.

 

அஜித் ஏன் மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதற்கான காரணம், ஃபிளாஷ்பேக் காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. அஜித்குமாரின் அழகான மனைவியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடித்திருக்கிறார். பத்தே நிமிடங்கள் வந்து போனாலும், பட்டு பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

 

படத்தின் கதை, திரைக்கதை எந்தளவுக்கு பலமோ அதே அளவுக்கு வலு சேர்க்கிறது, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. ‘அகலாதே…’ என்ற பாடல்கூட ரசிக்கும்படி இருக்கிறது. அடுத்து, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. இரண்டாம் பாதி முழுவதும் ஒரு சிறிய நீதிமன்ற அறைக்குள் கதை நகர்கிறது. அதையும் அலுப்பூட்டாத வகையில் அழகாக தந்திருக்கிறார் நீரவ் ஷா. ஒரே ஒரு சண்டைக்காட்சிதான் என்றாலும் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன்.

 

படத்தில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. நேர்கொண்ட பார்வை எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்காக அந்தக் குறைகளைப் புறந்தள்ளுவதுதான் இதுபோன்ற கதையம்சமுள்ள படங்களை வரவேற்க நாம் செய்ய வேண்டிய கடமையாக இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

 

”’நோ…’ நோ என்பது வார்த்தை அல்ல. அது ஒரு வாக்கியம். ஒரு பொண்ணு ‘நோ’ன்னு சொன்னா, அது தோழியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும், செக்ஸ் ஒர்க்கராக இருந்தாலும், ஏன்… மனைவியாக இருந்தாலும் அதுக்கு ‘நோ’ன்னுதான் அர்த்தம்,” என்று நீதிமன்றத்தில் தன் இறுதி வாதத்தை நங்கூரமாய் பாய்ச்சுகிறார் பரத் சுப்ரமணியம் எனும் அஜித்குமார்.

 

– வெண்திரையான்

கருத்துகளுக்கு: puthiyaagarathi@gmail.com / 9840961947