Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பிரிக்க பெற்றோர் உள்பட யாருக்கும் உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 16, 2018) அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என்ற கட்டப்பஞ்சாயத்தின் பேரில் கலப்புத் திருமணம் செய்த காதலர்களை கொடூரமாக தண்டித்தல், கொலை செய்தல் போன்றவைகள் பரவலாக அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பது குறித்து ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது:

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாரும் அவர்களைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காதல் திருமணம் செய்வோரை கேள்வி கேட்கும் அதிகாரம் கிடையாது.

18 வயது நிரம்பிய ஆணும், பெண்ணும் தாராளமாக மனம் விரும்பி தமது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

அப்படிச் செய்வது சட்டவிரோதமானது. மாறாக, இதுபோல திருமணம் செய்தவர்களை பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று கூறி தண்டிப்பது, ஊரை விட்டு விலக்கி வைப்பது போன்றவை சட்டவி்ரோதமானவை.

காதல் திருமணம் செய்வோரைக் காக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாகக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்ய மத்திய அரசு தவறினால் நீதிமன்றம் தலையிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த தீர்ப்பு, சாதி ஆணவப் படுகொலையில் ஈடுபடும் கும்பலுக்கு சவுக்கடியாக இருக்கும் என கலப்பு திருமண ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.