Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் சசிகலா குடும்பத்தினர், மருத்துவர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் எழுந்தன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பு வகித்தார். திடீரென்று அவரை முதல்வர் பணியில் இருந்து விலகிக்கொள்ளும்படி, ஜெ.,யின் தோழி சசிகலா தரப்பில் கடும் அழுத்தம் தரப்பட்டது. அதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் சில எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரும் ஜெ., மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவதற்கும், இந்தக் கோரிக்கையே ஓபிஎஸ் அணி தரப்பில் முக்கிய நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை (17/08/17) 4.35 மணியளவில் திடீரென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா திறம்படி பணியாற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 5.12.2016ம் தேதி இறந்தார். அவருடைய மரணம் குறித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து ஜெயலலிதா இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும். அந்த இல்லம், பொதுமக்களின் பார்வைக்கும் திறந்து விடப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.