Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

திரை இசையில் வள்ளுவம்: (தொடர் – 8/17)

நோயாய்  நெஞ்சினில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்…

 

கடந்த இரண்டு தொடர்களிலும் ‘ஊக்கம் உடைமை’, ‘மெய்ப்பொருள் அறிதல்’ என அடுத்தடுத்து அறிவுரை மழையாகி விட்டதே என்று வாசகர்கள் சிலர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த முறை, நோயும் நோய் தீர்க்கும் மருந்தையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டோம்.

 

‘என்னது மருத்துவக் கட்டுரையா?. அதற்குத்தான் ‘நலமறிய ஆவல்’ என்ற பகுதி இருக்கிறதே’ என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதற்றம் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடும், நோய் என்பது நோய் அல்ல; மருந்து என்பதும் மருந்து அல்ல. ஆனால், அந்த நோயும் மருந்தும் ஆதாம் ஏவாள் காலத்து அரதப்பழசு.

 

சரி. பீடிகை போடாமல் விஷயத்திற்கு வருகிறேன். ‘மகாதேவி’ (1957) படத்தில் ஒரு சிறுவனின் காலில் பாம்பு கடித்து விடும். எந்தப் பாம்பு கடித்ததோ அந்தப் பாம்பே வந்து கடிப்பட்ட இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுத்துவிட்டால், அந்தச் சிறுவன் பிழைத்து விடுவான் என பாம்பாட்டிகள் கூறுவர்.

 

பாம்பாட்டிகள், அந்தப் பாம்பை வரவழைப்பதற்காக மகுடி ஊதி ஊதி ஒருகட்டத்தில் களைத்துப் போய்விட, எம்.ஜி.ஆர். மகுடி ஊத ஆரம்பிப்பார். ஒருவழியாக அந்த பாம்பு, காடு, மலை என 518 கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து வந்து, சிறுவனின் உடலில் கடித்த இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுத்துவிட்டுப் போகும். இதில் கொஞ்சம்கூட அறிவியல் உண்மை இல்லை. எனினும், மக்கள் இதையெல்லாம் ரசித்திருக்கிறார்கள்.

 

பாம்பே விஷத்தை உறிஞ்சி எடுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பாம்பின் விஷம், கடித்த அரை மணி நேரத்திற்குள் ரத்த நாளங்களை சிதைத்திருக்கும்; மூளை, செயலிழந்திருக்கும். மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். எது எப்படியோ…எம்.ஜி.ஆர்.-காக எதையும் ரசிப்போம். ஆனால் பாம்பின் விஷமே, பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படும் என்பது அறிவியல்பூர்வமானது.

 

தேவநேயப்பாவாணர்

‘மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணர் அய்யா கூட, ஓரிடத்தில் மிக அரிதான ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கருத்துக்கும், இந்தக் கட்டுரைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதால் சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது.

 

‘சேடா’ என்றொரு அரிய வகை சலங்கைப் பூரான், விஷத்தன்மை உடையது. இந்தப் பூரான் கடிக்கு மருந்து எதுவென்றால், கடித்த அந்தப் பூரானேதான். கடித்த பூரானைப் பிடித்துக் கொன்று, அதை உலர்த்தி, தூளாக்கி, வெற்றிலையில் மடித்து சாப்பிட்டுவிட வேண்டும். விஷம் முறிந்து விடும். இப்படி சில நோய்க்கு, நோய் உண்டாக்கிய பொருளையே மருந்தாகக் கொடுப்பதும் நம் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்கிறார் மொழிஞாயிறு.

 

பாம்பின் விஷம்போல், சலங்கைப் பூரான் போல் பெண்களிடத்தும் அத்தகைய தன்மை இருக்கிறது என்கிறார் வள்ளுவர். வள்ளுவனைப் பொருத்தவரை காதல் என்பதே நோய்தானே. அந்தக் காதல் நோய்க்குக் காரணமான பெண்கள்தான், அதைத் தணிக்கும் மருந்தாகவும் இருக்கிறார்கள் என்கிறார் அவர். அதனால்தான்,

 

”பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து” (111:1102)

 

என்று பாடுகிறார் வள்ளுவர். கி.மு.31-ல் வள்ளுவர் போட்டுவிட்டப் பாதையில் இருந்து 21-ம் நூற்றாண்டிலும் கவிஞர்கள் தடம் புரளவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதனால்தான் இப்போதும் கவிஞர்கள், காதலை நோய் என்று உருவகப்படுத்துகின்றனர்.

 

கடந்த 2000-ம் ஆண்டில் அஜித்குமார்-லைலா நடிப்பில் வெளியான ‘தீனா படத்தில், ”சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல்…” என்ற பாடல் உண்டு. அதை எழுதியது, ‘கவி மார்க்கண்டேயர்’ வாலி. அந்தப் பாடலின் ஒரு சரணத்தில்,

 

”நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய்
பூ பறித்தவள் நீதானே…”

 

என்று எழுதியிருப்பார். பாருங்களேன்…வாலிபக் கவிஞரின் குறும்புத்தனத்தை! யுவன்சங்கர் ராஜா இசைக்க, ஹரிஹரன் குரலில் வெளியான இந்தப்பாடல், அந்தாண்டின் ‘சூப்பர் ஹிட்’ பாடலாகவும் அமைந்தது.

 

வாலியே இப்படி என்றால் இளங்கம்பன் கண்ணதாசன் விட்டுவிடுவாரா என்ன….’காதல் மன்னன்’ ஜெமினி கணேசன், சாவித்ரி, விஜயகுமாரி, சந்திரபாபு, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பாதக்காணிக்கை’ (1962) படத்தில், ஓர் அற்புதமான பாடல். நாயகன், நாயகி, அவர்களின் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் இடம்பெறக்கூடியது அந்தப்பாடல். கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவான ”காதல் என்பது எதுவரை…?” என்ற அந்தப்பாடல், கேள்வி&பதில் பாணியிலானது.

 

அந்தப்பாடலின் ஒரு சரணத்தில் வரும் வரிகள் இப்படி இருக்கும்…

 

”காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்
அவரைக் கண்டாலே ஊர் முழுதும் பேசும்
தோற்றம் கால்வாசி பைத்தியம்போல் ஆகும்

அந்தப் பைத்தியத்தைத் தீர்ப்பதற்கு மருந்து
பெண்கள் பார்வையிலே ஊறி வரும் விருந்து
இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து – கையை
வைத்துவிட்டால் நோய் போகும் பறந்து….”
(ஆஹா காதல் என்பது)

 

என்று பாடல் வரிகள் அமைந்திருக்கும். சந்திரபாபு, பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடியிருக்கும் இந்தப்பாடலும் என்றென்றைக்கும் கேட்கத்தூண்டும் பாடல் என்றால் மிகையாகாது.

 

மேலே குறிப்பிட்ட பாடலில், ஆண்களுக்கு ஏற்பட்ட காதல் பைத்தியத்தைப் போக்கும் மருந்து, சம்பந்தப்பட்ட பெண்களின் பார்வையில் இருப்பதாக சந்திரபாபு பாடுவார் (உபயம்: கண்ணதாசன்). ‘காதல் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பவள் பெண்தான்’ என்று நம் பொய்யாமொழியன் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டாலும், அதற்கான மருந்து அவர்களின் கண்களில் இருப்பதாகவும் நுட்பகமாக பதிவு செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.

 

‘குறிப்பறிதல்’ அதிகாரத்தில்,

”இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” (110:1091)

 

அதாவது, மைதீட்டிய இவளின் கண்களில் இருவகைப்பட்ட நோக்கம் உள்ளதாம். ஒரு நோக்கம், நோயை (காதல்) உண்டாக்குவது; இன்னொரு நோக்கம், அந்த நோய்க்கு மருந்தாக இருப்பதாம். நம்ம ஜெமினி கணேசனைக் காட்டிலும், வள்ளுவன்தான் காதல் மன்னனாக இருந்திருப்பார் போலிருக்கிறது. ரசனையின் உச்சமல்லவா!

 

கவிஞர் கண்ணதாசன், வள்ளுவரிஸத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் என்பதை அவரின் பல பாடல்களின் வாயிலாக நாம் அறிய முடியும். ‘ஆண்டவன் கட்டளை  (1964) படத்தில், இளம் ஜோடியாக ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா நடித்திருப்பார்கள். படத்தில் அவர்களுக்கும் ஒரு காதல் டூயட் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சரணத்திலும் நோயைப் பற்றியும் அதற்கான மருந்தைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் இப்படி எழுதியிருப்பார்….

 

”கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா…”

 

என்று நாயகன், தனக்கு ஏற்பட்ட காதல் பித்தத்திற்கு மருந்து இருந்தால் சொல்லும்படி நாயகியைப் பார்த்து கேட்கிறான். அதற்கு நாயகி இப்படிச் சொல்கிறாள்…

 

”கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லய்யா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா…”

 

கவியரசர் கண்ணதாசன், இந்தக் கருத்தில் இருந்து சற்றும் மாறவில்லை என்பதற்குச் சான்றாக, ‘சிவந்த மண்” (1969) படத்தில் வரும், ‘ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்’ என்ற பாடலிலும் நேரடியாகவே சொல்லியிருப்பார்.

 

இந்தப் பாடலைப்பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். அந்தளவுக்கு ஏற்ற, இறக்கத்துடன் மெட்டமைத்து இருப்பார் மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தப் பாடலின் ஒரு சரணத்தில், ‘விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா…’ என்று சிவாஜி பாடுவார். அதற்கு காஞ்சனா, ‘இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா…’ என்று பதிலளிப்பார்.

 

தம் வாழ்நாளில் காதலைக் கடந்து செல்லாதவர்கள் ஒருவர் உண்டென்றால் அவர் இன்னும் இந்த பூமியில் பிறக்காதவராகத்தான் இருக்க முடியும். மனதைத் தொட்ட காதலி / காதலனின் தரிசனம் கிடைக்காதா என கால்கடுக்க காத்திருப்பது எக்காலத்திலும் உண்டு. காதல் பூக்கும் தருணமும், அதன் பிறகான நடவடிக்கைகளும் நூற்றாண்டு கடந்த பின்னரும் மாறவே இல்லை.

 

காதல் நோயை உண்டாக்குவதும், அதற்கு மருந்திடுவதும் பெண்ணாகவும் இருக்கலாம்; ஆணாகவும் இருக்கலாம்.

 

வள்ளுவரின் கருத்தை பிரதிபலிக்கும் பாடல்கள் ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலும் இருப்பதைக் காண முடியும். உதாரணமாக கலித்தொகையில்,

 

”நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!”
(கலித்தொகை 60:20-21)

 

என்று பாடப்பட்டு உள்ளது. அதாவது, ”பெண்ணே! உந்தன் முகத்தை இப்போதே எனக்குக் காட்டிவிடு. அது மட்டுமே எனக்கு மருந்து. உன் முகத்தைத் தவிர வேறு மருந்து எனக்கு இல்லை,” என்பது பொருளாகும்.

 

காதலனும் காதலியும் கூடிக்களிக்கும் வரை காமநோய் வளர்ந்து கொண்டே இருக்குமாம். எப்போது, எப்படி அந்த நோய் தீரும்? திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மணக்குடவர் முக்கியமானவர். அவர், ”தலைவன் புணர்ந்து முன் நின்ற வேட்கைநோய் தணிந்தான்” என்கிறார்.

 

அப்போது அவன் இப்படி கூறுகிறான்: ”நோய் தந்ததும் அவளே. அதைத் தணிப்பதும் அவளே”.

 

– இளையராஜா சுப்ரமணியம்

contact: selaya80@gmail.com

mobile: 9840961947

Leave a Reply