Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடிய விவசாயிகள் சட்ட விரோத கும்பலா? 4 பிரிவுகளில் புதிய வழக்கு!

எட்டுவழிச்சாலை என்ற பெயரில்
விளைநிலங்களையும், மலை
வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு
காவு கொடுக்கும் அரசின்
சதியை எதிர்த்து, சொந்த
மண்ணுக்காகப் போராடி வரும்
அப்பாவி விவசாயிகள் மீது
எடப்பாடி பழனிசாமியின் அரசு,
சட்ட விரோத கும்பலைச்
சேர்ந்தவர்களாக சித்தரித்து
நான்கு பிரிவுகளில் வழக்குப்
போட்டிருப்பது அவர்களிடையே
கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை கையில் எடுத்தது முதல் ஆளும் எடப்பாடி அரசுக்கு ஏழரை தொடங்கிவிட்டது. அப்போதுமுதல் தூக்கத்தை தொலைத்து நிற்கும் இந்த அரசு, விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி போலீசாரின் அடக்குமுறைகளைக் கையாண்டு நிலங்களை அளந்து முட்டுக்கல் போட்டது.

 

இந்த திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் எட்டு வழிச்சாலையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த திட்டத்தால் சிறு, குறு விவாசயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் அழிக்கப்படுவதால் மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை; சொந்த நிலத்தைப் பிடுங்கி, பன்னாட்டு கார்ப்பரேட்காரர்களுக்கு தாரை வார்க்க அரசு திட்டமிட்டு உள்ளதாலும்தான் எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கஞ்சமலை, கவுந்திமலைகளும் சூறையாடப்படும் அபாயமும் இதிலிருக்கிறது.

 

இதற்கிடையே, விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்திய செயல்முறையே தவறு; அதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும்கூட, விவசாயிகளை நசுக்குவதில் குறியாக இருந்து வருகிறது எடப்பாடி மற்றும் மோடி கூட்டணி.

இந்த நிலையில்தான்,
எட்டுவழிச்சாலைக்கான
நில எடுப்பு வருவாய் அலுவலர்
குழந்தைவேலு தலைமையில்,
கடந்த 23.1.2019ம் தேதியன்று,
சேலத்தை அடுத்த
மாசிநாயக்கன்பட்டியில்
கருத்து கேட்பு கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்து நாற்பதுக்கும்
மேற்பட்ட விவசாயிகள்
சாலையில் அமர்ந்து
அறவழியில் போராட்டம்
நடத்தினர்.

 

அந்தப் போராட்டத்தின்போது,
முன்னெப்போதும் இல்லாத
வகையில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு
போலீசாரும் அங்கே ஆஜராகியிருந்தனர்.
மெட்டல் டிடெக்டர் மூலம்
விவசாயிகளை சோதனை செய்தனர்.
ஆர்ப்பாட்டம், மறியல்
போராட்டங்களின்போது
குறிப்பாக விவசாயிகளின்
போராட்டங்களில் வெடிகுண்டு
தடுப்புப் பிரிவினர் எல்லாம்
நுழைவது என்பது அப்போது வரை
நடைமுறையில் இல்லாத ஒன்று.
கியூ பிரிவு போலீசாரும்
போராட்டக் நிகழ்வுகளை
செல்போனில் பதிவு செய்தனர்.

காலையில் தொடங்கி மாலை வரை
நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும்,
விவசாயிகளுக்கும் ஏற்பட்ட
தள்ளுமுள்ளுவில் சிக்கியதில்
விவசாயிகள் சிவகாமி, கவிதா,
வடிவேல் ஆகியோர் மயக்கம்
அடைந்தனர். மூன்று பேருக்கும்
சேலம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அத்துடன் அந்த சம்பவம்
முற்றுப் பெற்றதாக விவசாயிகள்
நினைத்து இருந்தனர்.

 

இது ஒருபுறம் இருக்க,
2019 ஆகஸ்ட் 4ம் தேதியன்று,
சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத்
தொடங்கி வைக்க விவசாயி
மகனான எடப்பாடி பழனிசாமி
வந்திருந்தார். அவரிடம் நேரில்
மனு அளிப்பதற்காக
எட்டு வழிச்சாலை எதிர்ப்பு
இயக்க விவசாயிகள்
ஐம்பதுக்கும் மேற்பட்டோர்
திரண்டனர். ஆனால் அவர்களை
தடுத்து நிறுத்திய காவல்துறை,
நான்கு மணி நேரமாக
வெட்டவெளியில் மண் தரையில்
அமர வைத்தனர். நிகழ்ச்சி முடிந்து
முதல்வர் சென்ற பிறகு,
விவசாயிகளும் ஏமாற்றத்துடன்
கலைந்து சென்றுவிட்டனர்.

இவ்விரு சம்பவங்கள் முடிந்து
பல மாதங்கள் ஆன நிலையில்,
மாசிநாயக்கன்பட்டியில்
சாலை மறியலில் ஈடுபட்டதாக
திடீரென்று மோகனசுந்தரம் (59),
ரவி (47), கலா (43), நாராயணன் (43),
மூர்த்தி (40), சிவகாமி (39),
கவிதா (35), வடிவேல் (57),
பன்னீர்செல்வம் (53), வீரமணி (36)
ஆகிய 10 விவசாயிகள் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ்.

 

போராட்டம் நடத்திய விவசாயிகளை,
சட்ட விரோத கும்பலைச்
சேர்ந்தவர்களாக சித்தரித்து
வழக்குப்பதிவு செய்திருப்பதுதான்
பெரும் வேடிக்கை. இவர்கள் மீது
இந்திய தண்டனை சட்டம்
பிரிவு 143 (சட்ட விரோத
கும்பலின் உறுப்பினராக இருத்தல்),
பிரிவு 341 (சட்ட விரோதமாக
தடுத்து வைத்தல்), பிரிவு 353
(பொது ஊழியரை கடமையைச்
செய்ய விடாமல் தடுத்தல்),
பிரிவு 332 (பொது ஊழியரை
கடமையைச் செய்ய விடாமல்
தடுக்கும் நோக்கில் தம்மிச்சையாக
காயம் விளைவித்தல்) ஆகிய
நான்கு பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு
உள்ளது.

 

இது தவிர, அரசுப் பொருட்காட்சி
துவக்க விழாவன்று போராட்டம்
நடத்தியதாக 12 விவசாயிகள் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதிலும் ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது.
என்னவென்றால், வழக்குப்பதிவு
செய்யப்பட்டவர்களில் சின்னதம்பி
மகன் பழனிசாமி, கலா மற்றொரு கலா
என மூன்று போலியான
நபர்களின் பெயர்களையும்
இணைத்திருக்கிறது போலீஸ்.

 

சேலம் அம்மாபேட்டை,
பள்ளப்பட்டி ஆகிய இரு
காவல்நிலையங்களும்
மேற்சொன்ன இரண்டு
வழக்குகளைப் பதிவு
செய்திருக்கின்றன. இந்த வழக்கில்
கடந்த 26.12.2019ம் தேதி
சேலம் நீதிமன்றத்தில்
குற்றம்சாட்டப்பட்ட விவசாயிகள்
சிலர் ஆஜராகினர். விசாரணை
ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

இந்த பொய் வழக்குகள் தொடர்பாக, சேலம் மாவட்டம் பூலாவரி கூமாங்காட்டில் வசிக்கும் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரத்தை சந்தித்துப் பேசினோம்.

 

”சேலத்தில், கடந்த ஆண்டு (2019)
ஆகஸ்ட் மாதம், அரசுப்
பொருட்காட்சியைத் துவக்கி வைக்க
முதல்வர் வருகிறார் என்று
கேள்விப்பட்டு, எட்டு வழிச்சாலைக்கு
நிலம் கொடுக்க விருப்பம்
இல்லை என்று கோரிக்கை
மனுக்களை அவரிடம் நேரில்
கொடுப்பதற்காக சென்றிருந்தோம்.
போலீசார் எங்களை நிகழ்ச்சி
நடக்கும் இடத்திற்குச் செல்ல
விடாமல் நுழைவுப் பகுதியிலேயே
ரவுண்டு கட்டி உட்கார
வைத்துவிட்டனர். அவர்கள்
எங்களை தடுத்து நிறுத்திவிட்டு,
நாங்கள் என்னவோ போலீசாரை
தடுத்து வைத்ததுபோல்
வழக்கு ஜோடித்துள்ளனர்.

 

நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி
சம்மன் வந்தபோதுதான்
பொருட்காட்சி துவக்க விழாவன்று
மனு கொடுக்கப் போனதற்காக
எங்கள் மீது வழக்குப்பதிவு
செய்திருப்பதே தெரிய வந்தது.
எடப்பாடி பழனிசாமியின மோசமான,
சர்வாதிகாரமான ஆட்சிக்கு
இதுதான் உதாரணம். போலீசார்
மூலம் வழக்குப்போட்டு பயமுறுத்த
நினைக்கிறார்கள். இத்தனைக்கும்
எங்கள் மீது வழக்கு எதுவும்
பதியக்கூடாது என்று நீதிமன்றத்தில்
தடையாணையும் பெற்றிருக்கிறோம்.
அப்படியிருந்தும் வழக்குப்பதிவு
செய்திருக்கிறார்கள்.

 

நாடு போகும் போக்கே சரியில்லீங்க.
நாங்க எப்படியோ இந்த
எடப்பாடிக்கிட்டயும், மோடி
அரசாங்கத்துக்கிட்டயும்
ஓரியாடிக்கிட்டுப் போறோம்.
ஆனா எங்க புள்ளைங்கள இந்த
நாட்டுல எந்த நம்பிக்கையில்
விட்டுட்டுப் போகப் போறோம்னு
தெரியலீங்க. அவர்கள் இந்த
நாட்டில் சுதந்திரமாக வாழ
முடியும்கிற நம்பிக்கையை
மாநில அரசும் சரி; மத்திய
அரசும் சரி, இதுவரைக்கும்
கொடுக்கலைங்க. எத்தனை
வழக்குப் போட்டாலும்
எட்டுவழிச்சாலைக்காக ஒரு பிடி
மண்ணைக் கூட விட்டுத்தரப்
போறதில்ல,” என்றார்
மோகனசுந்தரம்.

 

குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் நம்மிடம், ”எட்டுவழிச்சாலைக்கான அவசியத்தைச் சொல்லிவிட்டு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துங்கள் என்றுதான் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடந்த 23.1.2019ம் தேதி முறையிட்டோம். அதில் என்ன தவறு இருக்கிறது? இத்தனைக்கும் எங்கள் தரப்பில் அன்றைக்கு 40 முதல் 50 பேர்தான் இருந்தோம். ஆனால், 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்தார்கள்.

 

மறியலில் ஈடுபட்ட ஒவ்வொரு விவசாயியையும் நாலைந்து போலீசார் தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். அப்படி இருக்கும்போது, நாங்கள் எப்படி அவர்களுக்கு காயத்தை விளைவிக்க முடியும்? எங்கள் சொந்த மண்ணுக்காக போராடுவதைக்கூட குற்றம் என்று வழக்குப் போடுகிறார்கள். எங்கள் தரப்பில் போராட்டம் நடத்திய சிலர் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தனர். போராடும் விவசாயிகளை அடக்கி, ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் நானும் விவசாயி மகன்தான் என்று சொல்லி வரும் முதல்வர் எடப்பாடி, கார்ப்பரேட் நலனுக்காகத்தான் செயல்படுகிறார். மத்திய அரசும் அப்படித்தான் இருக்கிறது. உண்மையான சுதந்திர போராட்டம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடுவதுதான். அப்படி ஒரு போராட்டத்தை நோக்கித்தான் மோடியும், எடப்பாடியும் எங்களை தள்ளுகிறார்கள்,” என கொந்தளித்தார்.

 

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள சின்னகவுண்டாபுரம் விவசாயி சிவகாமியிடம் கேட்டபோது, ”இப்போது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு விவரங்களைப் பார்க்கும்போது, எங்களை சமூக விரோதிகள் போல சித்தரிக்க வேண்டும் என்று போலீசார் முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதனால்தான் மாசிநாயக்கன்பட்டியில் நடந்த போராட்டத்தின்போது வெடிகுண்டு தடுப்புப்பிரிவையும் வரவழைத்து இருக்கிறார்கள்.

 

அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்குப்போட்டு பயமுறுத்திப் பார்ப்பதுதான் எடப்பாடியின் ஆளுமையா? ஊருக்கு சோறு போடும் விவசாயிகளான நாங்கள் யாரையும் பார்த்து பயந்துவிட மாட்டோம். பாலியல் குற்றவாளிகள், கொள்ளையர்கள், கொலைகாரர்களை எல்லாம் இந்த அரசாங்கம் தப்ப விட்டு வேடிக்கைப் பார்க்கிறது.

 

ஏற்கனவே சேலம் – உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலைத் திட்டத்தால் எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் விளை நிலத்தை இழந்தோம். பத்து ஆண்டுகள் ஆகியும், இன்னும் அதற்கே இழப்பீடு தொகை வந்தபாடில்லை. இது ஒரு நேர்மையற்ற அரசு. இப்போது எட்டுவழிச்சாலை வந்தால், இன்னும் 2 ஏக்கர் நிலத்தை பறிகொடுக்கும் நிலை உள்ளது. நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடினால், தூக்கி உள்ளே வைக்க துடிக்கிறார்கள். எத்தனை வழக்குப் போட்டாலும் நாங்கள் போராடுவதை நிறுத்தப் போவதில்லை,” என்றார்.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நீதிமன்றங்களில் தொடர்ந்து முழங்கி வரும் மூத்த வழக்கறிஞர் தோழர் பவானி பா.மோகனிடம் பேசினோம். ”அறவழியில் போராடி வரும் விவசாயிகள் மீதான காவல்துறை நடவடிக்கை சரியானதுதானா?,” என்று கேட்டோம்.

”இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (ஏ)-ன் படி, எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, ஆயுதமின்றி கூடும் உரிமை ஆகியவை நமது அடிப்படை உரிமைகள். அரசாங்கம் என்பது வேறு. அரசு என்பது வேறு. மோடி அரசாங்கத்தின் என்.ஆர்.சி.யை எதிர்த்துப் போராடுவதும், எடப்பாடியின் எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இந்த அரசாங்கத்தின் தவறான கொள்கையை எதிர்த்து போராடலாம். அதனால் தப்பில்லை.

 

பிரிவு 21, வாழ்வுரிமை பற்றி பேசுகிறது. நல்ல தண்ணீர், நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல வேலை கொடுப்பது அரசின் பொறுப்பு. அதைக் கேட்டுப் போராடுவது நமது உரிமை. அதைத் தர வேண்டியது அரசின் கடமை. ஆகையால் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது போராடுவதில் தவறில்லை. மக்கள் உரிமைகளுக்காக அரசாங்கத்தைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் பேசினால்கூட தவறில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது,” என்றார் தோழர் பவானி பா.மோகன்.

 

ஒருவேளை, விவசாயிகள் முதல்வர் முன்பு மண்டியிட்டோ, தவழ்ந்து போனாலோ அவர்கள் மீது கருணை காட்ட வாய்ப்பு இருக்கிறது.

 

– பேனாக்காரன்