Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

நாளை (11.1.2020) நடைபெற
இருக்கும் ஒன்றியக்குழு,
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்,
துணைத்தலைவர் பதவிகளுக்கான
மறைமுகத் தேர்தல்
நடவடிக்கைகளை வீடியோவில்
பதிவு செய்ய வேண்டும்
என்று சென்னை உயர்நீதிமன்றம்
வெள்ளிக்கிழமை (ஜன. 10,2020)
உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம்
அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த
செந்தில்குமார் மனைவி
புவனேஸ்வரி (47) திமுக
பிரமுகர். அண்மையில்
நடந்த ஊரக உள்ளாட்சித்
தேர்தலில், அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட
உடையாப்பட்டி கிராம ஊராட்சி
14வது வார்டு உறுப்பினராக
திமுக சார்பில் உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார்.

இவர், உயர்நீதிமன்றத்தில்
கடந்த 8ம் தேதி, மாநில
தேர்தல் ஆணையம்,
சேலம் மாவட்ட தேர்தல்
அதிகாரி, தேர்தல் நடத்தும்
அதிகாரி, சேலம் மாநகர
காவல்துறை ஆணையர்,
அம்மாபேட்டை காவல்
ஆய்வாளர் ஆகியோருக்கு
எதிராக ஒரு ரிட் மனுவை
தாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனுவில் புவனேஸ்வரி
கூறியிருந்ததாவது: சேலம்
மாவட்டம் அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியக்குழுவில் மொத்தம்
19 வார்டுகள் உள்ளன.
அண்மையில், நடந்த ஊரக
உள்ளாட்சித் தேர்தலில்
அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்தில் 14வது வார்டு
கவுன்சிலராக போட்டியிட்டு
வெற்றி பெற்றேன். இந்த
ஒன்றியக்குழுவின் தலைவர்,
துணைத்தலைவர் பதவிகளுக்கு
வரும் 11.1.2020ம் தேதி (நாளை)
மறைமுக தேர்தல் நடக்கிறது.
இதில் நான் தலைவர்
பதவிக்கு போட்டியிட உள்ளேன்.

 

மறைமுகத் தேர்தலின்போது,
சிலர் வார்டு கவுன்சிலர்களை
கடத்திச் செல்லவும்,
ஒரு தரப்பினருக்கு சாதகமாக
தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும்,
இன்ன பிற சட்ட விரோத
செயல்களை அரங்கேற்றவும்
திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதனால் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக மறைமுகத்
தேர்தலின்போது, அனைத்துக் கட்சி
வேட்பாளர்களுக்கும் காவல்துறை
பாதுகாப்பு வழங்க வேண்டும்.

 

மறைமுக தேர்தல்
நடைபெறும் இடத்தில் வார்டு
உறுப்பினர்கள் வருகை
பதிவேட்டில் கையெழுத்திடுவது
முதல் வேட்புமனுத் தாக்கல்,
தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வரை
அனைத்து நடவடிக்கைகளையும்
வீடியோவில் பதிவு செய்யவும்
உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு புவனேஸ்வரி
மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் ஆதிகேசவலு தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மறைமுகத் தேர்தல் நடைபெறும்போது தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும்; தேர்தல் நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

மனுதாரர் தரப்பில் திமுக தலைமை இடத்து வழக்கறிஞர் முத்துக்குமார், மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆகியோர் ஆஜராகினர். இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் நாளை நடக்க உள்ள ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொருந்தும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.