Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரு சுயேச்சையின் விலை 50 லட்சம்! அதிமுக, திமுக குதிரை பேரம்!!

ஊராட்சி ஒன்றியங்களில்
தலைவர் பதவிக்கு
பெரும்பான்மை கிடைக்காத
இடங்களில் சுயேச்சை
உறுப்பினர்களின் ஆதரவைப் பெற,
அவர்களிடம் ஆளும் அதிமுகவும்,
திமுகவும் குதிரை பேரத்தில்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடைசியாக 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 2016ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல வழக்குகளைக் கடந்து, ஒருவழியாக கடந்த டிசம்பர் 27, 2019 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடந்துள்ளது. அதுவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், சென்னை நீங்கலாக, 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.

 

இந்த உள்ளாட்சித் தேர்தலில்,
மாநில அளவில் திமுக அதிக
இடங்களை அறுவடை
செய்திருக்கிறது. அதேநேரம்,
எடப்பாடி தலைமையிலான
அதிமுகவும், கூடுமான வரை
எல்லா மாவட்டங்களிலும்
நெருங்கி அடித்திருக்கிறது.
ஓர் ஆளுங்கட்சியாக தேர்தலில்
எடப்பாடியின் அதிமுக அசுர
வெற்றியைப் பெறாமல் போனது,
அக்கட்சிக்கு பின்னடைவு
என்று வாதிடலாம். அதேநேரம்,
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு
நடந்த மக்களவைத் தேர்தலில்
தமிழகத்தில் 38 தொகுதிகளை
தட்டிப்பறித்த திமுக,
ஏன் உள்ளாட்சித் தேர்தலில்
முழுமையான வெற்றியைப் பெற
முடியவில்லை என்ற கேள்வியும்
எழுகிறது. மொத்தத்தில்,
நடந்து முடிந்த உள்ளாட்சித்
தேர்தல் என்பது, இரண்டு திராவிட
கட்சிகளுக்கும் ஒரு
‘பிரேக் ஈவன் பாயிண்ட்’
போலதான்.

 

தேர்தல் அரசியல் என்றாலே, அறுதிப் பெரும்பான்மை என்பது தவிர்க்க முடியாத மந்திரச் சொல்லாகி விடுகிறது. பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், மாற்றுக் கட்சிகளின் ஆதரவைப் பெற குதிரைப் பேரங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றாலும்கூட அதுவும் தவிர்க்க முடியாத அங்கம்தான். அதுவும், இப்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்து, கும்மாளமிட வைத்து, பேரங்கள் பேசி ஆட்சிக்கு வந்தவர்தான் என்பதை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் ஏனோ ஆளுங்கட்சி ஏனோ அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. அதேநேரம், அதிகாரம் பொருந்திய அமைப்புகளான ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளைக் குறி வைத்து காய்களை நகர்த்தி இருக்கிறது.

 

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிமுக கூட்டணியால் மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் 13 ஒன்றியங்களில் மட்டுமே முழு பலத்துடன் வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதாவது பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 13 இடங்களில் அதிமுக கூட்டணி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை எந்த ஒரு சிக்கலுமின்றி எளிதில் கைப்பற்றி விடும்.

 

அயோத்தியாப்பட்டணம் திக்…திக்…:

 

ஆனால், முக்கிய ஒன்றியமாக
கருதப்படும் அயோத்தியாப்பட்டணத்தில்
அதிமுக கூட்டணிக்கு 6,
திமுக கூட்டணிக்கு 7 இடங்களும்
கிடைத்துள்ளன. மேலும்,
செந்தில், பாரதி ஜெயக்குமார்,
மோனிஷா, சரிதா, சாந்தி,
சிந்தாமணி ஆகிய 6 சுயேச்சை
வேட்பாளர்களும் வெற்றி பெற்று,
இரு திராவிட கட்சிகளுக்குமே
‘டஃப்’ கொடுத்திருக்கிறார்கள்.
இந்த ஒன்றியத்தில் மொத்த
உறுப்பினர்களின் எண்ணிக்கை 19.
தலைவர் பதவியைக் கைப்பற்ற
குறைந்தபட்சம் 10 பேரின் ஆதரவு
தேவை என்பதால், இங்கே
சுயேச்சைகளின் ஆதரவின்றி
யாரும் தலைவர் பதவிக்கு
வந்து விட முடியாது. அதனால்
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில்
சுயேச்சைகளின் மதிப்பு
கூடியுள்ளது.

 

திமுகவில் சீட் கிடைக்காத
விரக்தியில் சுயேச்சையாக வைரம்
சின்னத்தில் போட்டியிட்ட
வேட்பாளர் செந்திலின் ஆதரவு,
திமுக கூட்டணிக்கே கிடைக்கும்
என்று தெரிகிறது. அப்படி கிடைத்தால்
திமுகவின் பலம் 8 ஆக அதிகரிக்கும்.
செந்திலின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில்,
திமுகவுக்கு தலைவர் பதவியைக்
கைப்பற்ற இன்னும் இரண்டு பேரின்
ஆதரவு மட்டுமே தேவை. அதேநேரம்,
அதிமுக தலைவர் பதவிக்கு வர
வேண்டுமெனில் குறைந்தபட்சம்
4 சுயேச்சைகளின் ஆதரவு தேவை
என்பதால், இரண்டு கட்சிகளுமே
சுயேச்சைகளிடம் தீவிரமாக
பேரம் பேசி வருகின்றன.

 

ஆளுங்கட்சித் தரப்பில்
மெடிக்கல் ராஜா, அனுப்பூர் மணி
ஆகிய இருவருமே அவரவர்
மனைவியை அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியக்குழுத் தலைவர் ஆக்கிவிட
துடிப்பதும், திமுகவுக்கு
சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த உள்கட்சி மோதல்,
எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடக்
கூடாது என்பதால் அந்தப்
பிரச்னையும் இப்போது
முடிவுக்கு வந்துள்ளதாகச்
சொல்கிறார்கள். அதாவது
அனுப்பூர் மணியின் மனைவி
பார்வதியை ஒன்றியத்
தலைவராகவும், மெடிக்கல் ராஜாவின்
மனைவி சந்திரகலாவுக்கு
துணைத்தலைவர் பதவியும்
வழங்கலாம் என்று அக்கட்சி
மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும்,
அத்துடன் அவர்கள் இருவருக்கும்
இடையிலான போட்டிக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும்
தகவல்கள் கிடைத்துள்ளன.

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில்
ஏற்கனவே தொடர்ச்சியாக
மூன்று முறை திமுகதான் தலைவர்
பதவி வகித்துள்ளது. அதனால்
இந்தமுறையும் தலைவர் பதவியைக்
கைப்பற்றி, நான்காவது முறையாக
தலைவர் நாற்காலியில் அமர அக்கட்சி
முழுவீச்சில் இறங்கியுள்ளது.
திமுகவுக்கு போதிய பெரும்பான்மை
கிடைக்கும்பட்சத்தில், அக்கட்சி
சார்பில் வெற்றி பெற்றுள்ள
ஹேமலதா விஜயகுமார் தலைவராக
பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில்,
திமுக கூடுதல் வாக்குகளுடன்
வெற்றி பெறும் நிலையில் இருந்தபோதும்,
வேண்டுமென்றே சுயேச்சைகள் சிலரை
வெற்றி பெற்றதாக அறிவித்து
இருப்பதில் அதிகாரிகளும்
ஆளும் கட்சியும் கூட்டாக மோசடி
செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
காரணம், சுயேச்சைகளை எளிதாக
தங்கள் கட்சிக்கு இழுத்து விடலாம்
என முன்கூட்டியே கணக்குப்
போட்டே இவ்வாறான மோசடியை
அரங்கேற்றி இருப்பதாகவும்
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதனால் இந்த முறை
அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்தைக் கைப்பற்றுவதில்
இரு திராவிடக் கட்சிகளுமே
நான்கு வகை உபாயங்களையும்
கையில் எடுத்திருக்கின்றன
என்கிறார்கள் விவரம்
அறிந்தவர்கள்.

 

ஆத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளன. இதில் 8 பேரின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அக்கட்சி தலைவர் பதவி ஏற்கும். இந்நிலையில், ஆத்தூர் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணிக்கு 7, திமுகவுக்கு 6, சுயேச்சைக்கு ஒரு இடமும் கிடைத்திருப்பதால், இங்கேயும் சுயேச்சையை வைத்து ஆடுபுலி ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது.

 

கெங்கவல்லி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் திமுக, அதிமுக தலா 5 இடங்களிலும், சுயேச்சை ஒருவரும் வென்றுள்ளார். இந்த ஒன்றியத்திலும் சுயேச்சையை வளைத்துப்போடும் வேலைகளில் இரு கட்சிகளுமே ஈடுபட்டுள்ளன. கொளத்தூரிலும் ஆளுங்கட்சி கூட்டணி தலைவர் பதவியைக் கைப்பற்ற வெற்றி பெற்றுள்ள இரண்டு சுயேச்சைகளில் குறைந்தபட்சம் ஒருவரின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

அதேபோல், காடையாம்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் அதிமுக கூட்டணிக்கு 8 இடங்களும், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இங்கே 7 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர்களில் குறைந்தபட்சம் 2 பேரின் ஆதரவைப் பெற்றால் அதிமுக கூட்டணி எளிதில் தலைவர் பதவிக்கு வந்துவிடும். அதேநேரம், திமுகவுக்கும் தலைவர் பதவிக்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லிட முடியாது. ஆனால் திமுக கூட்டணி தலைவர் பதவிக்கு வர அக்கூட்டணிக்கு இன்னும் 6 சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

 

திமுகவில், சேலம் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியங்களில் அக்கட்சிக்கு பலத்த அடி கிடைத்திருக்கிறது. அதனால், மத்திய மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட காடையாம்பட்டி ஒன்றியத்தில் என்ன விலை கொடுத்தாவது தலைவர் பதவியை வளைத்துப் போடுவதில் அக்கட்சியின் மாவட்டத் தலைமை தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

 

சுயேச்சையின் விலை 50 லட்சம்:

 

சுயேச்சைகளின் ஆதரவைப்
பெற திமுக, அதிமுக ஆகிய
இரு பெரும் கட்சிகளுமே
துணைத்தலைவர் பதவி,
தேர்தலுக்கு செய்த செலவுத்தொகை,
அரசு ஒப்பந்தப்பணிகள் என
எக்கச்சக்கமாக ஆசை காட்டி
வலையில் வீழ்த்தப் பார்க்கின்றன.
ஆதரவு தெரிவிக்கும் சுயேச்சைக்கு
திமுக, அதிமுக ஆகிய
இருகட்சிகளுமே குறைந்தபட்சம்
15 லட்சம் முதல் அதிகபட்சம்
30 லட்சம் ரூபாய் வரை
முதல்கட்டமாக பேரம் பேசி
வருவதாக தகவல்கள்
வெளியாகின. ஆனால், இந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொண்ட சுயேச்சைகள் சிலர்,
இரு திராவிட கட்சிகளிடமும்
பேரங்களை உயர்த்தி
இருப்பதாகவும் சொல்கின்றனர்.

 

குறிப்பாக, அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்தில் குறிப்பிட்ட
இரண்டு சுயேச்சைகளிடம்
ஆதரவைப் பெற, இரு முக்கிய
கட்சிகளுமே 50 லட்சம் ரூபாய்
வரை பேரம் பேசி இருப்பதாக
நேற்று (ஜன. 5, 2020) தகவல்கள்
வெளியாகி உள்ளன. ஆளுங்கட்சி
சற்று ஒரு படி மேலே சென்று,
சுயேச்சைகள் சிலரை மிரட்டும்
தொனியிலும் பேசி வருவதாகவும்
கூறுகின்றனர். ஏதோ ஒரு
கட்சிக்கு ஆதரவு நிலைக்கு
வந்துவிட்ட சுயேச்சைகள்
பேரங்களில் இருந்து தப்பிக்க,
தங்களது செல்போனை
‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டனர்.

 

ஆதரவுக் கடிதம் அளிக்கும்
சுயேச்சைகளை மறைமுகத்
தேர்தல் நடக்கும் வரை,
கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு
சொகுசு வசதிகள் செய்து
கொடுத்ததுபோல், அவர்களை
உற்சாகப்படுத்தவும் இரு
கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில்
வெற்றி பெற்றவர்கள் இன்று
(ஜன. 6) பதவி ஏற்கிறார்கள்.
பதவியேற்பு முடிந்ததும்
சுயேச்சைகளை முக்கிய
கட்சிகள் சொகுசு விடுதிகளுக்கு
அழைத்துச் செல்லவும்
திட்டமிட்டுள்ளன.

 

கட்சித்தாவல் தடைச்சட்டம் பொருந்துமா?:

 

இது ஒருபுறம் இருக்க,
சேலம் மாவட்டத்தில்
சேலம் ஒன்றியத்தில்
மொத்தமுள்ள 10 உறுப்பினர்
பதவியிடங்களில் திமுக,
அதிமுக ஆகிய இரு
கூட்டணிகளுமே
தலா 5 இடங்களைக்
கைப்பற்றியிருக்கின்றன.
அதேபோல் ஏற்காடு
ஒன்றியத்திலும் மொத்தமுள்ள
6 உறுப்பினர் பதவியிடங்களில்
இரு திராவிட கட்சிகளும்
தலா 3 இடங்களில் வென்றுள்ளன.
இவ்விரு ஒன்றியங்களிலும்
ஒரு கட்சியில் இருந்து
இன்னொரு கட்சிக்கு ஆள்களை
இழுக்கும் வேலைகளும்
நடந்து வருகின்றன.

 

ஒருவேளை, கட்சி மாறி வாக்களித்தாலோ, வெற்றி பெற்ற பிறகு வேறு கட்சிக்கு சென்றாலோ பதவி பறிபோய் விடுமா? என்று நீங்கள் கேட்டால், அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்பதுதான் பதிலாக அமையும். கட்சித்தாவல் தடை சட்டம் என்பது மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர், மேலவை உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்துமே அன்றி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை அச்சட்டம் கட்டுப்படுத்தாது.

 

சம பலம் இருந்தால் என்னாகும்?:

 

இரு கட்சிகளின் பலமும் சம அளவில் இருந்து, இரு தரப்பில் இருந்தும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும்பட்சத்தில், அங்கு வேறு வழியின்றி பழங்காலத் தேர்தல்களில் நடந்ததுபோல், குலுக்கல் முறையில்தான் இருவரிர் ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். எக்காரணம் கொண்டும் மறுதேர்தலுக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம், வெற்றி பெற்ற ஒருவர், இறந்து விட்டால், அந்த பகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும். அது, வழக்கமான நடைமுறைதான்.

 

ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வரும் 11ம் தேதி (சனிக்கிழமை) மறைமுகத் தேர்தல் நடக்கிறது.

 

– பேனாக்காரன்