Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பியூ ரிசர்ச்’, 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் கட்டாயமாக்கல் என்று பல்வேறு அதிரடி தாக்குதல்களை பாஜக அரசு நடத்தினாலும், 85 சதவீத மக்கள் மோடி தலைமையிலான அரசை முழுமையாக நம்புவதாக பியூ ரிசர்ச் முடிவுகள் கூறுகின்றன. பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டு அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது பியூ அமைப்பு.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒருவராவது, அதாவது 27 சதவீதம் பேர், வலிமையான தலைவர்தான் நாட்டுக்கு தேவை என கூறியுள்ளனர். 55 சதவீதம் பேர் ராணுவ ஆட்சி தேவை என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து வெவ்வேறு வகையில் இருந்தபோதிலும், அவர்கள் கூற வந்த கருத்து, ராணுவ ஆட்சி என்பதுதான்.

அதேநேரம், ரஷ்யாவில் 48 சதவீதம் பேர் வலிமையான தலைவர் வேண்டும் என்றும், அரசு மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளனர். அரசு மீது நம்பிக்கை கொண்டோர் ரஷ்யாவை காட்டிலும் இந்தியாவில் அதிகம்.

ஆசிய பசிபிக் நாடுகளில், அரசில் நல்ல தொழில்நுட்ப நிபுணர்கள் இருக்க வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்பும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வியட்னாமில் 67 சதவீதம், இந்தியாவில் 65 சதவீதம், பிலிப்பைன்சில் 62 சதவீதம் மக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆட்சியில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலிய மக்களின் எண்ணம் வேறு மாதிரி உள்ளது. 57 சதவீத ஆஸி. மக்கள், அது ஆட்சி நடத்தும் நடைமுறை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 55 சதவீத இந்தியர்களும், 52 சதவீத தென் ஆப்பிரிக்கர்களும், தங்கள் நாட்டுக்கு ராணுவ ஆட்சிதான் சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளபோதிலும், அதில் 50 வயதுக்கு மேற்பட்டோர் ஜனநாயகமே சிறந்தது என்று பதில் அளித்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.