Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆஸியை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் ‘ஹாட்ரிக்’ சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (செப். 21) நடந்தது.

சதத்தை நழுவவிட்ட கோஹ்லி:

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து, ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே, கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் அபாரமாக ஆடி அரை சதம் கடந்தனர். ரஹானே 55 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 92 ரன்களில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்களை குவித்தது.

எனினும் அடுத்து வந்த மனீஷ் பாண்டே (3), கேதர் ஜாதவ் (24), தோனி (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களின் ‘பார்ட்னர்ஷிப்’ நீண்ட நேரம் நிலைக்கவில்லை. குல்தீப் யாதவ் ‘டக்’ அவுட் ஆனார். புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ரிச்சர்ட்சன் வேகத்தில் வீழ்ந்தனர். அடுத்து வந்த சாஹல் 1 ரன்னில் வெளியேற, 50 ஓவர்களில் இந்திய அணி 252 ரன்களை குவித்தது.

ஸ்மித்-100:

இந்தப் போட்டி, ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100வது ஒரு நாள் போட்டியாகும். அதனால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் கார்ட் ரைட், டேவிட் வார்னர் ஆகியோரை தலா 1 ரன்னுடன் வெளியேற்றினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார். ஹெட் 39 ரன்களில் வெளியேறினார். அபாயகரமான ஆட்டாக்காரரான மேக்ஸ்வெல், சாஹல் சுழலில் 14 ரன்களுடன் மூட்டை கட்டினார். கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் குவித்தார். அந்த அணியின் ஸ்டோனிஸ் மட்டும் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்தார். ரிச்சர்ட்சன் டக் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கேப்டன் விராட் கோஹ்லி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 வது ஒருநாள் போட்டி, வரும் 24ம் தேதி, இந்தூரில் நடக்கிறது.

குல்தீப் யாதவ்

குல்தீப் ‘ஹாட்ரிக்’:

சைனா மேன் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 33வது ஓவரின் 2வது பந்தில் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதே ஓவரின் 3 மற்றும் 4வது பந்துகளில் ஏகார், கம்மின்ஸ் ஆகியோரை ‘டக்’ அவுட் ஆக்கினார் குல்தீப் யாதவ். இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று பேரை ஆட்டமிழக்கச் செய்து, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

ஏற்கனவே இந்திய அணியின் சேட்டன் ஷர்மா, கபில்தேவ் ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் இதேபோல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். அந்த சாதனையை செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் தற்போது பெற்றுள்ளார்.

கண்டம் தப்பிய பாண்ட்யா:

50 ஓவர்கள் முடிய 15 பந்துகள் இருந்த நிலையில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் வீசிய ஒரு பந்தை புவனேஷ்வர்குமார் வேகமாக அடித்து ஆடினார். அந்தப் பந்து எதிர் முனையில் நின்று கொண்டிருந்த ஹர்திக் பாண்ட்யாவின் தலைக்கவசத்தை தாக்கியது.

ஹர்திக் பாண்ட்யா

அதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து பாண்ட்யா அணிந்திருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டு ‘கிரில்’ மீது தாக்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பாண்ட்யா, அப்படியே தரையில் கீழே குப்புற விழுந்தார். ஆஸி., பந்து வீச்சாளர்களும் ரொம்பவே பதற்றம் அடைந்தனர். இந்திய அணி பிஸியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டார். எனினும் சில நிமிடங்களில் மன உறுதியால் எழுந்த பாண்ட்யா அதன்பின் தொடர்ந்து ஆடினார்.

இணைப்பு.