இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஒரு மாணவர், உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளஸ்-2வில் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலையில் வீழ்வது அனிதா மட்டுமே அல்ல; இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை (2015).
கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 8934 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை. அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் மொத்தம் 39775 மாணவர்கள் ஏதேதோ காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உலகளவில் ஆண்டுதோறும் சராசரியாக 8 லட்சம் பேர் தனக்குத்தானே உயிரை மாய்த்துக் கொள்வதாக மற்றோர் ஆய்வு சொல்கிறது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 135000 பேர் தம் வாழ்வு முடியும் முன்னரே நம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுகின்றனர். ஒட்டுமொத்த தற்கொலையில் இது 17 விழுக்காடு. இந்திய அளவில், அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம். இங்கு ஒரு லட்சம் பேரில் 24.9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் ஒரு செய்தி ஆறுதலானது என்றும் சொல்லலாம். பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகளவில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.
உயிரை மாய்த்துக் கொள்ள நிறைய வழிமுறைகளைக் கையாண்டாலும், பெரும்பாலும் விஷம் குடித்தல் அல்லது தூக்கில் தொங்கும் முடிவைத்தான் எடுக்கின்றனர்.
மாணவர்கள் ஏன் தற்கொலை செய்கின்றனர் என்பதில் சில பிரதான அம்சங்கள் முன்வைக்கப்படுகிறது. பள்ளியோ, கல்லூரியோ தேர்வில் தோல்வி அடைவதால் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலையில் ஈடுபடுவதுதான் முதன்மைக் காரணியாக இருக்கிறதாம். அதீத எதிர்பார்ப்புகள்¢, காதல் தோல்வி போன்ற காரணிகளும் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால், எந்தச் சூழ்நிலையில் ஒரு மாணவர் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார் என்பதைக் கவனிக்கும்போது, நாம் கொஞ்சம் மெனக்கெட்டால் தற்கொலையில் இருந்து அவர்களை காப்பாற்றி விடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவே தெரிகிறது.
பெற்றோருடன் சரியான உறவில் இல்லாத மாணவர்கள், தனிமையில் இருப்பவர்கள், உதவிக்கு யாரும் இல்லையே என்று ஏங்குபவர்கள், கடும் மன அழுத்தத்தில் உள்ளவர்கள்தான் தற்கொலை முடிவை நாடுவதாகச் சொல்கின்றன ஆய்வுகள். அதேரேம், மகிழ்ச்சிகரமான குடும்பங்களில் இதுபோன்ற விபரீதங்கள் மிகவும் குறைவு என்பது ஆறுதலான விஷயம். பெரும்பாலும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள சரியான ஆட்கள் இல்லாதபோதும், தோழமையுடன் சாய்ந்து கொள்ள தோள்கள் கிடைக்காதபோதும்தான் இத்தகைய சோக முடிவுகளை எடுப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு அடிப்படையே மனநலத்தில் ஏற்படும் பிறழ்வுதான். 120 கோடி மக்கள்தொகை உள்ள இந்த நாட்டில் போதிய எண்ணிக்கையில் மனநல ஆலோசகர்கள் இல்லை என்பது இந்த நாட்டின் ஆகப்பெரிய சாபக்கேடு. ஆரோக்யமான மனநலத்தைப் பேணுவதில் நம் நாடு அக்கறையே செலுத்தவில்லை என்பது, அந்த துறைக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். மொத்த பட்ஜெட்டில் மனநலத் துறைக்கு, வெறும் 0.06 விழுக்கடு நிதி மட்டும் இந்தியா செலவிடுகிறது. பங்களாதேசம்கூட இவ்விஷயத்தில் நம்மை விட கூடுதல் நிதி (1.44) ஒதுக்குகிறது.
இன்றைய நிலையில், நம் நாட்டில் 38000 உளவியல் நிபுணர்களே (சைக்கியாட்ரிஸ்டுகள்) உள்ளனர். உலக சுகாதார நிறுவன பரிந்துரைப்படி ஒரு லட்சம் பேருக்கு 5.6 மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த விகிதம் 10 லட்சம் பேருக்கு 3 என்றளவில்தான் இருக்கிறது. நம் மக்கள் தொகைக்கு இப்போது 66200 தொழில்முறை மனநல மருத்துவர்கள் தேவை என்கிறது ஆய்வு.
தொழில்முறை ஆலோசகர்களுடன் ஒப்பிடுகையில் நாம் சாதாரணர். ஆனால், சோகங்களை சொல்லும் ஒருவரிடம் சில நிமிடங்கள் நம் காதுகளை கொடுப்பதிலோ, சாய்ந்து கொள்ள தோள்களைக் கொடுப்பதிலோ நாம் எதையும் இழந்துவிடப் போவதில்லை. மாறாக, கிடைக்கப் பெறுகிறோம். அது, தோழமை.
– அகராதிக்காரன்.
தொடர்புக்கு: selaya80@gmail.com