Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

5 லட்சம் ரூபாய்க்கு அரசு வேலை!; ஆசை வலை விரித்து மோசடி செய்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்கள் இருவர் கைது!!

தமிழ் வளர்ச்சித்துறையில், வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வலை விரித்து, காவலரின் மனைவியிடமே 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

சென்னை புது வண்ணாரப்பேட்டை
காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்
ரேணியல். காவலராக பணியாற்றி
வருகிறார். இவருடைய மனைவி
அனிதா கார்மெல் (43). இவர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு
ரயில் மூலம் சொந்த ஊருக்குச்
சென்றுள்ளார்.

 

அப்போது,
அதே ரயிலில் பயணம் செய்த
திருப்பாச்சூரைச் சேர்ந்த
அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்
மேகலா (59) என்பவருடன்
தொடர்பு ஏற்பட்டது.
அப்போது மேகலா,
”அரசுத் துறைகளில் பல உயர்
அதிகாரிகளுடன் எனக்கு
நெருக்கமான நட்பு உள்ளது.
யாருக்காவது அரசு வேலை
வேண்டுமானால் சொல்லுங்கள்.
இப்போது கூட தமிழ் வளர்ச்சித்துறையில்
காலிப்பணியிடம் இருக்கிறது.
யாராவது வேலைக்குச் செல்ல
தயாராக இருந்தால் சொல்லுங்கள்,”
என்று கூறியுள்ளார்.

 

இதை நம்பிய அனிதா கார்மெல்,
தனக்கு வேலை வாங்கிக்
கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதற்காக மேகலா கேட்டுக்கொண்டபடி,
அவரிடம் இரண்டு தவணையாக
5 லட்சம் ரூபாயை அனிதா கார்மெல்
கொடுத்துள்ளார். ஆனால் மேகலா,
உறுதியளித்தபடி அரசு வேலை
வாங்கிக் கொடுக்கவில்லை.
இந்த மோசடியில் உடந்தையாக
கொளத்தூர் விநாயகபுரம்
அரசுப்பள்ளி பெண் ஆசிரியர்
சத்யபிரியா (39) என்பவரும்
இருந்துள்ளார்.

 

இதையடுத்து அனிதா கார்மெல்,
தன்னிடம் மோசடி செய்த இருவர் மீதும்
கடந்த 2017ம் ஆண்டில்
புது வண்ணாரப்பேட்டை
காவல்நிலையத்தில்
புகார் அளித்தார்.

காவல்துறையினர் இருவரையும்
அழைத்து விசாரித்தபோது,
அனிதா கார்மெல்லிடம் வாங்கி
பணத்தைக் கொடுத்து விடுவதாக
மேகலா, சத்யபிரியா ஆகியோர்
கூறியுள்ளனர். அதன்பிறகும்
பணத்தை திருப்பிக் கொடுக்காமல்
ஏமாற்றி வந்துள்ளனர்.

 

இதுகுறித்து சென்னை மாநகர
காவல்துறை ஆணையரிடம்
அனிதா கார்மெல் புகார் அளித்தார்.
அவருடைய உத்தரவின்பேரில்
மீண்டும் புது வண்ணாரப்பேட்டை
காவல்நிலைய காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்து
தலைமை ஆசிரியர் மேகலா,
ஆசிரியர் சத்யபிரியா ஆகிய
இருவரையும் கைது செய்தனர்.

 

இருவரையும் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்திய காவல்துறையினர்,
நீதிமன்ற உத்தரவின்பேரில்
இருவரையும் புழல் சிறையில்
அடைத்தனர். இவர்களில்
தலைமை ஆசிரியர் மேகலா,
ஏற்கனவே பள்ளியில் சில முறைகேடுகளில்
ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில்
ஒருமுறை பணியிடை நீக்கம்
செய்யப்பட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது.