Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘ஓ! பக்கங்களால்’ வாசகர்களை கவர்ந்த ஞாநி!

மூத்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன், இன்று (ஜனவரி 15, 2018) அதிகாலை திடீர் மூச்சுத்திணறலால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அவருடைய எழுதுகோல் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது.

ஞாநி சங்கரன், செங்கல்பட்டில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர், சங்கரன். அவருடைய அப்பா, வேம்புசாமி. அவரும் பத்திரிகையாளர்தான். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி, டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

ஞாநி என்றாலே பலருக்கு சட்டென நினைவுக்கு வருவது அவருடைய ஓ! பக்கங்கள்தான். விகடன் இதழில் அவர் எழுதி வந்த ஓ!பக்கங்கள் கட்டுரைக்கென தனி வாசகர் வட்டமே உண்டு. அதன்மூலமாக அவர் அரசியல் தளத்திலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தினார். முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும், பொதுவுடைமை, மதச்சார்பின்மை சித்தாந்தங்களை உயர்த்திப் பிடித்தார்.

இன்றைக்கு பத்திரிகையாளர்கள் பல விதங்களில் சமரசத்திற்கு ஆளாவது இயல்பானதாகவே மாறிவிட்டது. சமரசம் என்ற இத்யாதிகளில் இருந்து தொடக்கம் முதலே விலகி நின்றவர் ஞாநி. பாரம்பரியமான விகடன் இதழில் இருந்தே, ஓ! பக்கங்களை பெயர்த்து எடுத்துக்கொண்டு குமுதம் இதழுக்கு சென்றார். காரணம், தன்மானம்.

அங்கும் அவருடைய எழுத்துக்களுக்கு பங்கம் ஏற்பட்ட நிலையில், அதிலிருந்தும் விலகி கல்கியிலும் ஓ! பக்கங்களைத் தொடர்ந்தார். ஒரு பத்திரிகையாளனுக்கு கருத்துச் சுதந்திரம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு சுயமரியாதையும் முக்கியம் என்பதை தன் வாழ்வியல் மூலமாகவே உலகத்திற்குப் உணர்த்தியவர் ஞாநி.

ஓ! பக்கங்களைப் பற்றி பேசுகையில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். அது, 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேரம். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்குள் கூட்டணி தொடர்பான மனத்தாங்கல். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு யாருமே எதிர்பாராத வகையில், திமுக தலைவர் கருணாநிதி 63 இடங்களை வாரி வழங்கினார்.

அதைப்பற்றி ஞாநி தன்னுடைய ஓ! பக்கங்களில், ”கி.வீரமணி, கருணாநிதியை மானமிகு கலைஞர் கருணாநிதி என்பார். அதை இப்போது அவமானமிகு கலைஞர் சரணாகதி என்று சொல்லலாம்,” என்று நையாண்டியாக குறிப்பிட்டார். காங்கிரஸ் உடனான கூட்டணி பேரத்தில் திமுக சறுக்கிவிட்டதையே அவர் இப்படி குறிப்பிட்டார். அதேபோல், அந்த தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்க அதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.

அரசியல் குறித்து அவருடைய கோணம் எப்போதுமே வித்தியாசமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது, தமிழக அரசியல் வெற்றிடம் குறித்து அதிமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், பழ.நெடுமாறன், அவரைத் தொடர்ந்து வைகோ, அண்மையில் மக்கள் நலக்கூட்டணி என மாற்று அரசியல் மூலம் வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சிகள் மேற்கொண்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அரசியல் வெற்றிடம் என்பதை இன்னும் நுட்பமாக வரையறுக்கிறார்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே ஆட்சியில் இருந்திருக்கின்றன. அங்கு இரு கட்சிகளும் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஆம் ஆத்மி கட்சியால் எப்படி அங்கு ஆட்சிக்கு வர முடிந்தது?. அதற்குக் காரணம், அவ்விரு கட்சிகளும் செய்த தவறுகள்தான் அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு மாற்று அரசியலை ஆம் ஆத்மி முன்வைத்தது. அதனால் அக்கட்சியால் அங்கு ஆட்சிக்கு வர முடிந்தது என்கிறார் ஞாநி.

வெற்றிடம் என்பது, ஒருவரின் இருப்பைப் பொருத்தது அல்ல; அது சித்தாந்தத்தைப் பொருத்தது என்பதாக அவருடைய நிலைப்பாடு இருந்து வந்துள்ளதாக கருதுகிறேன்.

அதேபோல்தான் தமிழ்நாட்டிலும் இரு திராவிட கட்சிகளுக்கும் பொதுவாக உள்ள ஊழல், அராஜகம், குடும்ப அரசியல்; இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் கட்சியால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்கிறார். மேலும், பாஜக, ரஜினிகாந்த் ஆகியோரால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதும் அவருடைய அபிப்ராயமாக இருந்திருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பத்திரிகைகளில் பணியாற்றியது மட்டுமின்றி, திமுக நாளேடான முரசொலி சார்பில் வார இணைப்பாக வெளிவந்த புதையல் இதழிலும் பொறுப்பாசிரியராக இருந்தார். அப்போது நாட்டையே உலுக்கிய போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, புதையல் இணைப்பில் தொடர்ந்து விரிவான கட்டுரைகளை எழுதி வந்ததும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

தீம்தரிகிட என்ற இதழையும் நடத்தி வந்தார். பத்திரிகையாளராக மட்டுமில்லாமல் பரிக்ஷா என்ற அமைப்பின் மூலம் நாடகங்களையும் நடத்தினார். கடைசியாக அவர் நேற்றுகூட தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

அதில், ”துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பிஜேபி நிலை எடுக்கிறார். சோ, இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பிஜேபியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி பிஜேபி சங்கப்பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத்தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்,” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்து உலகில் மட்டுமின்றி, இறப்பிலும் அவர் தனித்து நிற்கிறார். ஆம். ஞாநியின் உடல், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமரசமற்ற எழுத்தாளர் ஞாநிக்கு ‘புதிய அகராதி’ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

– பேனாக்காரன்.