Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

(ஏப்ரல்-2017, “புதிய அகராதி” இதழில்…)

 

‘கக்கூஸ்’ அவணப்படத்தின் மூலம்
மனிதக்கழிவு அகற்றும் தூய்மைப்
பணியாளர்களின் துயர நிலையை,
அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை
அப்பட்டமாக தோலுரித்துக்
காட்டியிருக்கிறார் திவ்யபாரதி.
அவருடனான உரையாடலில் இருந்து…

 

புதிய அகராதி: துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் எப்போது வந்தது?

 

திவ்யா: கடந்த 2015ம் ஆண்டு மதுரையில், மலக்குழியில் இறங்கி வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விட்டனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் போராடின.

 

அப்போது, இறந்த ஒரு தொழிலாளியின் இளம் மனைவி ‘வா மாமா வா மாமா….’ என கணவரை அழைத்தபடியே கதறி அழுது கொண்டிருந்தார். என் கவனமெல்லாம் அந்தப் பெண்ணின் மீதே இருந்தது. அந்தத் தருணத்தில் இருந்துதான் நான் துப்புரவுத் தொழிலாளர்களைப் பற்றி அதிகம் கவனிக்கத் தொடங்கினேன்.

 

மதுரை சம்பவம் நடந்த மூன்று மாதத்திற்குள் மேலும் 7 பேர் என மொத்தம் 10 துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயுத் தாக்கி இறந்தனர். இதுவும் இந்த ஆவணப்படம் உருவாக முக்கிய காரணம். மலக்குழியில் இறங்கி மனிதர்கள் வேலை செய்யும் அவலநிலை எல்லா மாநிலங்களிலுமே இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களிலும்கூட இதே நிலைதான்.

புதிய அகராதி: துப்புரவு தொழிலாளர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன?

 

திவ்யா: கிட்டத்தட்ட 44 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் இந்த உபகரணங்கள் வழங்கப்படுவது இல்லை. முழங்கால் வரையிலான பூட்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பூட்ஸை போட்டுக்கொண்டு துப்புரவு தொழிலாளர்கள் சாக்கடைக் குழியில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். முழங்காலுக்கு மேல் கழிவு நீர் ஓடும்போது, அந்த கழிவுநீர் பூட்சுக்குள்ளும் போய்விடுகிறது. இது எப்படி பாதுகாப்பு உபகரணமாகும்?

 

புதிய அகராதி: துப்புரவு தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனரா?

 

திவ்யா: நிச்சயமாக. இப்போது
துப்புரவுப் பணிகள் எல்லாம் 90%
தனியார்மயமாக்கப்பட்டு விட்டது.
இது, அவர்கள் மீது நடத்தப்படும்
வன்முறையாகத்தான் பார்க்கிறேன்.
இனி எந்த ஒரு விபரீதம் நடந்தாலும்
அரசு, ஒப்பந்ததாரர்கள் மீது பழி
போட்டுவிட்டு தப்பித்து விடும்
அபாயம் இருக்கிறது.

 

புதிய அகராதி: ‘கக்கூஸ்’ ஆவணப்படம் திரையிடுவதில் ஏதேனும் தடைகள் இருந்தனவா?

 

திவ்யா: தணிக்கை சான்றிதழ் பெறவில்லை
எனக்கூறி, திரையிடக்கூடாது என
போலீசார் சில இடங்களில்
தடை விதித்தனர்.

 

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி.,
எங்களை நக்சல்வாதி, ‘ஆன்டி சோஷியல் எலிமென்ட்’
என்றெல்லாம் சொல்லி திரையிட
தடை விதித்தார். தணிக்கை
சான்றிதழைத் தாண்டி,
அவர்களுக்கு எங்களின் அடையாளம்தான்
பிரச்னையாக இருந்திருக்கிறது.
அதன்பிறகு பல இடங்களில்
வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

புதிய அகராதி: விஷ வாயு தாக்கி பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறதா?

 

திவ்யா: இழப்பீடு தொடர்பாக 2014ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. 1993ல் இது தொடர்பாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதுமுதல் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றது அந்த தீர்ப்பு. இதுபோன்ற விபத்தில் இறந்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

 

மதுரை சம்பவத்திற்குப் பிறகு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசே தானாக முன்வந்து இதுவரை யாருக்கும் இழப்பீடு வழங்கியதில்லை. போராடினாலோ, பாதிக்கப்பட்டவர் குறித்து ஊடக வெளிச்சத்திற்கு வந்த பிறகோதான் இழப்பீடு கொடுக்க அரசு முன்வருகிறது.

 

புதிய அகராதி: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

 

திவ்யா: தூய்மை இந்தியா திட்டம்
என்பதே ஓர் உள்ளீடற்ற வெற்றுத் திட்டம்தான்.
அதற்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும்
சம்பந்தமே இல்லை. தூய்மை இந்தியா
திட்டத்திற்கு 2 லட்சம் கோடி ஒதுக்குகிறது.
ஆனால், இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு
10 லட்சம் ரூபாய் தர தயாராக இல்லை.
கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கொண்டு
அரசு கழிப்பறை கட்டுகிறது.
நாம், கழிப்பறையை சுத்தம்
செய்யும் தொழிலாளர்களின்
மாண்பைப் பற்றி பேசுகிறோம்.

 

புதிய அகராதி: மனிதக் கழிவகற்றும் துயரத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க ஏதேனும் மாற்றுத்தீர்வு வைத்திருக்கிறீர்களா?

 

திவ்யா: துப்புரவு தொழிலாளர்களுக்கென 1993ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தை மேம்படுத்தி, கடந்த 2013ம் ஆண்டில் ‘தடை மற்றும் மறுவாழ்வு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. இதிலேயே எல்லா விதமான தீர்வுகளும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றால் முதலில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடந்த 2015ல் தமிழக அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில், மனிதக்கழிவகற்றும் பணியில் 462 பேர்தான் இருப்பதாக ஒரு பொய்யான கணக்கைக் காட்டியது. அவர்களின் இருத்தலையே அரசு மறைக்கிறது. இங்கு எல்லாமே தோல்விதான்.

 

சட்டம்…திட்டம்…நீதிமன்ற தீர்ப்பு எல்லாமே இந்த விஷயத்தைப் பொறுத்தவரை போதும் போதும்கிற அளவுக்கு இருக்கு. யாருக்கோ பிரச்னை என்று நாம் ஒதுங்கி இருக்கிறோம். அது வர்க்க அரசியல் பேசும், தமிழ்தேசிய அரசியல் பேசும் இயக்கங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம், இருக்கும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதை போராட்டமாக மாற்றத்தயாராக இல்லை. இது நம்முடைய பிரச்னை.

புதிய அகராதி: மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையை எப்படி பார்க்கிறது?

 

திவ்யா: எல்லா அரசுகளின் போக்கும் சாதிய மனநிலையில்தான் இருக் கின்றன. அதனால்தான் தொடர்ந்து மலக்குழி சாவுகள் நடக்கின்றன. அவர்களுடைய மாண்பை, வாழ்வை யாரும் கண்டுகொள்ளவில்லை. சாகறவன் ஒரு தலித். மலம் அள்ளுபவன் ஒரு தலித். அவர்கள் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற அஜாக்கிரதையான பார்வைதான் இருக்கிறது.

 

புதிய அகராதி: இப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

 

திவ்யா: சட்டத்தை கடுமையாக்குவது
அல்லது துப்புரவுப் பணிகளை
நவீனப்படுத்துவதன் மூலமாக எல்லாம்
மலக்குழி மரணங்களை தடுத்து விட முடியாது.
இது சாதி ஒழிப்பு அரசியலோடு தொடர்புடையது.
அதை உயர்த்திப் பிடிக்காமல் இப்பிரச்னைக்கு
தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை.
துப்புரவு தொழிலாளர்கள் இனிமேல்
மலத்தை எடுக்க மாட்டோம் என்று
அணிதிரள வேண்டும். அதைச் செய்ய
இங்கு எந்த அமைப்புகளும்
தயாராக இல்லை. இடதுசாரி
அமைப்புகள் உள்பட.

தலித் அமைப்புகள், இடதுசாரி
அமைப்புகளை எதிரிகள்போல பார்க்கின்றன.
சாதி ஒழிப்பு அரசியலை இடதுசாரிகளும்,
தலித் அமைப்புகளும் உயர்த்திப் பிடிக்கும்
போதுதான் மனிதக் கழிவகற்றும்
பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 

உரையாடல்: ஓசூர் கிருஷ்ணமூர்த்தி.

 

(‘கக்கூஸ்’ ஆவணப்பட டிவிடி பெற தொடர்புக்கு: 95970 08558, 95516 29055.)

(புதிய அகராதி: 9840961947)