Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

– தில்லை தர்பார் –

 

தன்னம்பிக்கை என்பது
கடையில் வாங்கும் பொருளல்ல.
ஆனாலும், அதைப்பெற
என்ன செய்வது என்று
யோசித்து பார்த்தபோது
உடனே ஞாபகம் வந்தது
ஓர் அருமையான
நண்பரின் பெயர்.

 

எட்டு வருடங்களுக்கு முன்னால்
திடீரென்று என் கணவருக்கு
ஒரு விபத்து நேர்ந்தது.
உதவிக்கு ஓடி வந்தது
நண்பர் கூட்டம்.
உறவுகள் வேண்டாமென்று
சொல்லவில்லை.
உறவுகளைத் தாண்டி
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,
நாம் துன்பப்படும்போது,
‘நான் இருக்கிறேன்’ என்று
ஆறுதல் சொல்லும்
நண்பர்களின் வார்த்தைகள்
பெரிய டானிக்.

 

பல வருடங்களுக்கு முன்னால்,
பொறியியல் கல்லூரியில்
படித்துக்கொண்டிருந்த
நான்கு மாணவர்கள்
எனக்கு நன்கு
பரிச்சயமானவர்கள்.
அதில் மூன்று பேருக்கு
அவர்கள் இறுதியாண்டு
படித்துக் கொண்டிருந்தபோது
வேலை கிடைத்து விட்டது.
அந்த மூன்று பேரில்
ஒருவன் என்னைப்
பார்க்க வந்தான்.

 

நான்,
“வாழ்த்துக்கள் ரகு.
வேலை கிடைச்சாச்சு.
அம்மா, அப்பாவுக்கு
சந்தோஷமா?,” என்றதும்
அவன், “இல்லைங்க மேடம்.
பெரிய சந்தோஷம்னு
சொல்ல முடியல,” என்றான்.
நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன்.
“என்னப்பா…உனக்கு
கிடைச்சிருக்க வேலையைப்
பத்தி பெருமையாத்தானே
உங்க அப்பா பேசினாரு,”
என்றேன்.

 

அதற்கு அவன்,
“அதெல்லாம் சரிதான் மேடம்.
எங்க நாலு பேருக்கும்
வேலை கிடைச்சிருந்தா
ரொம்ப நல்லா இருந்திருக்கும்.
ஆனா, குமாருக்கு மாத்திரம்
வேலை கிடைக்கல மேடம்.
எங்க நாலு பேருல அவனோட
குடும்பம்தான் ரொம்ப
கஷ்டப்படுற குடும்பம்.
எங்க எல்லாருக்கும் அவன்தான்
நிறைய நோட்ஸ் பிரிப்பேர்
பண்ணி கொடுப்பான்.
அவன் இன்னும் கேம்பஸ்ல
செலக்ட் ஆகல. அதனால
எங்களுக்கு வருத்தமாத்தான்
மேடம் இருக்கு,” என்றான்.

 

எனக்கு ஒரே ஆச்சரியமாக
இருந்தது. சொந்தக்காரனுக்கும்
நண்பனுக்கும் எவ்வளவு
வித்தியாசம். எங்கே தன்
பிள்ளையைவிட தன் அக்கா
மகனோ தங்கை மகனோ
அதிகமாய் சம்பாதித்தால்
தன் மரியாதை குறைந்து
விடுமோ என யோசிக்கும்
உறவுகளை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், தனக்கு வேலை
கிடைத்த சந்தோஷத்தைக்கூட
அனுபவிக்காமல் நண்பனுக்காக
வருந்தும் இவனைப்பற்றி
என்ன சொல்ல…

 

மீண்டும் ரகு,
“மேடம், நான் உங்ககிட்ட
ஒரு விஷயம் கேட்கத்தான்
வந்தேன். நீங்க மாரியம்மன்
கோயிலுக்கு அதிகமாக
போவீங்கன்னு தெரியும்.
குமாருக்கு வேலை கிடைக்கணும்.
நான் என்ன மாதிரி வேண்டுதல்
செஞ்சா அவனுக்கு வேலை
கிடைக்கும்னு சொல்லுங்க மேடம்,”
என்றான்.

 

நான்,
“ரகு, என்னைப் பொருத்தவரை
மனசார நீ அம்மனை நம்பி
உன்னோட பிரண்டுக்காக
வேண்டினாலே போதும்.
இருந்தாலும் உன் திருப்திக்காக
காலைல குளிச்சிட்டு
உன் வீட்டுல இருந்து நடந்து
கோவிலுக்குப் போய் அம்மனை
தரிசனம் பண்ணிட்டு வா,”
என்றேன்.
என்னையும் குமாருக்காக
வேண்டிக் கொள்ளும்படி
சொல்லிவிட்டுப் போனான்.

 

ஒரு வாரம் கழித்து
ரகுவின் அம்மாவை வழியில்
சந்தித்தேன். அவர்,
“மேடம், அன்னிக்கு உங்க
வீட்டுக்கு ரகு வந்த பின்னால்
தெனமும் காலையில எந்திருச்சி
குளிச்சிட்டு வெறும் காலோட
மாரியம்மன் கோயிலுக்குப் போய்
சாமி கும்பிட்டுட்டு வரான்.
முன்னாடிலாம் கோயிலுக்குப்
போடான்னா சலிச்சுக்குவான்.
ஏதோ வேலை கிடைச்சதும்
மாறிட்டான் போல,” என்றார்
சிரித்தபடி.

 

இரண்டு மாதம் கழித்து
என்னைப் பார்க்க வந்த
ரகுவின் முகத்தில் அப்படியொரு
சந்தோஷம்.

 

“மேடம்,
குமாருக்கு வேலை கிடைச்சிடுச்சி,”
என்று உற்சாகமாய் சொன்னான்.
“ரகு, குமாருக்கு வேலை
கிடைச்சது எனக்கும்
ரொம்ப சந்தோஷம்.
அது சரி… நீ அவனுக்காக
கோயிலுக்குப் போனதை
அவன்கிட்ட சொன்னியா?”
என்றேன்.

 

அதற்கு ரகு,
“இல்லைங்க மேடம். சொல்லல.
அதுல ரெண்டு காரணம்.
ஒண்ணு, வேலை வாங்க குமார்
அவ்வளவு பிரிப்பேர் பண்ணினான்.
நான் கோயிலுக்குப் போனதப்பத்தி
சொன்னா ஏதோ அதனால
மட்டுமே அவனுக்கு வேலை
கிடைச்சதுங்கற மாதிரி ஆயிடும்.
அவனுக்கு வேலை கிடைச்சதுக்கு
முக்கியமான காரணம் அவனோட
தன்னம்பிக்கையும் உழைப்பும்.
ரெண்டாவது, நான் கோயிலுக்குப்
போனது என்னோட நம்பிக்கை.
நேத்துக்கூட நான் கோயிலுக்குப்
போயி சாமிக்கு தேங்க்ஸ்
சொல்லிட்டு வந்தேன்.
உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்,”
என்றான்.

 

நான் அவனைப் பார்த்து
பெருமைப்பட்டேன்.
என்ன ஞானம்!
நண்பன் முன்னேற வேண்டும்…
அதே சமயம் அவனுக்காக
தான் வேண்டியதைக்கூட
சொல்ல விரும்பாத மனசு.

 

சமீபத்தில் ஓர் அனுபவம்.
எனக்குத் தெரிந்த மூன்று
கல்லூரி மாணவிகள்.
அவர்களின் தோழி ஒருத்தி,
குடும்ப வறுமையால்
கல்விக்கட்டணம் செலுத்த
முடியாமல் தவித்தாள்.
அவளுக்காக இந்த மாணவிகள்
மூவரும் எல்லோரிடமும்
கையேந்தி உதவி கேட்டு,
அவளுக்கான கட்டணத்தை
செலுத்தினார்கள். யாருக்கு
இந்த மனசு வரும்?
தனக்காகக்கூட பிரத்தியாரிடம்
கையேந்த கூசும் இந்த நாளில்,
தன் தோழிக்காக யாசகம்
கேட்ட அந்த மாணவிகளுக்கு
ஆயிரம் சல்யூட்.

 

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு
அப்பால் என் மருமகளின்
பிரசவத்தின்போது நான் உள்பட
எந்த உறவுகளும் அவளுடன்
இல்லை. என் மருமகளுக்கும்
மகனுக்கும் ஒத்தாசையாக
இருந்தது அவர்களின்
தோழர்களும் தோழிகளும்தான்.

 

உறவுகளாகப் பிறந்துவிட்டோம்
என்பதற்காக நான்
செய்முறைகளைச் செய்துதான்
உறவுகளைப் பலப்படுத்திக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால் எந்த உறவுமே
இல்லாமல் நண்பனின்
நண்பர்களையும் நட்பாக்கிக்
கொள்ள முடிகிறது என்றால்
அது நட்பின் மீதுள்ள
ஈர்ப்பாலும் நம்பிக்கையாலும்தான்.

 

மறுபடியும் ஆரம்ப
வரிகளுக்கு வருகிறேன்.

 

தன்னம்பிக்கை,
கடையில் வாங்கும் பொருளல்ல.
ஒவ்வொரு மனுதனுக்குள்ளும்
தன்னைம்பிக்கை தருவது
அம்மாவும், அப்பாவும்,
ஆசிரியர்களும், ஆண்டவனும்
மட்டுமல்ல;
அருமை தோழர்களும்
தோழிகளும் கூடத்தான்.

 

உப்பில்லாமல் சாப்பிட முடியாது.
நட்பில்லாமல் வாழ முடியாது.

 

கட்டுரையாளர்: கல்வியாளர்
தொடர்புக்கு: 98948 07075.

(நன்றி: ‘புதிய அகராதி’ திங்கள் இதழ், மே – 2017)