நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
வர்த்தக நேர முடிவில்
தேசிய பங்குச்சந்தையான
நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து,
20686 புள்ளிகளில் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்
1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%)
68865 புள்ளிகளில் நிறைவடைந்தது.
பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம்,
நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம்,
எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம்,
ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும்
உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன.
அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை
பங்குகள் லேசான சரிவைச் சந்தித்தன.
வர்த்தகம் தொடங்கிய
முதல் 15 நிமிடத்தில் பங்குச்சந்தை
முதலீட்டாளர்களின் முதலீட்டுச் சந்தை
மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்து,
திக்குமுக்காட வைத்தது.
நிப்டியில் டாப் 50 நிறுவனங்களில்
45 நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டிருந்தன.
அதேபோல் சென்செக்ஸ் டாப் 30 நிறுவனப்
பங்குகளில் மாருதி சுசூகி தவிர மற்ற
நிறுவனப் பங்குகள் கணிசமான
லாபத்தைக் கொடுத்துள்ளன.
பாஜகவின் வெற்றியால்
அதானி குழுமப் பங்குகள் அனைத்துமே
முதலீட்டாளர்களுக்கு கணிசமான
லாபத்தை அள்ளி வழங்கியது.
அதானி என்டர்பிரைசஸ் 7.13%,
அதானி பவர் 5.52%,
அதானி டோட்டல் காஸ் 4.39%,
அதானி கிரீன் எனர்ஜி 9.47%,
அதானி போர்ட்ஸ் 6.14%
வரை உயர்ந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருக்க, ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்தும், அதானி குழுமத்திற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஒரே வாரத்தில் அதானி குழுமப் பங்குகள் முதலீட்டாளர்ளுக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்து லாபம் கொடுத்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (டிச. 5) சந்தை எப்படி இருக்கும்?
இந்தியப் பங்குச்சந்தையின் இப்போதைய உற்சாகமான போக்கு இன்றும், அடுத்த சில அமர்வுகளிலும் தொடர வாய்ப்பு உள்ளதாகவே சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
டிச. 5ம் தேதி, நிப்டி 20753 – 20827 புள்ளிகள் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சந்தை சரிவைச் சந்திக்கும்பட்சத்தில் நிப்டி 20512 – 20438 வரை கீழிறங்கலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
நேற்றைய சந்தை உயர்வுக்கு
பேங்க் நிப்டியும் பெரிய அளவில்
பங்களித்துள்ளது. அதே உத்வேகம்
இன்றும் சந்தையில் இருக்கும் எனத்தெரிகிறது.
பேங்க் நிப்டி இன்று 47000 – 47200
புள்ளிகள் வரை உயரக்கூடும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
– ஷேர்கிங்