Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

சேலம் மாவட்டத்தில்
கெங்கவல்லி, ஆத்தூர்,
ஏற்காடு, ஓமலூர், மேட்டூர்,
எடப்பாடி, சங்ககிரி,
சேலம் மேற்கு, சேலம் வடக்கு,
சேலம் தெற்கு, வீரபாண்டி
ஆகிய 11 சட்டமன்ற
தொகுதிகள் உள்ளன.

 

மாவட்டம் முழுவதும்
15 லட்சத்து 246 ஆண்
வாக்காளர்கள்,
15 லட்சத்து 15 ஆயிரத்து
19 பெண் வாக்காளர்கள்,
மூன்றாம் பாலினத்தவர்
204 பேர் என மொத்தம்
30 லட்சத்து 15 ஆயிரத்து
469 வாக்காளர்கள்
உள்ளனர்.

 

கடந்த
ஏப். 6ம் தேதி நடந்த
தேர்தலில் 23 லட்சத்து
86 ஆயிரத்து 950 பேர்
வாக்களித்துள்ளனர்.
அதாவது, 11 தொகுதிகளிலும்
சராசரியாக 79.16 சதவீத
வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேர்தலுக்காக மொத்தம்
4280 வாக்குச்சாவடிகள்
அமைக்கப்பட்டு இருந்தன.

நாம் மேற்கொண்ட
தேர்தலுக்கு முந்தைய
கருத்துக்கணிப்பு முடிவுக்கும்,
வாக்குப்பதிவுக்கு பிந்தைய
கருத்துக்கணிப்புக்கும்
பெரிய அளவில் வித்தியாசம்
இல்லாவிட்டாலும்,
ஓரிரு தொகுதிகளில் போட்டி
கடுமையாக இருந்ததையும்,
சில மாற்றங்கள்
நடந்துள்ளதையும்
அறிய முடிகிறது.

 

வாக்காளர்களுக்கு
அதிமுக, திமுக ஆகிய
இரு கட்சிகளும் பணமும்,
பரிசுப் பொருள்களையும்
போட்டிப்போட்டு
வழங்கியுள்ளன.
என்றாலும்,
ஆளுங்கட்சியான அதிமுக,
தேர்தலுக்கு முந்தைய
நாள் இரவு ஆர்.கே.நகர்
தொகுதி ஃபார்முலாவை
பின்பற்றி,
பெண் வாக்காளர்களை
குறி வைத்து டோக்கன்களை
வழங்கியுள்ளனர்.

 

டோக்கனுக்கு
இரண்டாயிரம் ரூபாய்
மதிப்பிலான பட்டுச்சேலை
அல்லது மளிகை பொருள்களை
வாங்கிக் கொள்ளலாம்
எனக்கூறி விநியோகம்
செய்துள்ளனர்.

 

இந்த டோக்கன் அஸ்திரம்,
பல தொகுதிகளில் கடைசி
நேரத்தில் வாக்குப்பதிவை
கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் எடப்பாடி,
வீரபாண்டி, ஏற்காடு,
கெங்கவல்லி, ஆத்தூர்,
சங்ககிரி, ஓமலூர் ஆகிய
தொகுதிகளில் நன்றாகவே
வேலை செய்திருக்கிறது.

 

எனினும்,
மாநகர பகுதிகளை
உள்ளடக்கிய சேலம் வடக்கு
தொகுதியில் டோக்கனின்
தாக்கம் சற்று
குறைவாகவே இருந்தது.

 

அதேநேரம்,
அதிகரித்த வாக்குப்பதிவு
என்பது ஆளுங்கட்சிக்குதான்
சாதகமாக இருக்க வேண்டும்
என்பதில்லை என்கிறார்கள்
நடுநிலை வாக்காளர்கள்.

 

சேலம் மாவட்டத்தில்
11 தொகுதிகளிலும் திமுக,
அதிமுக, அமமுக, மநீம ஆகிய
கூட்டணிகள் மற்றும்
நாம் தமிழர் கட்சி என
5 முனை போட்டி நிலவினாலும்,
திமுக, அதிமுக ஆகிய
இரு கூட்டணிகளிடையே
மட்டுமே நேரடி
போட்டி இருந்தது.

 

சேலம் மாவட்டத்தில்
தேர்தலுக்குப் பிந்தைய
கருத்துக்கணிப்பு விவரம்:

 

கெங்கவல்லி (தனி):

 

கெங்கவல்லி (தனி)
தொகுதியில் திமுக சார்பில்
சேலம் மாநகராட்சி முன்னாள்
மேயர் ரேகா பிரியதர்ஷினி,
அதிமுக தரப்பில் நல்லதம்பி
ஆகியோர் போட்டியிட்டனர்.
இத்தொகுதியில் முதன்முறை
வாக்காளர்கள் கணிசமாக
திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
அதற்கு அடுத்து,
அவர்களுடைய சாய்ஸ்
நாம் தமிழர் கட்சியாக
உள்ளது.

 

கடந்த 5 ஆண்டுகளில்
தொகுதிக்குள் பெரிய
அளவிலான வளர்ச்சி
திட்டங்கள் கொண்டு வராததால்
ஏற்பட்ட அதிருப்தி, அறிமுகம்
இல்லாத வேட்பாளர் என
அதிமுக பின்னடைவைச்
சந்திக்கிறது. ஆரம்பத்தில்
20 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்தில்
ரேகா பிரியதர்ஷினி
வெற்றி பெறுவார் என்ற
நிலை இருந்தது.
திமுக, அதிமுக இரு
கட்சிகளுமே வாக்காளர்களுக்கு
தலா 500 ரூபாய் பட்டுவாடா
செய்துள்ளன. எனினும்,
வாக்குப்பதிவுக்கு முதல்
நாள் இரவு அதிமுகவினர்
பெண் வாக்காளர்களுக்கு,
2000 மதிப்புள்ள பட்டுச்சேலை
தருவதாக டோக்கன்
கொடுத்ததால் அக்கட்சிக்கு
கணிசமாக வாக்குகள்
அதிகரித்துள்ளதாகச்
சொல்கிறார்கள்.

 

என்றாலும், கூட்டணி பலம்,
மக்களிடம் உள்ள அறிமுகம்,
இளம் வாக்காளர்கள் மற்றும்
சிறுபான்மையினர் வாக்குகள்
ஆதரவுடன் குறைந்த
வித்தியாசத்திலாவது
ரேகா பிரியதர்ஷினி
வெற்றி பெறுவார் என்கிறார்கள்.
தொகுதியில் பரவலாக
பத்தில் ஒருவர் அமமுக
வேட்பாளர் பாண்டியனுக்கும்,
நா.த.க., கட்சிக்கும்
வாக்களித்துள்ளனர். இதுவும்
அதிமுகவுக்கு பின்னடைவை
ஏற்படுத்தி உள்ளது.

 

நிலவரம்: திமுக வெற்றி

 

ஆத்தூர் (தனி):

 

ஆத்தூர் தனி தொகுதியில்
திமுக சார்பில் முன்னாள்
எம்எல்ஏ கு.சின்னதுரை
போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் ஆத்தூர்
நகர எம்ஜிஆர் மன்ற
செயலாளர் ஜெயசங்கரன்
போட்டியிடுகிறார்.

 

சின்னதுரை,
கெங்கவல்லியை விட்டுவிட்டு
தொகுதி மாறி போட்டியிடுவது
ஆரம்பத்தில் நெகட்டிவாக
பார்க்கப்பட்டது. ஆனால்,
கொரோனா உச்சத்தில்
இருந்த போது தொகுதி
மக்களை கண்டு கொள்ளாத
ஆளுங்கட்சி, பொங்கல்
பண்டிகையின்போது
ரேஷன் கார்டுதாரர்களுக்கு
2500 ரூபாய் கொடுத்தது
வாக்கு வங்கியை
குறி வைத்துதான் என்ற
திமுகவின் பரப்புரை
பெரிதாக எடுபட்டுள்ளது.

 

சேகோ அதிபர்கள்,
வணிகர்கள் மத்தியில்
திமுக மீது பொதுவான
அதிருப்தி நிலவினாலும்,
பொதுமக்கள், நடுநிலை
வாக்காளர்கள் ஆட்சி
மாற்றத்தை விரும்புவதால்,
தட்டுத்தடுமாறியாவது
சின்னதுரை வெற்றி
பெறுவார் என்ற நம்பிக்கை
இருப்பதை வாக்குப்பதிவுக்குப்
பிந்தைய நிலவரம் கூறுகிறது.

 

முன்னாள் அதிமுக
எம்எல்ஏ மாதேஸ்வரன்,
இம்முறை அமமுக சார்பில்
போட்டியிடுகிறார்.
அவர், அதிமுக வாக்குகளை
கணிசமாக பிரிக்கிறார்.
அதிமுகவின் பண பட்டுவாடா,
டோக்கன் விநியோகம்
திமுகவுக்கு கடும் நெருக்கடியை
கொடுத்திருப்பதையும்
மறுக்க முடியாது.

 

நிலவரம்: திமுக வெற்றி

 

ஏற்காடு (தனி):

 

பழங்குடியின
தனி தொகுதியான ஏற்காட்டில்
அதிமுக சார்பில் தொடர்ந்து
இரண்டாவது முறையாக
கு.சித்ரா களம் காண்கிறார்.
திமுக சார்பில் முன்னாள்
எம்எல்ஏ தமிழ்செல்வன்
போட்டியிடுகிறார்.

 

சேலம் புறநகர் மாவட்ட
ஜெ., பேரவை செயலாளர்
இளங்கோவனின் தீவிர விசுவாசி
என்பதைத் தவிர சித்ராவுக்கு
கட்சியிலும், மக்கள் மத்தியிலும்
எந்த செல்வாக்கும் இல்லை.
பரப்புரைக்குச் சென்றபோது
சில இடங்களில் அவரை
மக்கள் முற்றுகையிட்ட
சம்பவங்களும் நடந்தன.

 

பழங்குடியினருக்கான தொகுதி
என்றாலும் ஏற்காடு
மலைப்பகுதியை விட
அயோத்தியாப்பட்டணம்,
வாழப்பாடி, காரிப்பட்டி,
பெத்தநாயக்கன்பாளையம்
உள்ளிட்ட சமவெளி
பகுதிகளில்தான் 2.50
லட்சம் வாக்குகள் உள்ளன.

 

சித்ராவை எப்படியும்
ஜெயிக்க வைத்தே தீர
வேண்டும் என ர.ர.க்களுக்கு
இளங்கோவன் ஸ்பெஷலாக
கட்டளையிட்டதால்
தொண்டர்களும் விழுந்தடித்து
வேலை செய்தனர்.

 

தேர்தலுக்கு முந்தைய
கருத்துக்கணிப்பில்
திமுக வெற்றி பெறும்
என்ற நிலை இருந்தது.

 

அதிமுக தரப்பில் 500ம்,
திமுக தரப்பில் 300 ரூபாயும்
வாக்காளர்களுக்கு பட்டுவாடா
செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய
நாள் இரவு, பட்டியல் சமூகத்தவர்
அதிகம் வசிக்கும் இடங்களில்
அதிமுகவினர் டோக்கன்
விநியோகம் செய்துள்ளதால்
திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடைசி கட்டத்தில்
வாக்குப்பதிவு விகிதம்
கணிசமாக அதிகரித்துள்ளது.
இத்தொகுதியில் 83.09 சதவீதம்
வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 

இத்தொகுதியில் பணமும்,
டோக்கனும் அதிமுகவுக்கு
பெரிய அளவில் சப்போர்ட்
பண்ணுகிறது. திமுக, அதிமுக
இடையே கடும் போட்டி
நிலவினாலும், இறுதியில்
சொற்ப வாக்குகள்
வித்தியாசத்திலாவது
சித்ரா வெற்றி பெற்று,
மீண்டும் தொகுதியை
தக்க வைப்பார்
என்கிறார்கள்.

 

நிலவரம்: அதிமுக வெற்றி

 

ஓமலூர்:

 

சேலம் மாவட்டத்தில்
அதிமுகவின் கோட்டையாக
கருதப்படும் தொகுதிகளில்
ஓமலூரும் ஒன்று. அதிமுக
தரப்பில் ஒன்றிய மாணவர் அணி
செயலாளர் ஆர்.மணி,
திமுக கூட்டணி சார்பில்
காங்கிரஸ் வேட்பாளர்
மோகன் குமாரமங்கலம்
ஆகியோர் களம் கண்டனர்.

 

ஆர்.மணி, தொகுதியில்
பெரும்பான்மையாக உள்ள
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அதிமுகவின் டோக்கன்
விநியோகம், வன்னியர்களுக்கான
10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு,
திமுகவில் உள்ள வன்னியர்களும்,
கவுண்டர்களும் கட்சி மாறி
அதிமுகவுக்கு ஆதரவுக்கரம்
நீட்டியது ஆகியவற்றால்
பெரிய அளவிலான வாக்குகள்
வித்தியாசத்தில் மணி
வெற்றி பெறுகிறார்.

 

ஆரம்பத்தில் இருந்தே
இத்தொகுதியில் காங்கிரஸூக்கு
திமுக பெரிய அளவில்
சப்போர்ட் செய்யவில்லை.
வாக்குப்பதிவுக்கு 10 நாள்கள்
இருக்கும்போதுதான்
மோகன் குமாரமங்கலத்திற்கு
ஆதரவாக திமுகவினரும்
பரப்புரையில் இறங்கினர்.
வாக்காளர்களுக்கு அதிமுக
தரப்பில் 500 ரூபாயும்,
காங்கிரஸ் சார்பில் 300
ரூபாயும் தரப்பட்டுள்ளது.

 

பட்டியல் சமூக வாக்குகள்
ஆரம்பத்தில் திமுக கூட்டணிக்கு
சாதகமாக இருந்த நிலையில்,
அவர்களுக்கு அதிமுகவினர்
வழங்கிய டோக்கன்களால்,
அவர்களின் வாக்குகளும்
சுளையாக ஆளுங்கட்சி பக்கம்
திரும்பியுள்ளது. இதனால்
வாக்குப்பதிவு 83.28
சதவீதமாக எகிறியுள்ளது.

 

நிலவரம்: அதிமுக வெற்றி

 

மேட்டூர்:

 

மேட்டூர் தொகுதியில்
திமுக தரப்பில் ஸ்ரீனிவாச பெருமாள்,
அதிமுக கூட்டணியில் உள்ள
பாமக தரப்பில் வழக்கறிஞர்
சதாசிவம் ஆகியோர்
போட்டியிட்டனர்.

 

மேட்டூர் தெர்மல்,
கெம்பிளாஸ்ட், மால்கோ,
ஜிண்டால் மற்றும் சிறு, குறு
தொழிற்சாலைகளில் பணியாற்றும்
படித்த தொழிலாளர்களின்
ஆதரவு திமுகவுக்கு சாதகமாக
இருக்கிறது. பட்டியலின
வாக்குகளும் திமுகவுக்கு
ஆதரவாக உள்ளது.
பாமக வேட்பாளருக்கு தொகுதியில்
பெரிய அளவில் அறிமுகம் இல்லை.
திரையரங்க உரிமையாளர் என்ற
அடிப்படையில் திமுகவின்
ஸ்ரீனிவாசபெருமாளுக்கு பரவலாக
அறிமுகம் இருக்கிறது.

 

இரு தரப்பிலும்
வாக்காளர்களுக்கு
தலா 500 ரூபாய் பட்டுவாடா
செய்யப்பட்டு இருந்தாலும்,
மேச்சேரி, கொளத்தூர்
உள்ளிட்ட ஊரக பகுதிகளில்
இந்தமுறை திமுகவுக்கு
கணிசமாக ஆதரவு கூடியுள்ளதை
ஓட்டுப் போட்டுவிட்டு வந்த
வாக்காளர்களின் கருத்தில்
இருந்து அறிய முடிந்தது.
இதனால் நீண்ட இடைவெளிக்குப்
பிறகு திமுக மேட்டூரை
கைப்பற்றுகிறது.

 

நிலவரம்: திமுக வெற்றி

 

எடப்பாடி:

 

அதிமுக தரப்பில்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சொந்த தொகுதியில் மீண்டும்
களமிறங்குகிறார்.
திமுக சார்பில் சம்பத்குமார்
போட்டியிடுகிறார்.

 

தொடர்ந்து மூன்றாவது
முறையாக ஹாட்ரிக்
வெற்றி பெற்றே தீர வேண்டும்
என்ற முனைப்புடன்,
அவருக்காக ஒரு பெரிய
பட்டாளமே இரண்டு
ஆண்டுகளாகவே
தொகுதியில் வேலை
செய்து வந்தது.

 

தொகுதி முழுக்க சாலைகள்,
குடிநீர், பள்ளிக்கூடங்கள்,
தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை,
பேருந்து வசதி என ஏராளமான
நலத்திட்டங்களை நிறைவேற்றி
இருந்தாலும் அதிமுக தரப்பில்
வாக்காளர்களுக்கு
1000 ரூபாய் முதல் 1500 ரூபாய்
வரை வாரி இறைக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் தொகுதியில்
பரவலாக 2000 மதிப்பில்
மளிகைப் பொருள்கள்
அல்லது பட்டுச்சேலை
தருவதாகக் கூறி டோக்கனும்
விநியோகம் செய்திருக்கிறது
ஆளுங்கட்சி. திமுக தரப்பில்
வாக்காளர்களுக்கு 500 ரூபாய்
மட்டும் தரப்பட்டுள்ளது.

 

திமுகவின் சம்பத்குமார்,
தொகுதியிலும், கட்சியிலும்
பெரிய அளவில் அறிமுகம்
இல்லாதவர். நங்கவள்ளி,
ஜலகண்டாபுரம் ஆகிய
பகுதிகளில் முதல்முறை
வாக்காளர்களில் பலர்,
அதிமுகவுக்கு வாக்களித்திருப்பது
ஆச்சரியம் அளித்தது.
இலவச சைக்கிள், லேப்டாப்
ஆகியவை கல்லூரி மாணவ,
மாணவிகளிடம் பெரிய அளவில்
தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஜாதி பாசமும் மற்றொரு
காரணம்.

 

எடப்பாடி தொகுதியை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மீண்டும் பெரிய அளவிலான
வாக்கு வித்தியாசத்தில்
தக்க வைக்கிறார்.
இத்தொகுதியில்,
மாவட்டத்திலேயே
அதிகபட்சமாக 85.64
சதவீதம் வாக்குப்பதிவு
நடந்துள்ளது.

 

நிலவரம்: அதிமுக வெற்றி

 

சங்ககிரி:

 

சங்ககிரி தொகுதியில் அதிமுக சார்பில் சங்ககிரி மேற்கு ஒ.செ. சுந்தரராஜன், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கே.எம்.ராஜேஷ் போட்டியிட்டனர். இருவருமே, தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கவுண்டர்களுக்கு அடுத்து, பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தினர், அதிமுகவுக்கு பக்கபலமாக உள்ளனர்.

 

ஆரம்பத்தில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. எடப்பாடி பழனிசாமி பற்றிய திமுக கொ.ப.செ. ஆ.ராஜாவின் பர்சனல் அட்டாக், திமுகவில் உள்ள கவுண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 10.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக வன்னியர்களின் ஆதரவும், தொழில் அதிபர்கள் மற்றும் கவுண்டர் சமூகத்தினரின் ஆதரவுடன் அதிமுகவின் சுந்தரராஜன் குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவார் என்கிறார்கள்.

 

எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷின் நேரடி மேற்பார்வையில் வாக்காளர்களுக்கு 1000 ரூபாயும், கடைசி நாளில் 2000 ரூபாய்க்கு பரிசு கூப்பனும் தரப்பட்டுள்ளது அதிமுக வெற்றியை உறுதி செய்துள்ளது. திமுக தரப்பில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதில் 200 ரூபாயை கட்சியினரே ஸ்வாகா செய்தது, பரவலாக பணம் பட்டுவாடா செய்யாமல் விடுபட்டது போன்ற உள்ளடிகளும் திமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது.

 

நிலவரம்: அதிமுக வெற்றி

 

சேலம் மேற்கு:

 

சேலம் மேற்கு தொகுதியில் கடந்த இரண்டு முறையும் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தமுறை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அருள் போட்டியிடுகிறார். திமுக சார்பில் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

 

வன்னியர்கள் ஆதிக்கம் உள்ள தொகுதி என்பதால், சேலம் மேற்கு தொகுதியை அடம் பிடித்து பெற்றது பாமக. திமுக வேட்பாளருக்கு கட்சி பின்புலம் மட்டுமே ஒரே பலம். கட்சி மற்றும் மக்களிடம் பெரிய அளவில் செல்வாக்கோ, அறிமுகமோ இல்லாதது ராஜேந்திரனுக்கு பின்னடைவு.

 

பாமகவின் அருள் ஊரறிந்த கட்டப்பஞ்சாயத்து ஆசாமி என்ற பெயர் இருந்தாலும், கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் பாமகவுக்கு கடைசிக்கட்டத்தில் கணிசமாக வாக்குகள் அதிகரித்துள்ளன.

 

அதிமுக கூட்டணி பலம், 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பட்டுவாடா ஆகியவற்றால் அருள் தட்டுத்தடுமாறியாவது கரையேறி விடுவார் என்கிறார்கள். இத்தொகுதியில் 71.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. திமுக தரப்பில் 300 ரூபாய் மட்டுமே வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

நிலவரம்: பாமக வெற்றி

 

சேலம் வடக்கு:

 

சேலம் வடக்கு தொகுதியில், திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜேந்திரன் மீண்டும் களம் இறங்கினார். அதிமுக சார்பில், கடந்த 2 முறை சேலம் மேற்கு எம்எல்ஏவாக இருந்த கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் களம் கண்டார்.

 

வன்னியர், செட்டியார், முதலியார், நாடார், பட்டியல் சமூகத்தினர், சவுராஷ்டிரா, சிறுபான்மையினர் என பல்வேறு சமூகத்தினர் நிறைந்த தொகுதி. முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் குடியிருக்கும் பகுதி. மாநகராட்சியில் 20 வார்டுகளும், கன்னங்குறிச்சி பேரூராட்சியும் இத்தொகுதிக்குள் அடங்குகிறது. இவற்றில் பெரும்பான்மை வாக்குகள் திமுகவுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்கின்றன.

 

செவ்வாய்பேட்டையில் உள்ள சவுராஷ்டிரர்கள், வட இந்தியர்கள், வணிகர்கள் மத்தியில் இப்போதும் திமுக மீது அச்ச உணர்வு இருக்கிறது. கன்னங்குறிச்சி பேரூராட்சியில் திமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் இம்முறை அதிமுக அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தியது.

 

திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், ராஜேந்திரன் வெற்றி பெற்று அமைச்சராகி விடுவார் என்பதால் திமுக தரப்பிலும் உ.பி.க்கள் உற்சாகமாக வேலை செய்தனர். இதனால் இரு தரப்பிலும் போட்டி மிக மிக கடுமையாக இருந்தது.

 

ஆரம்பத்தில் திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டுமே கொடுக்க முடிவு செய்திருந்த நிலையில், அதிமுகவின் கடும் போட்டியால் 1000 ரூபாய் பட்டுவாடா செய்தனர். அதிமுக தரப்பிலும் 1000 ரூபாய் மட்டுமின்றி சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் 1500 ரூபாயும், கடைசிக்கட்டத்தில் பட்டுச்சேலைக்கான பரிசுக்கூப்பனும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வரை இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையை லேசாக ஆட்டம் காணச் செய்துள்ளது. அதிமுகவின் கடைசிநேர கவனிப்புகளால் போட்டியை கடுமையாகி இருக்கிறது. என்றாலும், கிளீன் இமேஜ், கூட்டணி பலம், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின ஆதரவுடன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றிக் கோட்டைத் தொட்டு விடுவார் என்கிறார்கள் வாக்காளர்கள்.

 

நிலவரம்: திமுக வெற்றி

 

சேலம் தெற்கு:

 

சேலம் தெற்கு தொகுதியில்
அதிமுக கடந்த 2001 முதல்
தொடர்ந்து 4 முறை வெற்றி
பெற்றுள்ளது. இம்முறை
அதிமுக சார்பில் சேலம்
மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்
இ.பாலசுப்ரமணியன்,
திமுக சார்பில் ஏ.எஸ்.சரவணன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

முழுக்க முழுக்க
சேலம் மாநகராட்சி
எல்லைக்குள் வருகிறது
இந்த தொகுதி. முதலியார்,
செட்டியார், வன்னியர், பிள்ளை,
ஆதிதிராவிடர் என பல்வேறு
சமூகத்தினர் வசிக்கின்றனர்.

 

இருவருமே கன்னட
தேவாங்க செட்டியார்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜவுளி தொழிலில்
உள்ளவர்கள்.

 

திமுக வேட்பாளருக்கு
கட்சியிலும், மக்கள் மத்தியிலும்
அவ்வளவாக அறிமுகம் இல்லை.
மேலும், கணிசமாக வாக்கு
வங்கி உள்ள அம்மாபேட்டையில்
பல பகுதிகளில் திமுகவினர்
பரப்புரைக்கே செல்லவில்லை.

 

இத்தொகுதியில்
திமுக மீது ரவுடியிஸ கட்சி
என்ற முத்திரை இப்போதும்
இருக்கிறது. அதிமுகவின்
தேர்தல் அறிக்கையும்,
அக்கட்சி கடைசியாக
ஏவிய டோக்கன் அஸ்திரமும்
பெண்கள் வாக்குகளை
கணிசமாக ஈர்த்துள்ளதை
தேர்தலுக்குப் பிந்தைய
கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

 

மேலும், அதிமுக தரப்பில்
வாக்காளர்களுக்கு 500 ரூபாயும்
தரப்பட்டுள்ளது. திமுக தரப்பில்
300 முதல் 400 ரூபாய் வரை
கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5வது முறையாக
சேலம் தெற்கு தொகுதியை
அதிமுக தக்க வைத்துக்கொள்ளும்
என்கிறார்கள் வாக்காளர்கள்.

 

நிலவரம்: அதிமுக வெற்றி

 

வீரபாண்டி:

 

வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி காசி விஸ்வநாதனின் மகனும், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் மருமகனுமான மருத்துவர் தருண் போட்டியிடுகிறார்.

 

அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் பனமரத்துப்பட்டி ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜா என்கிற ராஜமுத்து களமிறங்கியுள்ளார்.

 

பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் மட்டும் அதிமுக வேட்பாளருக்கு ஓரளவு மக்களிடம் அறிமுகம் உள்ளது. திமுக வேட்பாளர் தருண், தொகுதிக்கு புதியவர்.

 

தருணுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளுக்கு கடும் அதிருப்தி உள்ளது. 6 பேர் கொலை வழக்கில் சிக்கி, பின்னர் விடுவிக்கப்பட்ட பாரப்பட்டி சுரேஷ்குமார், வேட்பாளர் தருணுக்கு ஆதரவாக பரப்புரையில் சென்றது கூட பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனாலும், தொடர்ச்சியாக அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டதால் ஏற்பட்ட சலிப்புத்தன்மை மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏவாக இருந்த மனோன்மணி தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வராததும், முன்னாள் எம்எல்ஏ விஜயலட்சுமி பழனிசாமி தரப்பினரின் உள்ளடிகளாலும் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு.

 

எல்லாவற்றுக்கும் மேலாக அமமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், அதிமுக வாக்குகளை கணிசமாக பிரிப்பது ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளது. அதிமுக, திமுக இரு கட்சிகளுமே வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் பட்டுவாடா செய்துள்ளது.

 

கடைசி கட்டத்தில் ஆளுங்கட்சி தரப்பில் வாக்காளர்களுக்கு பட்டுச்சேலை தருவதாகக்கூறி டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதால் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திலும், வீரபாண்டி ஒன்றியத்தில் சில பகுதிகளிலும் திமுகவுக்கு சற்று பின்னடைவு இருப்பதும் அக்கட்சிக்கு மைனஸ். புதிய வாக்காளர்களின் கணிசமான ஆதரவும் ஆளுங்கட்சிக்கு பதிவாகி இருப்பது இன்னொரு சுவையான தகவல்.

 

திமுக, அதிமுக இரு கட்சிகளிடையேயும் கடும் போட்டி என்பதால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் இழுபறி நிலையே தெரிகிறது.

 

நிலவரம்: இழுபறி

 

– பேனாக்காரன்