Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

குமாரபாளையம் அருகே
14 வயது சிறுமியை
அக்காள் கணவரே
சீரழித்ததோடு,
நண்பர்களுக்கும் விருந்தாக்கிய
கொடூரமும் அரங்கேறியுள்ளது.
இதில், பிஎஸ்என்எல்
அதிகாரியும் சிக்கியுள்ள
நிலையில், 12 பேரை
கூண்டோடு கைது
செய்திருக்கிறது
காவல்துறை.

 

நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையத்தைச்
சேர்ந்தவர் சந்திரசேகர் (55).
இவருடைய மனைவி லட்சுமி (45).
தறித்தொழிலாளிகள்.
இவர்களுக்கு மூன்று மகள்கள்;
ஒரு மகன். மூத்த மகள்கள்
இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இளைய மகள் செல்வி (14).
(பெற்றோர் மற்றும் செல்வியின்
பெயர்கள் புனையப்பட்டவை).

 

சந்திரசேகருக்கு உடல்நலம்
சரியில்லாததால் கடந்த
2 ஆண்டுகளுக்கு மேலாக
படுத்த படுக்கையாக இருக்கிறார்.
தந்தையை கவனித்துக்
கொள்வதற்காக சிறுமி செல்வி,
6ம் வகுப்புடன் படிப்பை
நிறுத்திவிட்டு, வீட்டில்
இருந்து வருகிறார்.

செல்வியின் மூத்த
அக்காள் வேணி.
இவருடைய கணவர் சின்ராஜ் (35),
மாமனாரின் உடல்நலம்
பற்றி விசாரிக்க அடிக்கடி
சென்று வந்ததில், தனியாக
இருந்த சிறுமியை பலவந்தமாக
பலமுறை பாலியல் வல்லுறவில்
ஈடுபட்டிருக்கிறார். செல்வியின்
12 வயதில் இருந்தே இந்த
கொடூரம் அரங்கேற
தொடங்கியிருக்கிறது.

 

மனைவியின் தங்கையை
மகளாக பார்க்க வேண்டிய
அக்காள் கணவரே தன்னை
சீரழித்ததை வெளியில்
சொல்ல முடியாமல் செல்வி
மனதிற்குள்ளேயே புழுங்கிக்
கொண்டிருந்திருக்கிறாள்.
சிறுமியை வேட்டையாடிய
சின்ராஜ் இதுகுறித்து நண்பர்கள்
மத்தியில் பெருமையடித்திருக்கிறார்.
இதன் விளைவாக அவர்களில்
சிலரும் செல்வியை
வேட்டையாட துடித்துள்ளனர்.
இதையடுத்து, நண்பர்களான
குமார் (29), வடிவேல் (29)
ஆகியோருக்கும் தன் மச்சினியை
சின்ராஜ் விருந்தாக்கிய
கொடூரமும் நடந்துள்ளது.

 

வீட்டில் இருந்தால்
மாமாவின் தொல்லை நீடிக்கும்
என்பதால் குமாரபாளையம்
எம்ஜிஆர் நகரில் வசிக்கும்
பிஎஸ்என்எல்
உதவி பொறியாளர்
கண்ணன் (35) என்பவர்
நடத்தி வந்த விசைத்தறி
பட்டறைக்கு வேலைக்குச்
சென்றிருக்கிறாள்.

 

பிள்ளைக்கறி தின்ற காமுகன் பி.எஸ்.என்.எல் ஊழியர் கண்ணன்

கண்ணனுக்கு திருமணமாகி
மனைவி, ஒரு குழந்தை இருக்கிறார்கள்.
அங்கு சென்ற பிறகும்
செல்வியை துயரம் துரத்தியது.
சிறுமியின் தந்தையின்
சிகிச்சை செலவுக்கு
உதவுவதாகக் கூறி கண்ணனும்
செல்வியை நாசப்படுத்தியிருக்கிறார்.

 

கண்ணனின் தறிப்பட்டறையில்
வேலை செய்து வந்த பன்னீர் (32),
மூர்த்தி (55), சேகர் என்கிற
நாய் சேகர் (25), கோபி (32),
அபிமன்னன் (32), சரவணன் (30),
சங்கர் (30), முருகன் (35) ஆகியோரும்
சிறுமியை பலமுறை மிரட்டி
மிரட்டியே பாலியல் வன்புணர்வு
செய்திருக்கிறார்கள்.
இந்த அட்டூழியங்கள்
எல்லாமே கடந்த 2
ஆண்டுகளாகவே தொடர்ந்து
வந்திருக்கிறது.

 

இந்த நிலையில்தான்
கடந்த பிப்ரவரி மாதம்
செல்விக்கு திடீரென்று
உடல்நலம் மிகவும்
மோசமடைந்துள்ளது.
என்ன ஏது என்று அவருடைய
அக்காள் வேணி
விசாரித்திருக்கிறார்.

 

அப்போதுதான் தன்னை யார் யார் எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்பதை விலாவாரியாக சொல்லி கதறி அழுதிருக்கிறாள் செல்வி. இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சின்ராஜின் நண்பர் குமார், சிறுமியை சீரழித்த விவகாரம் அரசல் புரசலாக செல்வியின் தாயாருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது சின்ராஜ்தான் பஞ்சாயத்து செய்துள்ளார். குமார் கைது செய்யப்பட்டால் அவனுடன் சேர்ந்து தானும் ஜெயிலுக்குப் போக வேண்டியது வரும். அப்புறம் உங்கள் மகள் வேணி வாழாவெட்டியாகி விடுவாள் என்றெல்லாம் மாமியாரை மிரட்டியிருக்கிறார் சின்ராஜ்.

 

ஒருவழியாக செல்வியின் தாயாரை சமாதானப்படுத்திய அவர், குமாரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாயை வாங்கி அவரிடம் கொடுத்திருக்கிறார். இதனால் அப்போது இந்த விவகாரம் வெளியே தெரியவில்லை. இதையும் கடந்த பிப்ரவரியில் செல்வி தன் சகோதரியிடம் சொல்லி அழுதிருக்கிறாள்.

 

கணவனே தனக்கு துரோகம் செய்ததை எண்ணிய வேணி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவிடம் புகாரளிக்க, இந்த விவகாரம் சட்டப்பூர்வ திசையை நோக்கி நகர்ந்தது. ரஞ்சிதா பிரியா, உடனடியாக சைல்டு லைன் மூலம் செல்வியை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆதாரங்களுடன் சேகரித்தார்.

 

அதன்பிறகே அவர் 2021, ஏப். 13ம் தேதி, திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளைக் கேட்டு ஆய்வாளர் ஹேமாவதியும் நிரம்பவே அதிர்ந்து போனார்.

முகமூடி அணிந்த நிலையில் காமுகர்கள்

எப்ஐஆர் பதிவு செய்த அடுத்த 5 மணி நேரத்திற்குள், முருகனைத் தவிர சின்ராஜ், பிஎஸ்என்எல் கண்ணன் உள்ளிட்ட 11 பேரையும் மொத்தமாக தூக்கியது காவல்துறை. தலைமறைவாக இருந்த முருகனையும் ஏப்.14ல் கைது செய்தனர்.

 

அனைவரும் உடனடியாக நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவளை நாசப்படுத்திய அனைவருமே ஆண்மைத் தன்மை உள்ளவர்கள் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

 

”சிறுமியின் குடும்ப
வறுமையையும், அவளது
அறியாமையையும் கயவர்கள்
பயன்படுத்திக் கொண்டு,
அவளை சீரழித்துவிட்டனர்.
இன்னொரு கொடுமை என்னனா,
மகளை நாசப்படுத்திய உண்மை
சில மாதங்களுக்கு முன்பே
தெரிந்து இருந்தும் குமாரிடம்
பணத்தை வாங்கிக்கொண்டு
சிறுமியின் தாயார் போலீசில்
சொல்லாமல் விட்டுவிட்டார்.
அதனால் அவரையும்
குற்றத்திற்கு உடந்தையாக
இருந்ததாக கைது
செய்திருக்கிறோம்.

 

அனைவர் மீதும்
போக்சோ சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் அன்பும்
அரவணைப்பும் கிடைக்காத
குழந்தைகள் யாராவது அன்பாக,
அக்கறையாக நாலு வார்த்தை
பேசினால் அவர்களை நம்பி
ஏமாந்து விடுகிறார்கள்.
அப்படி நம்பி வந்த சிறுமியை
12 மிருகங்கள் சீரழித்திருக்கிறது.
இந்த வழக்கை விரைவாக
நடத்தி முடிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
கைதானவர்கள் மீது
குண்டர் சட்டத்தின் கீழும்
நடவடிக்கை எடுக்கப்படும்,”
என்கிறார் ஆய்வாளர் ஹேமாவதி.

 

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியாவிடம் பேசுவதற்காக தொடர்ச்சியாக 3 நாள்களாக அலைபேசி வழியே முயன்றும் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

 

பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து தென்மண்டல பொதுக்காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்க பெண்கள் துணைக்குழுவின் அமைப்பாளர் சா.ஷோபனாவிடம் பேசினோம்.

சா.ஷோபனா

”பெண்களுக்கு எதிரான
பாலியல் குற்றங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்து
வருகின்றன. ஊடகங்கள்
அதிகளவில் இருப்பதால்
இப்போது பரவலாக அத்தகைய
குற்றங்கள் வெளியே தெரிகின்றன.
உண்மையில், வெளிச்சத்துக்கு
வராத பாலியல் குற்றங்கள்
இதைவிட அதிகம்.
குறிப்பாக 12 முதல் 18 வயதுக்கு
உட்பட்ட சிறுமிகள் மீதான
பாலியல் தாக்குதல்கள்
அதிகரித்துள்ளன. இத்தகைய
குற்றங்களில் 92 சதவீதம்,
சிறுமிகளுக்கு நன்கு
அறிமுகமான நபர்களிடம்
இருந்தே நிகழ்த்தப்பட்டிருப்பது
கொடுமையிலும் கொடுமை.

 

இதுபோன்ற பாலியல்
குற்றங்களுக்கு செல்போன்,
போதைப்பழக்கமும்
முக்கிய காரணங்களாக உள்ளன.

 

பெண் குழந்தைகளிடம்
நல்ல தொடுகை, தீய தொடுகை
குறித்தும், பெண்களிடம்
தன் உடல் தனக்கு மட்டுமே
சொந்தமானது என்றும்
விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும். முதலில் பெண்கள்
குறித்த பார்வை நம்
சமூகத்தில் மாற வேண்டும்,”
என்கிறார் ஷோபனா.

 

சிறுமிகளிடம் பாலியல் வல்லுறவு வைத்துக்கொள்வோர் கிட்டத்தட்ட மனதளவில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார் அரசு மனநல மருத்துவரான தனராஜ் சேகர்.

மனநல மருத்துவர் தனராஜ் சேகர்

”சிறுவர்களை மட்டும்
குறி வைத்து பாலியல்
குற்றங்களில் ஈடுபடுவதை
பீடோஃபிலியா என்கிறோம்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள்
பெரியவர்களிடம் செக்ஸ்
வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
குமாரபாளையம் சம்பவத்தில்
கைதானவர்கள் பலர்
திருமணமான ஆண்கள்.
அவர்களை பீடோஃபிலியா
பாதிப்புக்கு உள்ளானவர்கள்
என்று சொல்ல முடியாது.

 

ஆனால், இந்த வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டவர்கள்
சிறுவர்களாக இருந்தபோது
அவர்களிடம் யாராவது
பாலியல் சார்ந்த செய்கைகளில்
ஈடுபட்டிருக்கலாம். அதைத்தான்
அவர்கள் வளர்ந்த பிறகு
மற்ற சிறுவர், சிறுமிகளிடம்
செய்கின்றனர். இத்தகையவர்கள்
சிறுவர், சிறுமிகளுடன்
உடலுறவுதான் வைத்துக்கொள்ள
வேண்டும் என்பதில்லை.
பாலியல் உறுப்புகளை
அழுத்துவது போன்ற
செய்கைகளிலும் கூட
ஈடுபடுவார்கள்.

 

பாலியல் அத்துமீறலில்
ஈடுபடும்போது சிறுவர்,
சிறுமிகள் அலறித்துடிப்பதை
அவர்கள் ரசிக்கும் மனநிலையில்
இருப்பார்கள். இதுபோன்ற
குற்றவாளிகளுக்கு சிறை
தண்டனையுடன் மனநல
ஆலோசனையும் முக்கியம்,”
என்றார் மனநல மருத்துவர்
தனராஜ் சேகர்.

 

கடந்த 6 மாதத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளிச்சிறுமிகளான அக்காள், தங்கை இருவரை இதேபோல் 12 பேர் கும்பல் நாசப்படுத்திய சம்பவம் அம்பலமானது.

தற்போது குமாரபாளையம் பாலியல் சம்பவம் வெளியாகி உள்ளது. இன்னும் பாதிக்கப்பட்ட ஏழைச் சிறுமிகள் எத்தனை பேரோ?

 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொள்ளாச்சி பாலியல் சம்பவம், அரக்கோணம் இரட்டைக் கொலைகளுக்கெல்லாம் கூவும் அரசியல் இயக்கங்களும், பெண்ணிய அமைப்புகளும், உப்புப்பெறாத சங்கதிகளை எல்லாம் ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்களும் குமாரபாளையம் பாலியல் விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏனோ?

 

– பேனாக்காரன்