Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

அடுத்தடுத்து ‘வதவத’ என்று
பிள்ளைக்குட்டிகளை பெற்றுப்
போட்டதைத் தவிர வேறு எந்த
சாதனையும் செய்யாத தந்தை,
கஞ்சிக்கே வக்கற்ற நிலையிலும்
மனசு முழுக்க இலட்சம் கனவுகளை
சுமந்து கொண்டு வாழும் தங்கைகள்,
தம்பிகளுக்காக தன்னையே தியாகம்
செய்யும் லலிதாவின் வாழ்வில்
ஏற்பட்ட துயரங்களையும், ஏமாற்றங்களையும்
பட்டவர்த்தனமாக முகத்தில்
அறைந்தாற்போல் பேசுகிறது
அரங்கேற்றம்.

 

என்னதான் நாம் ஸ்விக்கி, ஸோமாட்டோ நாகரீகத்திற்குள் நுழைந்துவிட்டாலும், மூன்றாம் நபரின் அந்தரங்க செயல்பாடுகளை கூச்சமே இல்லாமல் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே நாம் அந்த நாலு பேரைக் கண்டு சில வேளைகளில் அஞ்சவும் வேண்டியதிருக்கிறது. கதைதான் என்றாலும், 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை மையமாக வைத்து, காலவெளியை உடைத்துக்கொண்டு முழு கதையையும் திரையில் விவரிக்க முடியுமா? என்றால் அது கே.பாலச்சந்தரால் மட்டுமே நிகழ்த்த முடியும். மெய்ப்பித்தும் காட்டியிருக்கிறார்.

அதனால்தான் அவரை தமிழ்த்திரையுலகின் பிதாமகன் எனக் கொண்டாடுகிறார்கள் என கருதுகிறேன். 1973, பிப்ரவரி 9ம் தேதி வெளியானது, அரங்கேற்றம். விழாக்கள், கோடை விடுமுறை காலம் என்று எந்த சிறப்பும் இல்லாத நாளில் அரங்கேற்றம் வெளியாகி, வெற்றியும் பெற்றிருக்கிறது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில், கருப்பு வெள்ளையில் வெளியானது. கமல்ஹாசன், வாலிப பருவத்தை அடைந்தபோது நடித்த முதல் படம். ஆனாலும் இது கமல்ஹாசன் படம் அன்று.

 

லலிதா என்ற முதன்மைப் பாத்திரத்தில் நடித்த பிரமிளாதான், அரங்கேற்றத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடித்திருக்கிறார். டைட்டில் கார்டிலும் அவர் பெயர்தான் முதலில் போடப்படுகிறது. பிரமிளாவுக்கு ஜோடி என்கிற அளவில் மட்டுமே சிவகுமார் வந்து போகிறார்.

 

ஆச்சாரங்கள், வேத சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர் ராமு சாஸ்திரிகள் (எஸ்.வி.சுப்பையா). அவருடைய மனைவி எம்.என். ராஜம். இவர்களுடைய மூத்த மகள் பிரமிளா. இவருக்கு ஜெயசித்ரா, ஜெயசுதா, கமல்ஹாசன் உள்பட ஆறு தங்கை, தம்பிகள். எட்டணா இருந்தால் எல்லோருக்கும் வயிறார சோறு போட்டுவிடலாம் என்ற நிலையில், புரோகிதம் செய்வதுதான் முழுநேரத் தொழிலாக கொண்டிருக்கிறார் ராமு சாஸ்திரிகள். ஆனால், ரொம்பவே கண்டிப்பும் நேர்மையானவர் என்பதால் தர்ப்பணத்தின்போது தவறாக மந்திரம் சொல்பவர்கள் மீதும் எரிந்து விழுகிறார். தன்னை மதிக்காத யாரிடமும் காலணாகூட கைநீட்டி வாங்காத தன்மானக்காரர்.

ராமு சாஸ்திரிகள் போன்ற வளைந்து கொடுக்காத ஆள்கள் இப்போதும் பெரிதாக வாழ்ந்திட இயலாது. அவருக்கும் அப்படித்தான். இந்த நெருக்கடி போதாதென்று, கணவனை பிரிந்து, மகளுடன் ராமு சாஸ்திரிகளின் வீ-ட்டில் தஞ்சம் அடைகிறாள் அவரின் தங்கை (சுந்தரிபாய்).

 

சுமை கூடியதே தவிர, வருமானம் உயரவில்லை. வட்டாட்சியர் ஒருவரின் தந்தை இறந்ததற்கு தர்ப்பணம் செய்வதற்காக அழைக்கப்பட்டு இருப்பார் ராமு சாஸ்திரிகள். ஆனால், ஆட்சியரிடம் இருந்து அவசர அழைப்பு வரவே, தர்ப்பணம் செய்யாமலேயே நடையைக் கட்டி விடுகிறார் வட்டாட்சியர். அவரும், ஆச்சாரமான பிராமணர்தான் என்றாலும் ஆட்சியர் அழைப்பை மறுக்க முடியாததால், தர்ப்பணத்தை மறுத்து சென்று விடுகிறார்.

 

இதைக் கண்டிக்கும் ராமு சாஸ்திரிகளிடம், ‘உனக்கு வேண்டியது எட்டணா தட்சணைதானே? அதோ அங்கே வெச்சிருக்கேன்… எடுத்துண்டு போ’ என்று வட்டாட்சியர் கூற, தனக்கும், ஆச்சாரங்களுக்கும் இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, இனிமேல் புரோகிதம் செய்யமாட்டேன் என்று தர்ப்பை புல் கட்டுகளை வீசி எறிகிறார் ராமு சாஸ்திரிகள். விளைவு, ஒருவேளை கூழுக்கும் வழியில்லாமல் போகிறது. பசியால் வாடும் சிறுவன், வீடு வீடாக ராப்பிச்சை எடுக்கும் பெண்ணிடம் சோறு வாங்கி சாப்பிடும் நிலை. வேறு வழியின்றி, அப்பாவுக்குப் பிடிக்காதபோதும், குடும்ப பாரத்தை சுமக்கத் தயாராகிறாள் லலிதா.

 

பக்கத்து வீட்டு உடையார் (செந்தாமரை) மூலம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட, அவளுக்கு முதல் மாதமே 174 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. இப்போது மூன்று வேளை உணவுக்கு வழி பிறந்துவிட்டது. இந்நிலையில், தன் தம்பி தியாகு பியூசி தேர்ச்சி பெறுகிறான். எப்படியாவது என்னை நீதான் மருத்துவருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று லலிதாவிடம் தன் லட்சியத்தைக் கூற, அவளோ பணத்திற்கு என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்கிறாள்.

 

பியூசி தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. சிபாரிசு இருந்தால்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்று யாரோ சொல்ல, பக்கத்து வீட்டு உடையார் மூலம் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரை சந்திக்க சென்னைக்கு தனியாகச் செல்கிறாள் லலிதா. அந்த எம்எல்ஏவோ, தகுதி இருந்தால் போதும் எம்பிபிஎஸ் சீட் வீடு தேடி வரும். சிபாரிசு தேவையில்லை என்று சொல்கிறார். ஆனாலும், அவளை ஏதேச்சையாக சந்திக்கும் ஒரு மர்மப்பெண், தனக்குத் தெரிந்தவரிடம் சொல்லி உன் தம்பிக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வலை விரிக்க, அதை நம்பி வாயாலேயே வடை சுடும் ஒரு கயவனிடம் சிக்கிக் கொள்கிறாள். அங்கு அவளை அந்த கயவன் பலவந்தப்படுத்தி சூறையாடுகிறான். அப்போதுதான் லலிதாவின் கற்பு முதன்முதலில் முன்பின் தெரியாத ஆணிடம் அரங்கேற்றம் ஆகிறது.

 

இந்த கொடுமையில் இருந்து விடுபட்டு நாலைந்து நாள்கள் கழித்து வீடு திரும்பும் லலிதாவுக்கு, வீட்டில் உள்ள மொத்த உறவுகளும் அவளை கட்டியணைத்து கொண்டாடுகின்றன. தியாவுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்த தகவல் வந்து சேர்ந்து இருந்தது. அது, லலிதாவின் முயற்சியால்தான் கிடைத்ததாக குடும்பத்தினர் கருதி அவளை கொண்டாடி தீர்த்தனர். ஆனால், அது தியாகுவின் கல்வித் தகுதியால்தான் கிடைத்தது என்பது லலிதா மட்டுமே அறிந்த உண்மை.

 

இப்படிப்பட்ட சூழலில், லலிதாவுக்கு பதவி உயர்வுடன் ஹைதராபாத்துக்கு இடமாறுதலும் கிடைக்கிறது. இதன்மூலம் அவளுக்கு கூடுதலாக 250 ரூபாய் ஊதியம் கிடைக்கும் என்றாலும், அத்தொகை தியாகுவின் படிப்புக்கு போதாது என்பது அவளுக்கும் தெரியும். ஆனாலும், ஹைதராபாத்துக்கு செல்வதன் மூலம் குடும்பத்தின் வறுமையை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் இடமாறுதலை ஏற்றுக்கொள்கிறாள் லலிதா. தியாகுவும் மருத்துவப்படிப்புக்காக அவசரமாக 300 ரூபாய் தேவை என்று சொல்லி அனுப்புகிறான்.

 

அதனால் ஹைதராபாத் அலுவலகத்திற்குச் சென்ற முதல் நாளே, மேலாளரிடம் முன்பணமாக 300 ரூபாய் கேட்கிறாள் லலிதா. அவரோ, ‘என்னமா இது…வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே முன்பணம் கேட்கறியே…?’ என மறுக்க, அவள் தன் தம்பியின் கனவைச் சொல்லி, மன்றாடுகிறாள். உடனே மேலாளர், ‘சரிம்மா… சாயங்காலம் வீட்டிற்கு வந்து முன்பணம் வாங்கிக்கொள். என் மனைவியையும் அறிமுகம் செய்து வைத்ததுபோல் இருக்கும்,’ என்கிறார்.

 

எப்படியும் முன்பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மேலாளரின் வீட்டுக்குச் சென்ற லலிதாவை, அவரும் தன் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். அதன்பிறகு, அவளுக்கு தினம் தினம் அரங்கேற்றம்தான். பிறரின் விருப்பங்களுக்காகவே நித்தம் நித்தம் அந்த அரங்கேற்றத்தைச் செய்து முடிக்கிறாள். மாதந்தோறும் அவள் தவறாமல் பெற்றோருக்கு பணம் அனுப்பி வைக்கிறாள். ஒழுகும் வீட்டில், தனி அறைகூட இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த லலிதாவின் குடும்பம், சகல வசதிகளுடன் கூடிய பெரிய வீட்டிற்கு குடிபெயர்கிறது.

 

தான் பாடகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு தங்கையின் கனவை பூர்த்தி செய்கிறாள். மற்றொரு தங்கைக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் முடித்துக் கெ £டுக்கிறாள். தம்பி, ஆசைப்பட்டதுபோலவே மருத்துவர் ஆகிறான். உடன் பிறந்தவர்களின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய லலிதாவின் வாழ்க்கை இறுதியில் என்ன ஆனது? என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லி முடித்திருப்பார் கே.பி.

 

படங்களில் குறியீடுகள் வாயிலாக கருத்துகளை பார்வையாளர்களுக்கு கடத்துவது கே.பி., பாரதிராஜா போன்றோருக்கு கைவந்த கலை. கே.பி.யின் அந்த உத்தி, அரங்கேற்றத்திலும் பல இடங்களில் கட்டமைக்கப்பட்டு இருக்கும். தியாகுவின் எம்பிபிஎஸ் சீட் சிபாரிசுக்காக, சென்னைக்கு சென்றிருக்கும் லலிதாவிடம் ஒரு மர்மப்பெண், ஆசை வலை விரிப்பார். அந்தப்பெண் அவளை அழைத்துச்செல்ல வரும்போது, ஓர் அரங்கத்தில் லலிதாவின் தோழி ஒருத்தியின் நடனம் முதல்முறையாக அரங்கேற்றம் நடந்து கொண்டிருக்கும். அதே அரங்கத்தில் அடுத்தக் காட்சி, ‘டிராப்’ என்ற நாடகம் நடப்பதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருக்கும். மர்மப்பெண் வைத்த பொறியில் லலிதா சிக்கிக்கொண்டதாக டிராப் குறியீடு மூலம் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் சிகரம்.

 

கயவர்களால் விலைமகள் ஆகிவிட்ட லலிதாவின் ஒரு வெகுளித்தனமான ஒரு புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருக்கும். நாளடைவில் அந்த புகைப்படம் செல்லரித்துப் போயிருக்கும். அவளுடைய வாழ்க்கையும் சீரழிந்து செல்லரித்துப் போனதாக தீர்க்கமாக காட்சிமொழியாக்கி இருப்பார் கேபி. தங்கம் என்ற மனநலம் பாதித்த பெண் ஒருத்தி, காலியான டால்டா டப்பாவில் குச்சியால் அடித்துக்கொண்டே ஊர் முழுக்க சுற்றிக்கொண்டிருப்பாள். லலிதா, கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும்போது அந்த டால்டா டப்பா காலில் தட்டுப்படும்.

 

பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு வீடு திரும்புவாள் லலிதா. கிளைமாக்ஸ் காட்சியின்போது, ஒரு டால்டா டப்பாவில் இருந்து எண்ணெய்யை எடுத்து குத்துவிளக்கில் ஊற்றுவார் செந்தாமரை. அப்போதும் அந்த டால்டா டப்பா குறியீடாக காட்டப்படும். இறுதியில் லலிதாவின் முடிவு என்னவாகப் போகிறது என்பதை அந்த காலி டால்டா டப்பா மூலம் சொல்லாமல் சொல்லி இருப்பார் கேபி.

 

இப்படி குறியீடுகளால் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், பொட்டில் அறையும் வசனங்களுக்கும் இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். பட்டாளத்திற்குச் சென்றிருந்த தங்கவேலு, திடீரென்று ஹைதராபாத்துக்கு செல்ல நேரிடுகிறது. விலைமகள் வீட்டு முகவரியை விசாரித்துச் செல்லும் தங்கவேலு, அங்கே விலைமகளாக லலிதாவே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். தான் காதலித்த பெண், விலைமகள் வீட்டில் என்ன செய்கிறாள் என்ற பதற்றமும் அவனுள் தொற்றிக்கொள்கிறது.

 

அப்போது தங்கவேலு, ‘விலைமகள் வீடு எங்கே இருக்கிறது என்று ஒருவரிடம் விசாரித்தேன். அவர் தவறுதலாக நீ இருக்கும் வீட்டைக் காட்டிவிட்டான்…’ என்பான். அதற்குக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத லலிதா, ‘அவனும் ஒருவேளை இங்கே முன்னாடி வந்துட்டுப் போன கஸ்டமரா இருப்பான்…’ எனக்கூறுவாள். ‘நீயும் இப்போ அதுக்குத்தானே வந்திருக்க தங்கவேலு…?’ எனச்சொல்லும்போது, ஒட்டுமொத்த ஆண்களைப்பற்றிய ஒரு புரிதலுக்கு அவள் வந்துவிட்டதோடு, அவள் விரக்தியின் உச்சத்தில் இருப்பதையும் பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார் இயக்குநர்.

 

லலிதாவை சந்திக்கும் தங்கவேலு, ‘எதுவும் செய்யாமல்’ அங்கிருந்து கிளம்புகையில், பணத்தை எடுத்து வைத்துவிட்டுச் செல்வான். அப்போது லலிதா, ‘விலைபேச வந்துட்டு, எதையும் வாங்காம போனா, நானும் அதுக்கு காசு வாங்கிக்கறதில்ல…’ என்றுகூறி, அந்தப்பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறாள்.

 

தன் தங்கையின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக சொந்த ஊர் திரும்புகிறாள் லலிதா. தங்கையை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையை (சசிக்குமார்) நேரில் சந்திக்கும்போது இருவரின் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்.

 

சசிக்குமார், ஹைதராபாத் சென்றிருந்தபோது
விலைமாதுவான லலிதாவின் வீட்டுக்குச்
செல்கிறான். அவளுடன் கூடிக்களித்துவிட்டு
செல்லும்போது, திடீரென்று லலிதா,
‘ஆத்துக்குப் போனா தோப்பனார் திட்டுவாரோ…’
எனக்கேட்பாள். அதற்கு சசிக்குமார்,
‘நீ ஒரு பிராமணப் பொண்ணா…? ச்சீய்…
ஒரு பிராமணப் பொண்ணா இருந்துண்டு
வேசித்தொழில் பண்றது கேவலமா இல்ல…?’
என்றுகூறி, ஆத்திரத்தில் லலிதாவின்
கன்னத்தில் அறைவான். சற்றும் தாமதிக்காத லலிதா,
‘அவன் தோளைச் சுற்றியிருக்கும் பூணூலை
இழுத்துப் பிடித்தவாறு, ‘நீ ஒரு பிராமணனா
இருந்துண்டு இப்படி வேசிக்கிட்ட வந்து போறது
கேவலமாக இல்ல…? என்று கூறி, அவனுடைய
கன்னத்தில் அறைந்து பதிலடி கொடுப்பாள்.
அவள் கொடுத்த அந்த பளார் அறை,
ஏகபத்னி விரத வேடம் போடும் எல்லா
ஆண்களின் கன்னங்களையும் பழுக்க
வைத்திருக்கும் என்றே கருதுகிறேன்.

 

இப்படி படம் நெடுக கேபியின் முத்திரைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

ஒரு காட்சியில், தியாகுவுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்ததற்காகப் பாராட்டும் உறவுக்காரப்பெண் ஒருவர், ‘காசு பணம் இல்லாமலேயே சாதிச்சுட்டியேடி…’ என்று கூறுவார். அதற்கு லலிதா நமட்டு சிரிப்புடன், ‘காசு பணம் இல்லாமலும் சாதிச்சுக்க வழி இருக்கு…’ என தான் சோரம் போன வலியைச் சொல்ல முடியாமல் இப்படி வெளிப்ப டுத்துவாள். அவளின் மன வலி, பார்வையாளனையும் கனக்கச் செய்து விடுகிறது.

 

இன்னொரு காட்சியில், தன் தங்கைக்கு பாட்டு சொல்லிக்கொடுத்த குரு நீலு, லலிதாவை சந்திக்க வந்திருப்பார். அப்போது லலிதாவின் புடவை தலைப்பு சரிந்து விழுந்திருக்கும். நீலு, அவளையே வெறித்துப் பார்ப்பார். ஆனாலும் அதை கொஞ்சமும் உணராதவளாக லலிதா பேசிக்கொண்டே இருப்பாள். அவர் கிளம்பிச் சென்றதும், அங்கே ஓடி வரும் ஒரு சிறுமி, ‘என்ன அக்கா…. உன் சேலை தலைப்பு நழுவி கீழே விழுந்து கிடந்தது. அந்த ஆள் உன்னையே வெறிச்சு பார்த்துண்டு இருந்தார்… நீ கவனிக்கலையோ…’ எனக்கூற, அதே நமட்டு சிரிப்புடன், ‘எனக்கு ஆம்பளைகளே மரத்துப்போச்சுடி’ எனக்கூறுவாள்.

 

அப்போதும்கூட தன்னைச்சுற்றி யார் யார் இருக்கிறார் என்ற பிரக்ஞையே இல்லாமல்தான் விரக்தியில் இப்படி கூறுவாள் லலிதா. ஆனால் இந்த வசனம்தான் அவளிடம் எஞ்சியிருக்கும் அமைதியையும் சீர்குலைக்கும் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

 

லலிதாவின் மறுமொழியைக் எதேச்சையாக கேட்டுவிட்ட அவளது தாய், நள்ளிரவு நேரத்தில் ராமு சாஸ்திரிகளிடம், ‘ஏண்ணா… நம்ம லலிதா ஆம்பளைகளே மரத்துப்போச்சு’னு சொல்றாளே அப்படினா என்ன அர்த்தம்? எனக்கு ஏதோ பயமாக இருக்கு…’ என அங்கலாய்ப்பாள். அதற்கு ராமு சாஸ்திரிகள், அந்த அறை முழுவதும் தங்கையின் திருமண சீருக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திர பண்டங்களைக் காட்டி, ‘இதோ பாருடி… இதெல்லாம் யாரால வந்தது… எல்லாம் லலிதாவால கிடைச்சது. அவள் அம்பாள்டி… அதனாலதான் அவளுக்கு அம்பாள் பேரை வெச்சிருக்கேன். அவளைப்போய் தப்பா பேசிண்டு இருக்கியே அசடு…’ என்பார்.

 

”அவ ஆம்பளைகளே மரத்துப்போச்சுனு சொல்லலடி… அந்த பாட்டு வாத்தியார், ‘ஆம்பளைங்கறதையே மறந்து போச்சுனு’ சொல்லி இருக்கிறா… அத நீ தப்பா புரிஞ்சுண்டு தத்துப்பித்துனு உளறிண்டு இருக்கே,” என்று விளக்கம் கொடுப்பார். இந்த வசனத்தையும், காட்சியையும் நான் வேறு ஒரு கோணத்திலும் பார்க்கிறேன். ஒருவர் தனக்கு அனுகூலமாக இருக்கும்போது அவர் சொல்லும், செய்யும் எதையும் நாம் பொருட்படுத்துவதில்லை. குற்றம் காண்பதில்லை. ஆனால், தேவை தீர்ந்து போன பிறகு, அதே ஆள் அதே செயல்கள் நமக்கு உறுத்தலாக இருக்கின்றன. இங்கேயும் சுயநலமிக்க, சஞ்சலமாகும் மனிதர்களின் மன உணர்வுகளையே இந்த வசனத்தின் மூலம் காட்சிப்படுத்தி இருப்பதாக புரிந்து கொள்கிறேன்.

 

ராமு சாஸ்திரிகள் எப்படி ஆச்சாரமானவரோ, அதேபோல ஆச்சாரமானவர்தான் அந்த வட்டாட்சியரும். ஆனாலும், ஆட்சியரிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததால், இறந்த தந்தைக்கு தர்ப்பணம்கூட செய்யாமல் அலுவலகம் விரைகிறார். ராமு சாஸ்திரிகள் அதை கண்டித்துப் பேச, ‘ஓய் ராமு சாஸ்திரிகள்… 7 மணி வரைக்கும்தான் அப்பா…அதுக்கப்புறம் கலெக்டர்தான் ஓய் எனக்கு எல்லாம்,’ என்பார். இங்கே, வயிற்றுப்பாடு என்று வரும்போது சாஸ்திர சம்பிரதாயங்களும் இரண்டாம்பட்சமாகி விடுகிறது. இதுவும் மனித மனத்தின் முரண்தான்.

 

லலிதாவின் சம்பாத்தியத்தால்
அந்த குடும்பம் தலை நிமிர்ந்தது என்பதை
இன்னொரு காட்சியின் மூலமும்
விளக்கி இருப்பார் கேபி. தங்கையின்
திருமணத்தை நடத்தி வைப்பதற்காக
ஊருக்கு வரும் லலிதாவை எல்லோரும்
தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்
கொண்டிருக்க, அவளுடைய தாயார் மட்டும்
நேரில் பார்க்காமல் அறைக்குள்ளேயே கிடப்பார்.
அம்மாவைப் பார்க்கும் ஆவலுடன் உள்ளே
சென்று பார்த்தபோது, அவளுடைய தாய்
எட்டாவது குழந்தையை பெற்றெடுக்க
கர்ப்பமுற்றிருப்பாள்.

 

அந்தக் காட்சியின்போது, வீட்டு வாசலில், ‘ராப்பிச்சை தாயே…’ என்ற கூக்குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்திருப்பார் இயக்குநர் சிகரம். அதுதான் கே.பாலச்சந்தரின் ரசனைமிக்க படைப்பு. ‘ஏம்மா இந்த வாசலில் நீதான் தினமும் கோலம் போடுற. ஒருநாள்கூடவா இந்த வீட்டுக்கு எதிர் சுவரை நீ பார்த்தது இல்ல?’ எனக் கேட்பாள் லலிதா. அப்போது கேமரா அந்த சுவரில் நிலைக்குத்தி நிற்கும். அந்த சுவரில், ‘இரண்டுக்கு மேல் வேண்டாம். ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி தேவை’ என்று குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம் எழுதப்பட்டு இருக்கும். இந்தப்படமும் அதையே மையக்கருவாக பேசுகிறது.

 

எந்த அக்கா, தம்பியின் படிப்புக்காக தன்னையே இழந்தாளோ அவளையே, ”நீ ஒரு வேசி… ஒரு வேசியின் தம்பி என்று சொல்லவே வெட்கமாக இருக்கு. உடனடியாக வீட்டைவிட்டுப் போய்டு…” என்று தியாகு, லலிதா மீது காறி உமிழ்வான். ஏறக்குறைய, அங்கே தியாகுவின் தேவையும் தீர்ந்து போயிருந்தது. லலிதா உயிருடன் இருக்கும்போதே, அவள் இறந்துவிட்டதாக தர்ப்பணம் செய்வார் ராமு சாஸ்திரிகள். அப்போது தந்தையின் தேவைகளும் தீர்ந்து போயிருந்தன.

 

ஒரு காட்சியில், பட்டாளத்திற்குச் சென்ற தன் மகன் தங்கவேலு இறந்துவிட்டதாக எண்ணி, பக்கத்து வீட்டு உடையார் மகனுக்காக தர்ப்பணம் செய்து கொண்டிருப்பார். ஆனால் தங்கவேலு உயிருடன்தான் இருக்கிறான். அவனை பார்த்தேன்… பேசினேன்… என்று சொல்லி, தர்ப்பணம் செய்வதை தடுப்பாள் லலிதா. ஆனால், அதே லலிதாதான் உயிருடன் இருக்கும்போதே, அவள் விலைமாது என்பதை அறிந்த காரணத்தால், இறந்துவிட்டதாக கருதி ராமு சாஸ்திரிகள் தர்ப்பணம் செய்வார்.

 

இப்படி, மூன்றாம் நபருக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதியை தடுக்கும் லலிதா, அவளுக்கு எதிராக தர்ம நியாயங்கள் சாகடிக்கப்படும்போது அதை தடுக்க இயலாமல் கையறு நிலையில் நிற்கிறாள்.

 

அப்பா, அம்மா, அக்கா, தம்பி, தங்கை, நண்பன் என எந்த உறவுகளாக இருந்தாலும் ஒருவரின் தேவையைப் பொருத்தவரைதான் உறவுகளின் ஆயுளும் நீடிக்கிறது என்பதை லலிதாவின் வாழ்வும் அரங்கேற்றத்தின் மூலம் நமக்கு சொல்லிச் செல்கிறது.

 

கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணத்தில்,
‘ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது…’,
‘மூத்தவள் நீ கொடுத்த முன்னேற்றம்…’,
‘மாப்பிள்ளை ரகசியம் சொல்லட்டுமா…’
ஆகிய பாடல்கள், கதையை மேலும்
செழுமையாக்கி இருக்கின்றன. அந்தக்காலக்கட்டத்தில்,
எம்எஸ்விக்கு அடுத்து வி.குமார்தான்
கே.பி.க்கு ஆஸ்தான இசையமைப்பாளர்.
அவரும் கொஞ்சமும் குறை வைக்காமல்
பாடல்களை இப்போதும் ரசிக்கும்படி
தந்திருக்கிறார்.

 

மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.
பெண் மையப் பாத்திரங்களைப் பேசும்
கே.பி.யின் படங்கள் எல்லாமே
ஒன்றுக்கொன்று சங்கிலித்தொடர்போல
இருந்து வந்திருப்பதாகவே உணர்கிறேன்.
அரங்கேற்றம் லலிதாவின் நீட்சிதான்,
அவள் ஒரு தொடர்கதை நாயகியின்
பாத்திர வார்ப்பும். பின்னாளில் அவர்
இயக்கிய கல்கியின் பாத்திரமும்கூட,
இவ்விரு கதாநாயகிகளின் பாத்திரத்தன்மையுடன்
ஒன்றிப்போகிறது.

 

அதேபோல, இயக்குநர் சிகரம் தன் நாயகிகளிடம் எப்போதுமே ஏதோ ஒரு வித்தியாசமான சேட்டைகளையும், உடல்மொழிகளையும் புகுத்தி இருப்பார். அதற்கு நிகராக சாதாரண பாத்திரத்தில் வரும் இன்னொரு பெண் அல்லது ஆண் பாத்திரத்திற்கும் வித்தியாசமான குணாம்சங்களை படைத்திருப்பார். இந்த உத்தியும் அவரின் பல படங்களிலும் தொடர்ந்து வந்திருக்கிறது.

 

அரங்கேற்றம் படத்தில் லலிதா, உதடுகளை பிரிக்காமல் எள்ளலுடன் சிரிப்பதே வித்தியாசமான உடல்மொழியாக இருக்கும். அதே படத்தில் லலிதாவின் அத்தைப்பெண்ணாக வரும் பெண் பாத்திரம், எதற்கெடுத்தாலும் ‘அச்சச்சோ…’ என்று சொன்ன பிறகே பேசுவாள். பேச்சினூடே அடிக்கடி ‘படாபட்’ என்று சொல்லும் ‘படாபட்’ ஜெயலட்சுமி பாத்திரம் (அவள் ஒரு தொடர்கதை), உதடுகளாலேயே தந்தி அடிக்கும் குஷ்புவின் பாத்திரம் (ஜாதி மல்லி), கல்கி நாயகியும், மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வரும் ரேணுகா… இப்படி அவரின் பெண் பாத்திரங்களுக்குள் நெருக்கமான ஒத்த தன்மை இருக்கின்றன.

 

நல்ல நூல்கள், மறுவாசிப்பின்போதும்
நமக்கு புதுப்புது செய்திகளை கொடுப்பதுபோல,
அரங்கேற்றம் படத்தை இன்று மீண்டும்
பார்த்தபோதும், எத்தனை முற்போக்கான
கருத்துகளை 46 ஆண்டுகளுக்கு முன்பே
திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறாரே
என்று கேபியின் மீது பெருமை கொள்ளாமல்
இருக்க முடியவில்லை. சொல்லப்போனால்
இந்தப்படம் என்னை தூங்கவிடவில்லை.
அதனால்தான் நள்ளிரவைக் கடந்து
வைகறை பொழுதைத் தொட்டுவிட்ட
நேரத்திலும் இந்தக் கட்டுரையை
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

கே.பாலச்சந்தர், காலம் கடந்தும் பல படைப்பாளிகளுக்கு முன்னோட்டம் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதை ஒரு திரை ரசிகனாக என்னால் உணர முடிகிறது. இன்றைக்கு, ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்கள் கொண்டாடப்படுகின்றன என்றால், அவற்றின் மையக்கரு அரங்கேற்றம் படத்தில் இருந்தும் எடுக்கப்பட்டு இருக்கலாம். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஒரு நாள் ஒரு கூத்து’, ‘இறைவி’ படங்கள்கூட, அரங்கேற்றம் படத்தின் தாக்கத்தினாலும்கூட உருவாகி இருக்கலாம். அப்படங்களின் படைப்பாளிகள் அரங்கேற்றம் பார்க்காமலும்கூட இருந்திருக்கலாம்.

 

தங்கையின் கணவரிடம் லலிதா பேசும் ஒரு காட்சியில், ‘எங்கே நீங்க என் தங்கையை கல்யாணம் செய்யாமல் போய்டுவீங்களோனு பயந்தேன். ஆனால் இப்போ எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சு. போங்க… வீட்ல என் தங்கச்சி உங்களுக்காக காத்திட்டு இருக்கா… எதைத்தேடி காசு கொடுத்து என்கிட்ட வந்தீங்களோ…அதுதான் இப்போ வேத மந்திரங்கள் முழங்க கல்யாணம்கிற பேர்ல தயாராக இருக்கு…,’ எனக்கூறுவாள். இந்த தாக்கம், ‘ஒரு நாள் ஒரு கூத்து’ படத்திலும் இருக்கிறது.

 

ஆனால் இன்றைக்கும் திரைமொழியில்கூட காட்சிப்படுத்த தயங்கும் பல கருத்துகளை இயக்குநர் சிகரம், அரங்கேற்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார் என்ற வியப்பே என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறது. குடும்பத்திற்காக முள் கிரீடத்தையும், சிலுவையையும் சுமக்கும் லலிதாக்கள் நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள்.

 

– பேனாக்காரன்

வைகறை 3.45 மணி
9.5.2019.