Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. ‘தண்ணீர் தண்ணீர்’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம்.

இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும்.

நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருகிறார்.

கதை என்ன?:

ஆழ்துளைக் கிணறுக்காக தோண்டப்பட்ட 100 அடி ஆழமுள்ள குழியில் நான்கு வயது சிறுமி தவறி விழுந்து விடுகிறாள். அந்தச்சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாளா இல்லையா என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் சொல்ல வரும் சேதியே வேறு.

நயன்தாரா இந்தப்படத்தில் நேர்மையான மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்லக்கூடாது. ஆட்சியர் மதிவதனியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்ற அதிகார மையங்களின் உத்தரவுகளை மீறி ஆட்சியர் மதிவதனி ஒரு செயலைச் செய்கிறார்.

அதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அது குறித்த விசாரணைக்காக அழைக்கப்படுகிறார். எதனால் அதிகார வர்க்கத்தினரின் உத்தரவை மீறினார்? யாருக்காக மீறினார்? என்பதை விளக்குகிறார். அந்த விளக்கத்தினூடாக படத்தின் கதை பின்னோக்கிச் சொல்லப்படுகிறது. இவைதான் படத்தின் ஆரம்பக் காட்சிகள்.

எல்லா அரசு அதிகாரிகளுமே அலட்சியமானவர்களோ, கெட்டவர்களோ கிடையாது. மக்களின் பொதுப்புத்தியில் அப்படி ஓர் எண்ணம் இருக்கிறது. அதிகாரிகளில் சிலர் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நல்ல செயல்களைச் செய்வதாலும் அதிகார வர்க்கத்தின் கோபப்பார்வைக்கு ஆளாக நேரிடுகிறது என்பதையும் படம் சொல்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் ஒரு வறண்ட கிராமம்தான் கதைக்களம். எங்கு பார்த்தாலும் பொட்டல் காடு. குடிநீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டிய அவலம்.

எடுக்கிறார். குழந்தையை மீட்பதற்காக 100 அடி ஆழத்தில் பெரிய குழி தோண்டப்படுகிறது. அது செட்டா அல்லது நிஜமாகவே தோண்டினார்களா எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தி.

அந்தக் காட்சியில் ஆரம்பிக்கிறது பரபரப்பு. படம் முடியும் வரை விறுவிறுப்பு குறையவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி க்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை மீட்கப்படுவாளா? மாட்டாளா? என்ற பதற்றத்தை, திரையரங்கில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் மிக இயல்பாக கடத்தி விடுகிறார் இயக்குநர்.

பின்னணி இசை:

ஜிப்ரானின் இசை, பதற்றத்தைக் கூட்டுகிறது. ஆழ்துளைக் கிணற்று ஆழத்தில் சிறுமி மூச்சு விடும் ஒலியைக் கூட பார்வையாளனை உணர வைத்து விடுகிறார்.

இதுபோன்ற காட்சிகளில் ஒளிப்பதிவு செய்வது சவாலானதுதான். குழந்தை மீட்கப்படும் காட்சிகளை விறுவிறுப்பு குறையாமலும், பொட்டல் காட்டையும் அத்தனை நேர்த்தியுடன் படம் பிடித்திருக்கிது ஓம் பிரகாஷின் கேமரா. ரொம்பவே கவனம் ஈர்த்திருக்கிறார். ரூபனின் எடிட்டிங் படு நேர்த்தி.

கூர்மையான வசனங்கள்:

ஒடுக்கப்பட்ட மக்களின், புறக்கணிக்கப்பட்ட கிராமத்து மக்களின் வலியை, உள்ளக் கொதிப்பை படத்தின் வசனங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த இந்திய அரசாங்கத்தையுமேதான் இந்தப் படம், பல நிலைகளில் கேள்விக்கு உட்படுத்துகிறது. வசனங்களில் அத்தனை கூர்மை.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க ஒருவர் ஓடிச்சென்று நீளமான கயிறு ஒன்றை எடுத்து வருவார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் (பழனி பட்டாளம்), ”இந்த 2020 இந்தியாவுல ஆழ்துளைக் கிணத்துல விழுந்த குழந்தைய மீட்க, நீங்க கண்டுபிடிச்ச அரிய வகை சாதனம் இதுதானாடா…?” என்று போகிறபோக்கில் பகடி செய்துவிட்டுப் போவார்.

அது வெறுமனே பகடி அல்ல. கடலில் கொட்டிய எண்ணெய் படலத்தை அகற்ற நம்ம அமைச்சர்கள் பயன்படுத்தியதுகூட பக்கெட் டெக்னாலஜிதானே? எனக்கு அந்த நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது.

அந்த கிராமத்திற்கு ஒருவர் சொட்டு மருந்து போட வருவார். அப்போது ஒரு பெரியவர், ”தாகம் எடுக்காம இருக்கறதுக்கு எதுனா சொட்டு மருந்து இருந்தா ஊத்திட்டு போங்கய்யா” என்பார்.

தண்ணீர் அரசியல்:

இன்னோர் காட்சியில், ”அஞ்சாறு வருஷம் மழ இல்லாம இருந்தப்பக்கூட எங்கூர்ல தண்ணீ பஞ்சம் வந்ததில்ல. என்னிக்கு இந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல் வந்துச்சோ அப்போல இருந்துதான் தண்ணீ பஞ்சமே வந்துச்சு” என்று ஒரு வசனம் இடம்பெறும்.

தண்ணீர் அரசியலைப் பேசும் ஒரு குறியீடுதான் இந்த வசனம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் இன்றைய நிலை என்ன? அதற்குக் காரணம் யார்?. அதன் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியல்தான் காரணம். இப்படி நறுக்குத் தெறிக்கும் வசனங்களின் ஊடாக தண்ணீர் அரசியலைப் படம் நெடுக பேசுகிறது அறம். ஊடக அரசியலையும் விட்டு வைக்கவில்லை.

படத்தில் இன்னொரு ஹைலைட்டான வசனமும் உண்டு. ”800 கோடியில ராக்கெட் விடுறோம். குழிக்குள்ள விழுந்த குழந்தைய மீட்க கயிறத்தான நம்பி இருக்கோம்” என்ற வசனம்கூட, ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரயில் தேவையா? என்பதைக் கேளாமல் கேட்கிறது. காட்சிப் படிமங்கள், குறியீடுகளின் வழியாகவும் கிராமப் புறக்கணிப்பை பல இடங்களில் காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது.

செவ்வணக்கம்:

புதிய கதைக்களத்தை தேர்வு செய்ததற்காகவும், அதை திரைமொழியில் வணிக சமரசமின்றி சொன்ன துணிச்சலுக்காகவும் இயக்குநர் கோபி நயினாரை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. செவ்வணக்கம். நயன்தாரா மட்டுமே படத்தின் பலமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், படத்தை முன்னெடுத்துச் சொல்ல அவருடைய நட்சத்திர அந்தஸ்து ரொம்பவே உதவி இருக்கிறது.

சுனு லட்சுமி:

துணை கதாபாத்திரங்களாக வரும் சுனு லட்சுமி, அவருடைய கணவராக வரும் ராமச்சந்திரன் துரைராஜ் (நான் மகான் அல்ல, சதுரங்க வேட்டை உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர்), அவர்களின் மகளாக வரும் சிறுமி, காக்கா முட்டை சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து, வாழ்ந்திருக்கின்றனர். குறிப்பாக, குழந்தையை இழந்த பரிதவிப்பும், சோகமும் சுனு லட்சுமிக்கு இயல்பாக வருகிறது. விருதே கொடுக்கலாம். சிறுமியின் நடிப்பும் அற்புதம்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் அதுவும் இருக்கிறது. ஆனால் நல்லதொரு படைப்பின் நோக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதால் அதை விட்டு விடலாம்.

இந்தாண்டில் வெளிவந்த மிகச்சிறப்பான படம் ‘அறம்’ என்றால் மிகையில்லை. பல பிரிவுகளில் விருது பெறும் தகுதியும் உண்டு. இது படம் அல்ல. சமகால அரசியலை பகிரங்கமாகப் பேசும் பதிவு. சினிமா ரசிகர்கள் தவிர்க்கக்கூடாத படமும்கூட.

– வெண்திரையான்.