Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

-மகளிர் தின ஸ்பெஷல்-

”ஒருவருக்குச் சாத்தியமாவது
எல்லோருக்குமே சாத்தியமாகும்”
என்பதை மகாத்மா காந்தி,
வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார்.
காந்தியின் நம்பிக்கை,
யதார்த்த வாழ்விலும் பலருக்கு
சாத்தியமாகி இருக்கிறது
என்பதை என் கள அனுபவத்தில்
கண்டிருக்கிறேன்.

 

இதில் வேடிக்கை
என்னவென்றால்,
நான் சந்தித்த வெற்றிகரமான
குடும்பத் தலைவிகள் பலருக்கும்
காந்தியைப் பற்றிய பிரக்ஞை
எல்லாம் கிடையாது.
உழைக்கத் தயங்காத
எவர் ஒருவரையும்
இந்த பூமி நிராதரவாக
விட்டுவிடுவதே இல்லை.
சிலர் ஏணியை, கூரை மேல்
எறிகிறார்கள். சிலர், வானத்தை
நோக்கி வீசுகிறார்கள்.
ஆனால், ‘உள்ளத்தனையது உயர்வு’
என்பதுதான் நிஜம்.

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை
அருகே உள்ள கட்டெறும்பு காடு
பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34),
அவருடைய கணவர் கோவிந்தராஜூம்
கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள்.
இரண்டு மகள்கள்; ஒரு மகன் என
ஐந்து பேர் கொண்டது
இவர்களுடைய குடும்பம்.
பிள்ளைகள், பள்ளியில்
படிக்கின்றனர். வெள்ளியங்கிரி
களஞ்சியம் என்ற மகளிர்
குழுவில் அமுதா,
நீண்ட கால உறுப்பினர்.

 

”எனக்கு கல்யாணம்
ஆன புதுசுங்க. அப்போது
என் கணவர் தறிப்பட்டறையில
வேலை செய்துக்கிட்டு இருந்தாரு.
அவருக்கு அப்பலாம் வாரத்துக்கு
ஆயிரம் ரூபாய் கூலி கிடைக்கும்.
அதை வெச்சிக்கிட்டு குடும்பத்த
நடத்தறதே பெரும்பாடாக இருந்தது.
செலவுகளை சமாளிக்க
கந்துவட்டிக்கு சிலர்கிட்ட
கடன் கேட்டோம். யாருமே
கடன் கொடுக்க முன்வரல.
இவங்க திருப்பி கடனை
கட்டுவாங்களானு பலருக்கும்
நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
பெரிதாக மக்களுடன் எங்களுக்கு
அறிமுகம் இல்லாத
காலக்கட்டம் அது. அப்படியான
சூழ்நிலையிலதான் வெள்ளியங்கிரி
களஞ்சியம் குழுவில் சேர்ந்தேன்.

 

வீட்டுக்காரருக்கு
தறித்தொழிலில் நல்ல அனுபவம்
இருந்தது. நாமளே ஏன் தறி
மெஷின் ஒண்ணு வாங்கி
ஓட்டக்கூடாதுனு யோசிச்சோம்.
களஞ்சியம் குழு மூலமாக
50 ஆயிரம் கடன் பெற்றோம்.
அதை வைத்து முதலில்
செகண்ட் ஹேண்டில்
ஒரு தறி மெஷின்
வாங்கினோம்.

 

ஆரம்பத்துல நாங்கள்
நெய்த சேலை ரகத்துக்கு
கூலி அதிகமாக கிடைக்காது.
அதனால சுத்துப்பட்டுல
பிரபலமாக இருக்கற இளம்பிள்ளை
ரக சேலைகளை நெய்ய
ஆரம்பிச்சோம். கானா பட்டு
ரகம்னு சொல்லுவோம்.

இந்த ரக சேலையை
நெய்வதற்காக மறுபடியும்
ஒரு தறி மெஷின் வாங்கினோம்.
அப்பவும் களஞ்சியம்தான்
70 ஆயிரம் ரூபாய் கடன்
கொடுத்து உதவுச்சு”
என்றார் அமுதா.

 

இங்குதான் அமுதா,
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
அடித்திருக்கிறார். தறி
மெஷினுக்காக 35 ஆயிரம்
ரூபாய் செலவழித்தது போக
மீதமுள்ள 35 ஆயிரம் ரூபாயில்,
அப்போது 11.50 சென்ட் நிலத்தை
வாங்கியிருக்கிறார். இதெல்லாமே
அமுதாவின் ஐடியாதான் என்கிறார்
அவருடைய கணவர்.

 

மீண்டும் ஒருமுறை களஞ்சியம்
குழு மூலமாக ஒன்றரை லட்சம்
ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்.
கையில் இருந்த சேமிப்பு,
சீட்டுத் திட்டங்கள் மூலம்
சேர்த்த பணம் எல்லாவற்றையும்
சேர்த்து மீண்டும் இரண்டு
விசைத்தறி இயந்திரங்களை
வாங்கியிருக்கிறார்கள்.

தற்போது அவர்களிடம்
நான்கு விசைத்தறி இயந்திரங்கள்
உள்ளன. ஒரு விசைத்தறி
கூலித் தொழிலாளியாக
வாரம் 1000 ரூபாய் மட்டுமே
சம்பாதித்து வந்தார், அவருடைய
கணவர், தற்போது இருவரும்
சேர்ந்து மாதம் 50 ஆயிரம்
ரூபாய் சம்பாதிப்பதாகச்
சொல்கிறார் அமுதா.

 

நான்கு தறிகள் மூலம்
வாரத்திற்கு சராசரியாக
50 சேலைகள் நெய்து விடுகிறார்கள்.
இளம்பிள்ளை ரக சேலை
ஒன்றுக்கு, 250 ரூபாய் கூலி
கிடைக்கிறதாம். அதன்படி,
அமுதா குடும்பத்தினர் வாரம்
12500 ரூபாய் வீதம் மாதம்
50 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர்.

 

”படிப்பறிவே இல்லாத எனக்கு,
களஞ்சியம்தான் கையெழுத்துப்
போட கத்துக்கொடுத்தது.
வங்கியில் எனக்கும் கணக்கு
ஆரம்பித்துக் கொடுத்தது.
இந்த ஊருக்குள்ள எங்களையும்
மரியாதைக்குரிய மனுஷங்களா
உருவாக்கி இருக்கிறது, களஞ்சியம்,”
என நெக்குருகினார் அமுதா.

 

– பேனாக்காரன்